Sunday 29 January 2017

மஹாத்மாவிற்கு நினைவஞ்சலி!!

இரண்டு வருடங்களுக்கு முன் பூனா சென்ற போது நாங்கள் பார்க்க விரும்பிய இடம் மஹாத்மா காந்தியின் சமாதி. இணையத்தைப் பார்த்து, அது இருக்குமிடம் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு தான் அங்கே சென்றேன். மஹாத்மாவின் சமாதி ஆகா கான் அரண்மணையுள்ளே தோட்டத்து மூலையில் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதை விசாரித்து கண்டு பிடிக்க மிகவும் சிரமப்பட்டோமென்று தான் சொல்ல வேன்டும். பூனா வாசிகளுக்கே, அருகில் கடை போட்டிருப்பவர்களுக்கே சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கும் என் கணவருக்கும் ஹிந்தி நன்றாகப் பேசத்தெரியுமென்பதால் டாக்ஸி ஓட்டுனர் ஒரு வழியாக அங்கே கொண்டு போய் விட்டார்.



ஆகா கான் அரண்மனை

ஆகா கான் அரண்மனை பூனா நகர் சாலையில் ஏர்வாடாவில் அமைந்திருக்கிறது. 1892ல் பூனாவின் சுல்தான் மூன்றாம் முகமதுஷா ஆகா கான் அவர்களால் கட்டப்பட்டது. அருகேயுள்ள மக்கள் அப்போதைய பஞ்சத்தால் கஷ்டப்பட, அவர்களுக்காக சுல்தானால் கட்டப்பட்டது இது. பின்னாளில் இந்த அரண்மனை சரித்திர முக்கியத்துவம் பெற்றது.

இவரின் கொள்ளுப்பேரனான இமாம் சுல்தான் ஷா கரிம் நான்காவது ஆகா கான் ஆக பதவியேற்ற சில வருடங்களில் இந்த அரண்மனையையும் அதைச்சுற்றியுள்ள நிலங்களையும் 1969ம் வருடம் இந்திய தேசத்திற்கே ஒரு நினைவுப்பரிசாக அளித்து விட்டார். 
இந்திய சுதந்திரப்போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், இங்கே தான் மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய், சரோஜினி நாயுடு முதலியோர் குவிட் இந்தியா இயக்கத்திற்குப்பின் 1942லிருந்து 1944ம் வருடம் மே மாதம் வரை சிறை வைக்கப்பட்டார்கள். அன்னை கஸ்தூரி பாயும் மகாதேவ் தேசாயும் இங்கே தான் இறந்தார்கள்.

மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய், மகாதேவ் தேசாய் சமாதிகள் அரண்மனைக்கு வெளியே தோட்டத்தின் ஒரு மூலையில் முலா நதி அருகே அமைந்துள்ளன.



மஹாதேவ் தேசாய் அவர்களின் சமாதி

கஸ்தூரிபாய் காந்தி அவர்களது சமாதி

மஹாத்மா காந்தி அவர்களின் நினைவிடம்

2003ல்  இதை ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1969ம் வருடம் நான்காம் ஆகா கான் அவர்களால் காந்திக்கும் அவரின் தத்துவங்களுக்கும் தான் காட்டும் மரியாதையாக இதை இந்திய மக்களுக்காக வழங்கினார். 19 ஏக்கரில் அமைந்துள்ள‌ இந்த இடம் பசுமை நிறைந்த புல்வெளியாலும் தோட்டங்களாலும் சூழப்பட்டிருக்கிறது. அரண்மனை 7 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கிறது.








இந்த அரண்மனையில் தேசப்பிதா மகாத்மா காந்தி, கஸ்தூரி பாய் இருவரது புகைப்படங்கள், ஓவியங்கள் சுதந்திரப்போராட்ட குறிப்புகள், மகாதேவ் தேசாயின் வரலாறு பற்றிய குறிப்புகள், புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

















எல்லாம் பார்த்து முடிந்து சில நிமிடங்கள் அங்கே இருந்த படியில் அமர்ந்திருந்த போது மனம் மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தேன்.

சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி சிறு வயதில் நிறைய படித்திருக்கிறோம். ஏன், அந்த வயதில் மஹாத்மா ஒரு ஹீரோவாகக்கூட பள்ளி நினைவுகளில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அந்தப் போராட்டங்களில் ஒரு பகுதியாக நடந்த நிகழ்வுகளை இந்த அரண்மணையில் புகைப்படங்களாகவும் செய்தி குறிப்புகளாகவும் அறிந்த போது மனம் பிரமித்துப்போனது! தன் இளமை, வாழ்க்கை, ஆசாபாசங்கள் அனைத்தையும் தூர எறிந்து விட்டு மக்களுக்காக, தேசத்திற்காக போராட எத்தனை மன வலிமை இருந்திருக்க வேண்டும்? அத்த‌னை போராட்டங்கள், தியாகங்கள், உழைப்பிற்கான பலன் இன்று இருக்கிறதா? சுதந்திரத்திற்காக இப்படியெல்லாம் போராடியவர்களை சுதந்திர இந்தியாவில் அரசியல்வாதிகள் நினைவு கூர்கிறார்களா?

மன பாரத்துடன் மஹாத்மா காந்திக்கு நினைவஞ்சலிகளை சமர்ப்பித்து வெளியே வந்த போது உலகம் வெளியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது!

Monday 23 January 2017

வீடு!!

வீடு என்பது எல்லோருக்குமே ஒரு வானவில் கனவு. சிலருக்கு மட்டுமே அந்தக்கனவு வெகு சுலபமாக நிறைவேறுகிறது. நிறைய பேருக்கு அது ஒரு வலி. ஒவ்வொரு செங்கல்லும் ஒரு வலி நிறைந்த கதையைச் சொல்லும். ஒரு போராட்டத்தைச் சொல்லும். ஒரு குதூகலமான நாள், ஒரு மனத்துன்பத்தைக்கொடுத்த நாள், அருமைக்குழந்தை பிறந்த நாள், அன்பிற்கினியவர்கள் இறந்த நாட்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் நினைவுகள் வாழ்கின்றன. சொல்லில் அடக்க முடியாத உணர்வுகள் வாழ்கின்றன.

இன்றைய தலைமுறைக்கு சொந்த வீடென்பது அவ்வளவு பெரிய கஷ்டமில்லை. ஏனெனில் பெரும்பாலான இளந்தலைமுறைக்கு குடும்பத்தைச் சார்ந்த கடமைகளோ அல்லது தோள்களில் அழுத்தும் பாரங்களோ இல்லை. அவரவர் குடும்பத்தை மட்டுமே அவரவர்க‌ள் பார்க்க‌ வேண்டும்.   அதனால் அவரவர் பொருளாதாரத்தை ப்பொறுத்து சிறிய வீடோ அல்லது மாளிகையோ இவர்களுக்கு வெகு சீக்கிரமே சாத்தியமாகிறது. ஆனால் இதற்கு முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறைகளுக்கு ஒரு வீடு என்பது அவ்வளவு சுலபமாக கிடைத்ததில்லை. கடமைகள், ஆசாபாசங்களைக் கடந்த பிறகு ஒரு சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது எத்தனை வலிகள்! எத்தனை எத்தனை நிராசைகள்! எழுத்தாளர் திருமதி வித்யா சுப்ரமணியம் அந்த வலியை அப்படியே உள்வாங்கி தன் கூர்மையான எழுத்தில் அருமையாய் வெளிப்படுத்தியிருக்கிறார் தன் 'வீடு' என்ற சிறுகதையில்!



இவரின் புதினங்களில், சிறுகதைகளில் பெரும்பாலும் எல்லாவற்றையுமே படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். ஆனால் இது எப்படியோ விட்டுப்போன சிறுகதை! வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெகுவாக என்னைப்பாதிக்க ஆரம்பித்தது இந்தக்கதை!

பார்த்துப்பார்த்து கட்டிய வீட்டை ஏதேனும் ஒரு முக்கிய காரணத்தினால் விற்க நேரும்போதோ அல்லது நிரந்தரமாக பிரிய நேரும்போதோ ஒரு சிலர் திரும்பிக்கூட பார்க்காமல் மன பாரத்துடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்புறம் அந்த திசையில் கூட செல்வதில்லை. செல்ல மனம் வருவதில்லை. மனதின் ஆழத்தில் அந்த இழப்பின் வலி எங்கேயோ ஒளிந்து கொன்டு இம்சிப்பதன் வெளிப்பாடு அது. இன்னும் சிலர் பல வருடங்கள் கழித்து சென்று பார்ப்பதுண்டு. அப்படி பார்க்கையில் கடந்து சென்ற அந்த வீட்டின் நினைவுகளில் நிமிடங்களில் ஒரு சில கணங்கள் வாழ்ந்து திரும்புவதுண்டு.

