Monday, 17 July 2017

பாடல்கள் கோடி பெறும்!!

சில சமயங்களில் எப்போதோ படித்த, மறக்க முடியாத சில வரிகள் பளிச்சென்று மனதில் தோன்றும். அவை பாடல் வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு திரைப்படத்தில் பேசப்பட்ட வரிகளாக இருக்கலாம் அல்லது ஒரு பாடலில் வந்த வரிகளாகக்கூட இருக்கலாம்.  எங்கு கேட்டோம், எங்கு படித்தோம் என்று சினேகிதிகளுடன் அலசி ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் ஒரு தனியான சுகம் இருக்கும்.

அப்படித்தான் ஒரு நாள் சினேகிதியுடன் பேசிக்கொண்டிருந்த போது ‘ சுட்ட பழம், சுடாத பழம்’ பற்றிய விவாதம் வந்தது.  அவ்வையார் பாடிய பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அதையெல்லாம் கணினி உதவியுடன் திரும்பப் படித்து ரசித்தோம். அதிலிருந்து மிகவும் ரசித்த இரண்டு பாடல்கள் மட்டும் எழுதுகிறேன்...

முதல் பாடல்:

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை ஒரு நாள் அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள்.  அப்போது அங்கே வந்த ஒளவையார்  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.

இது தான் அந்த நாலு கோடி பாடல்!

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்; 
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெறும்; 
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு 
கூடுதல் கோடி பெறும்; 
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்.  

(ஒளவையார் தனிப் பாடல்:42)

1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். 

இரண்டாவது பாடல்:

காட்டில் அலைந்து திரிந்து களைப்புடன் அமர்ந்திருந்த அவ்வையாரிடம் அங்கே வந்த மாடு மேய்க்கும் சிறுவன் கேட்கிறான்.

உங்களுக்குச் சுட்ட பழங்கள் வேண்டுமா? அல்லது சுடாத பழங்கள் வேண்டுமா?"

ஔவையார் திகைத்து நின்றார். தமிழ் மொழியில் மிகவும் கற்றுத் தேர்ந்த புலவரான அவர் பலவிதமான பழங்களைப் பற்றி அறிந்திருக்கின்றார். ஆனால், சுட்ட பழம், சுடாத பழம் என்று அவர் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், பள்ளிக்கூடத்துக்கே போயறியாத இந்த மாடு மேய்க்கும் சிறுவன் புதிதாக சுட்ட பழம், சுடாத பழம் என்று பேசுகின்றானே என்று அவர் ஆச்சரியப்பட்டார்.

பின்னர், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, எதுவும் தோன்றாமல், "சரி தம்பி, எனக்குச் சுட்ட பழங்களையே பறித்துப் போடு" என்று கேட்டார்.
சிறுவன் சிரித்தான். பின்னர், அந்த மரத்தின் கிளை ஒன்றைப் பிடித்துப் பலமாகக் குலுக்கினான்.
ஔவையார் தரையில் கிடந்த பழங்களில் நன்கு கனிந்திருந்த பழங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.அந்தப் பழங்களில் மணல் ஒட்டியிருந்த மணலை நீக்குவதற்காக வாயால் ஊதினார்.

மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த சிறுவன் வாய்விட்டுச் சிரித்தான். "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா?" என்று கேட்டான்.
அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஔவையார், திகைத்து நின்றார்.
கனிந்த பழங்களைச் சுட்ட பழம் என்றும், காய்களைச் சுடாத பழம் என்றும் சிறுவன் அறிவுடன் குறிப்பிட்டது அவருக்குப் புரிந்தது. இந்தச் சிறு விஷயம் தெரியாமல், ஒரு எருமை மேய்க்கும் சிறுவனிடம் நாம் தோற்றுப் போனோமே என்று வெட்கம் அடைந்த ஔவையார்,

" கருங்காலிக்கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித்துத் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்!'

பொருள்:

கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலி, வெறும் வாழைத்தண்டை வெட்ட முடியாமல் தோற்கும். படிப்பறிவில்லாத எருமை மேய்க்கும் பையனிடம் நான் தோற்று விட்டேன். அவமானம். இரண்டு நாள் உறக்கமற்று என் கண்கள் விழித்திருக்கும்![காணொளியில் சுட்ட பழம், சுடாத பழம்...’]