இந்த சிறுகதையின் நாயகரும் அப்படிப்பட்ட ஒரு பெரியவர் தான்! இடையில் பல கைகள் மாறிப்போன தன் விட்டை முதலில் வெளியே சற்று தூரத்தில் நின்று அடிக்கடி பார்த்துக்கொண்டிருப்பதை கவ‌னித்த உரிமையாளர் அவரிடம் விசாரிக்க, இவர் தான் எட்டு வருடங்க‌ளுக்கு முன் விற்ற வீடு அது என்று சொல்கிறார். வீட்டுக்காரர் உள்ளே அழைத்ததும் உள்ளே நுழைகிறார். உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் வாசற்படியைத்தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்கிறார். ஏதோ கோவிலுக்குள் நுழைவது போன்ற பரவசம் அவர் விழிகளில் தெரிகிறது. 



உள்ளே வந்தவரின் விழிகள் மூலை முடுக்கு விடாமல் சுற்றி சுற்றி பார்க்கிற‌து. கரங்கள் சில்லிட்ட சுவர்களைத் தடவித் தடவி பார்க்கின்றன. 
மனதில் பொங்கிய உணர்வுகள் அவரிடமிருந்து அப்படியே வெளி வந்து விழுகின்றன.

" நானும் அவளும் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இது. அஸ்திவாரம் போட்டதே அவளுடைய தாலியை வெச்சுத்தான். அதை மீட்க பதினஞ்சு வருஷமாச்சு. அது வரை ஒரு மஞ்சக்கயிறு தான் அவள் கழுத்தில்!

இந்த வாசக்கால் அசல் பர்மா தேக்கு. இதற்கு அவளின் கை வளையல் போனது. இந்த வாசல் திண்ணை இருக்கே, இது கூட அவளின் யோசனை தான்.

'பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு வருகிறவர்கள், வயசானவர்கள், குழந்தைகள் அசதியாய் படுத்துறங்க வசதியாக இருக்கும், கூடவே ஒரு தண்ணீர்ப்பானையும் வெச்சிடலாம். கூடுதல் புண்ணியம்' என்று சொன்னாள் அவள்.



பெரியவர் நடுங்கும் கைகளால் அந்தத்திண்ணையைத் தடவிக்கொடுக்கிறார்.

கடைசியில் இந்தத் திண்ணையில் தான் இறந்து போன அவள் உடல் கிடந்தது!"

பெரியவரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிகிறது. தன்னை சமாளித்துக்கொன்டு மெதுவாய் புன்னகைக்கிறார்.

அவர் மெதுமெதுவாய் கண்ணீர் கசிய தொடர்ந்து சொல்கையில் அவரின் கதை கண்ணெதிரே விரிந்தது.

எப்போதெல்லாம் பணம் கிடைத்ததோ அப்போதெல்லாம் தவணை முறையில் அவர்கள் அந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். வெறும் செங்கல் சுவர் எழுப்பிய நிலையிலும் அதில் வசிக்க நேர்ந்ததில் அவர்கள் மனத்துன்பம் அடைந்ததில்லை. வீடு சிறுகச் சிறுக வளர்ந்த போது மூன்று குழந்தைகளும் வளர்ந்தார்கள். மூன்று மகன்களும் நன்கு படித்து, நல்ல வேலைகள் கிடைத்து, மூத்த மகனுக்கு திருமணமும் ஆகியிருந்த நிலையில் அவர் மனைவிக்கு உடல்நலம் திடீரென பழுதாக, சோதனைகள் செய்ததில் இரத்தப்புற்று எனத்தெரிந்து கதிகலங்கிப்போயிருக்கிறார் அவர். மகன்களிடம் பணம் கேட்டும் அவர்கள் கை விரிக்க, கடைசியில் பணம் வேண்டுமானால் அந்த வீட்டைப்பிரித்துக்கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் அந்த வீட்டை மகன்களிடமே விற்று ஒவ்வொரு மகனும் ஆளுக்கு எண்ணி எண்ணி அவரிடம்  2 லட்சம் தந்து கணக்கை முடிக்கும்போது அவரின் மனைவிக்கு நோய் முற்றிப்போயிருந்தது. சிகிச்சைக்கு பலன் இல்லாமல் அவள் இறந்தே போனாள்.

மேலே அவர் சொல்கிறார்..

" வியாதியுடன் இற‌ந்ததால் பிணம் உள்ளே வரக்கூடாது என்று மருமகள் ஆர்ப்பாட்டம் பண்ணியதால் கடைசியில் என் மனைவிக்கு கிடைத்தது இந்தத் திண்ணை தான். அதற்கப்புறம் இந்த வீட்டில் நுழைய எனக்குப்பிடிக்காமல் மிச்சமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் ஊராய் சுற்றினேன். கோவில் கோவிலாய் போனேன். ஏழு வருஷங்களுக்குப்பிறகு திரும்ப வந்த போது பசங்க மூன்று பேரும் ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டு வீட்டை வித்துட்டாங்கன்னு தெரிஞ்சது. என் மனைவி உயிரையே விதையாக்கி எழுப்பின இந்த வீடு அவர்களுக்கு வெறும் செங்கல்லாகத்தான் தெரிஞ்சிருக்கு. ஆனா எனக்கு இது கோயில் மாதிரி. இது வெறும் செங்கல் கட்டிடம் கிடையாது. இதற்கு ஜீவன் இருக்கு. துடிப்பு இருக்கு. நீங்க நல்லவர். அதனால்தான் இந்த ஜீவன் உங்ககிட்ட வந்து சேர்ந்திருக்கு. என் மனைவி இந்த மண்ணில்தான் உறைஞ்சு போயிருக்கிறாள். நீங்க நல்லா இருப்பீங்க. உங்க பசங்களுக்கு வீடுன்னா என்னன்னு இப்போதிலிருந்தே சொல்லிக்கொடுங்க. இதன் மூச்சுத் துடிப்பை கேட்பதற்கு சொல்லிக்கொடுங்க. கடைசிவரை இந்த வீட்டில் நீங்க சந்தோஷமாயிருந்தால்தான் இந்த வீடும் சந்தோஷமாயிருக்குமென்று அவங்க புரிஞ்சிக்கணுமின்னு நான் வாழ்த்தறேன்"

அவர் விடைபெற்று எழுந்த பின் தயக்கத்துடன் வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.
" நான் இன்றிரவு மட்டும் இந்தத் திண்ணையில் படுத்துக்கட்டுமா?"

" நீங்கள் உள்ளேயே வந்து படுங்க"

" இல்லை. இந்தத் திண்ணையிலேயே படுத்துக்கொள்கிறேன்"

அவர் மேல்துண்டை விரித்து திண்ணையில் படுத்தார்.
காலையில் வீட்டுக்காரர் வந்து பார்த்தபோது திண்ணை காலியாக இருந்தது. அதன் மீது 'நன்றி' என்று எழுதி சில மலர்களை வைத்து விட்டு அவர் போயிருந்தார். எங்கே போனாரோ?

அந்த வீடு விசும்புவது போலிருந்தது அவருக்கு. 

  

Monday 16 January 2017

முத்துக்குவியல்-44!!!

மருத்துவ முத்து:

தேள் கடிக்கு உடனடி மருத்துவம்: 


கொட்டிய‌ இடத்திற்கு சற்று மேலாக முதலில் ஒரு கயிறால் கட்டு போட வேண்டும். பின் ஒன்பது மிளகுகளை ஒரு வெற்றிலையில் வைத்து மடித்து அதை நன்றாக மென்று விழுங்கச்செய்ய வேண்டும். பின் கால் தம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்து, அதன்பின் முற்றிய தேங்காய் ஒன்றை எடுத்து அதில் அரை மூடி அளவிற்கு கீற்று போட்டு அவற்றை மெதுமெதுவாகத் தின்று சக்கையை துப்ப செய்ய வேண்டும். அரை மூடி தேங்காய்த்துண்டுகளை கடித்து தின்பதற்குள் தேள் கொட்டிய கடுப்பும் விஷமும் படிப்படியாக தணியும். ஒன்றரை மணி நேரத்தில் வலியே இல்லாமல் போய் விடும். இது தவிர வேறு எந்த மருந்து கொடுத்தாலும் வலி 24 மணி நேரம் இருக்கும்.

ரசித்த பழம்பாடல்: [ விவேக சிந்தாமணியிலிருந்து]

ஆபத்துக்கு உதவா பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தை தீராத்தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயனில்லை ஏழும் தானே!

ரசித்த முத்து?

'பைரவா' உலகெங்கும் 12ந்தேதி திரையிடப்படிருந்தாலும் 11ந்தேதியே WORLD PREMIER SHOW -ஆக துபாயில் முதல் ஷோவாக பார்க்க நேர்ந்தது. விஜய் படம் என்பதால் வாசலிலேயே மேள தாளங்கள், செண்டி மேளம் எல்லாம் இசைத்து வரவேற்றார்கள். ஒரு பெரிய கேக் வெட்டி கொண்டாடி, ' இது தான் உலகிலேயே முதல் ஷோ. அதனால் யாரும் வீடியோ அல்லது புகைப்படம் பிடிக்க வேண்டாம். அதை மீறுபவர்களின் காமிரா, மொபைல் ஃபோன் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்புடன் படம் ஆரம்பிக்கப்பட்டது.



வழக்கம்போல மசாலா படம் தான் என்றாலும் வித்தியாசமான கதைக்களன் அதுவும் இன்று தனியார் கல்லூரிகள் செய்யும் அக்கிரமங்களை புட்டு புட்டு வைக்கிறது. பொது மக்களைத் துன்புறுத்தி கொள்ளையடித்து பெரிய ஆளாகி, முதவருடன் புகைப்படம் பிடித்துக்கொண்டு வெளியில் புகழ்பெற்ற மனிதனாகவும் பின்னணியில் நிழல் மனிதனாகவும் இருக்கும் வில்லனை விஜய் ஒழித்துக்கட்டும் கதை. அதை விஜய் எப்போதும் போல அடிதடி, காதல், காமெடி, ஆவேசங்களுடன் நிகழ்த்திக்காட்டுகிறார். மிகச்சில‌ இடங்களில் மட்டும் விஜய் அருமையாக நடிக்கிறார். வசனங்கள் சில இடங்களில் மட்டும் மின்னுகிறது. மற்ற எல்லா நேரமும் விஜய் சண்டை போடுகிறார். பறந்து பறந்து கடைசி வரை சண்டை போடுகிரார்.  விறுவிறுப்பாக இருக்க வேண்டிய சமயங்களில் நமக்கு அலுப்பு தட்டுகிற‌து.




 சந்தோஷ் நாராயணனின் இசை ஒரே இரைச்சல்! இப்போது எல்லாம் மென்மையான பாடல்களே வருவதில்லை. ஆகவே அருமையான இசையை இந்தப்படத்தில் தேட வேண்டிய அவசியமில்லை! ஒரே ஆச்சரியம், இந்த படத்தில் கதாநாயகிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இளமையான கீர்த்தி சுரேஷ் நன்றாகவே நடிக்கிறார். மிக நீநீநீளமான சண்டைக்காட்சிகள் அலுப்பைத்தராது என்ற உறுதி இருந்தால் ஒரு முறை இந்தப்படத்தைப்பார்க்கலாம்!

ஆச்சரிய முத்து:



மக்கள் எது எதற்கெல்லாம்தான் ஆசைப்பட வேன்டும் என்ற நியதியே இல்லாமல் போய் விட்டது. தெலுங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள சங்கரெட்டி என்னுமிடத்திலுள்ள 220 வயதான சிறைச்சாலை தற்போது மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. அதோடல்லாமல் சிறைச்சாலை எப்படியிருக்கும் என்பதை உணர விரும்புபவர்கள் 500 ரூபாய் கட்டி ஒரு நாள் அங்கே தங்கிக் கொள்ளலாம். கதர் சீருடை கொடுத்து, கூடவே ஒரு பாய், போர்வை, எவர்சில்வ‌ர் தட்டு, தம்ளர், குளியல் மக் , சோப்பு கொடுத்து 24 மணி நேரம் நம்மை ஜெயிலில் அடைத்து வைப்பார்கள். உணவு பக்கத்திலுள்ள‌ மாவட்ட சிறைச்சாலையிலிருந்து கொன்டு வரப்படும். சிறையை 24 மணி நேரம் கழித்து நாமே சுத்தம் செய்து கொடுத்து விட்டு நம் காஸ்ட்யூமைக்கலைத்து வீட்டுக்கு செல்லலாம்! இந்த அனுபத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கிறதாம்!

Friday 13 January 2017

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!



        அன்பு சகோதர, சகோதரியர்      அனைவருக்கும்     அன்பிற்கினிய        பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!


Wednesday 4 January 2017

அன்பு மகளே!!!



என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு கடிதம் பற்றி உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாய் புகுந்த வீடு சென்றிருக்கும் புதுமணப்பெண் அங்கு ஏதேனும் காரணங்களால் மனக்கிலேசமோ அல்லது வேதனையோ அல்லது குழப்பமோ அடைந்தால் அதைத் தன்னைப்பெற்றவர்களிடம் அந்தப்பெண் சொல்லும்போது பொதுவாய் பெற்றோர் அதற்கு 'நான் பார்த்துக்கொள்கிறேன் ' என்றோ 'புகுந்த வீட்டில் நீதான் எல்லாவற்றையும் அனுசரித்து நடந்து கொள்ள வேன்டும்' என்றோ சொல்லுவார்கள். இப்போதெல்லாம் நடப்பதே வேறு! நிறைய பெற்றோர் ' அங்கு உனக்கு ஒத்துக்கொள்ளவில்லையா? பேசாமல் புறப்பட்டு வந்து விடு' என்று சொல்வதைத்தான் நான் பார்க்கிறேன். அல்லது ' புருஷனை எப்படியாவது கைக்குள் போட்டுக்கொள். மற்றவர்களை நாம் வழிக்கு கொண்டு வந்து விடலாம்' என்ற வசனத்தையும் கேட்டிருக்கிறேன். இல்லயென்றால் ' மாப்பிள்ளையை எப்படியாவது நம் பக்கம் இழுத்து விடலாம். பொறுமையாக இரு' என்ற உபதேசத்தையும் கேட்டிருக்கிறேன்.   ஆனால் திருமணமான புதிதில் மனம் சரியில்லாமல் ஆதங்கத்துடன் மனம் புழுங்கியிருந்த தன் மகளுக்கு ஒரு அன்பான தந்தை எழுதியிருந்த இது போன்ற கடிதத்தை நான் இது வரை படித்ததில்லை.  ஒரு மாத இதழில் இதைப் படித்த போது மனம் சிலிர்த்துப்போனேன். அந்தக் கடிதத்தை அப்படியே எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

'கவலையை சுட்டெறி. அது மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக்குடிக்கக்கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே' என்கிறது கீதை.

கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையை சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூண்டாய், புழுவாய் மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜன்மம் . அதுவும் கூன், குருடு, முடமாய்ப்பிறக்காமல் முழுமையாகப் பிறந்தது பேரதிர்ஷ்டம். 'அதை வீணாக்கலாமா?' என்று கேட்பார் ஆதி சங்கரர். 

சந்தோஷமாக, முக மலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப்பார்க்கிரவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும். 

எண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத் தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல பத்து நூறு எண்ணங்களை அடுக்க்டுக்காய் தோற்றுவித்து விட்டுத்தான் போகும். ' நான் தோல்வி அடந்து விட்டேன்', 'நான் சோர்வாக இருக்கிறேன்', 'எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது' என்று ஒரு முறை, ஒரே ஒரு முறை நினைத்தாலும்கூட, அது குளத்தில் எறிந்த கல்லினால் எழும் வட்டங்களைப்ப்போல் பெரிதாகி பெரிதாகி, ஆளையே அழித்து விடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக்கொள்ள‌லாகாது?

'நான் நல்லவள்' என்று நினை. ' நான் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று எண்ணு. ' எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உன்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்' என்று ஒருமுறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி அசைக்க முடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும். 

வாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத்தகுந்தது. தெய்வீகமானது. அது ஒரு வீணை. அதை அன்புடன் வாசித்து இன்னிசை எழுப்பு. 

அது உன் கையில் தான் இருக்கிறது!

ஒரு அருமையான தந்தையின் அற்புதமான அறிவுரை! இதை விடவும் ஒரு பெரிய சொத்து அந்தப்பெண்ணுக்குத் தேவையில்லை! இப்படியெல்லாம் தற்காலத்துப்பெற்றோர் தங்கள் பெண்ணுக்கு அறிவுரை சொன்னால் எத்தனை விவாகரத்துக்கள் முறிந்திருக்கும்!!

இப்படி கடிதம் எழுதியது மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள்! 1988ல் எழுதப்பட்ட இந்தக்கடிதத்தை தன் வாழ்வின் மூல சாசனம் என்று குறிப்பிடுகிறார் அவர் மகள் கிருஷ்ணா சிதம்பரம். அவர் மேலும் சொல்லுகிறார்" வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத்தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத்தந்த இறைவனுக்கு எப்படி நன்றியை சொல்வது என்று தெரியவில்லை. இந்தப்பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று மலைப்பாக இருக்கிறது' என்று பரவசப்பட்டு பேசுகிறார்.

நம்மில் பலருக்கும்கூட வாழ்நாள் முழுமைக்குமான வழிகாட்டுதலாய் இந்தக்க்டிதம் அமையும்!!