ஒரு புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டு பாடுவது எத்தனை அரிதானது. எல்லாம் தெரியுமென்ற அகந்தை கூடாது. ஒருவருக்குத் தெரியாததொன்று இன்னொருத்தருக்குத் தெரியும். அது தான் யாருமே கண்டு பிடிக்க முடியாத அற்புதம்!

Thursday, 29 June 2017

முத்துக்குவியல்-46!!!

தகவல் முத்து:

திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன்முறையாக அமல்படுத்தப்பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக் கின்றன

இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்குபிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன.
இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர்.

இதன்மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப்படுத்தப்படுகிறது.

லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக் கும் இடம் உள்ளது. திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்ல பயன்படுத்தப்படும் மூன்று கன்வேயர் பெல்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியில் இருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களை கொண்டு செல்ல பயன்படுகின்றன. இங்குதான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப்படுகிறது. இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுக்களை நாளொன்றுக்கு தயாரிக்கிறது.ஏறக்குறைய 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சமையல் பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர்.

அசத்தல் முத்து:

'கடத்தநாடன் களரி பயிற்சி மையம்' என்பதை 1949ல்  தொடங்கி 76 வயதிலும் கையில் வாளுடன் 'களரி' எனபப்டும் தற்காப்புக்கலையை கற்றுத்தருகிறார் மீனாட்ஷி அம்மா. இந்த மையம் கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. இந்த கேரளப்பெண்மணிக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

ஏழு வயதில் களரியைக்கற்கத்தொடங்கிய இவர் தன் குருநாதர் ராகவனையே பதினேழு வயதில் மணந்தார். இவரின் கணவர் தொடங்கிய இந்த களரி மையத்தில் ஜாதி, மத வித்தியசங்கள் பார்ப்பதில்லை. ஆறு வயதில் தொடங்கி 26 வயது வயது வரை குழந்தைகளும் இளைஞர்களும் இளம் பெண்களும் இந்த தற்காப்புக்கலையைக் கற்க இங்கே சேர்க்கப்படுகிறார்கள்.  ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த மையம் பயிற்சி தருகிறது.
கணவரின் மறைவுக்குப்பிறகு மீனாட்சியே இந்தப்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.  மரபுவழிப்படி குருதட்சிணை மட்டுமே. உடல் வலிவை ஏற்படுவதோடு இந்தக் களரிப்பயிற்சி இரத்த அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்கிறார் மீனாட்சி.

அருமையான முத்து:

கிரிக்கெட் வீரர் டோனி தன் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களையெல்லாம் தொட்டிருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் அவரின் விளையாடும் திறன் சற்று குறைந்த போது அவரைக் கிண்டல் செய்யாத ஆட்களே இல்லை. ஏன், அவரை ஒரு வீரராக சேர்த்துக்கொண்ட அவரின் அணியின் உரிமையாளர்களே அவரை பலவாறு பேசி ஏளனம் செய்தார்கள். அந்த சமயத்தில் அவரின் மனைவி வெகுண்டெழுந்து சில வார்த்தைகள் சொன்னார். எவ்வளவு அருமையானவை அவை!
" ஊழ்வினை தெரியுமா? "ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை சாப்பிடும். நேரமும், சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்".

Sunday, 18 June 2017

தந்தையின் அருமையும் பெருமையும்!!!

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்! 

சகோதரர் ரமணி அவர்களின் யோசனைக்கு தலை வணங்கி ஏழு வருடங்களுக்கு முன் நான் தந்தையின் பெருமையைப்பற்றி எழுதியதை மீள் பதிவாக ' தந்தையர் தினத்துக்காக ' இங்கே மறுபடியும் இணைப்பதில் பெருமை அடைகிறேன்!!

                   *********************************************************


இலக்கியங்களிலும் கவிதைகளிலும் புதினங்களிலும் திரைப்படங்களிலும் பழங்காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தாய்மையைப்பற்றி-அதன் சிறப்பையும் உயர்வையும் பற்றி எழுதாத கவிதைகளில்லை! பாடாத பாடல்கள் இல்லை!! சொல்லாத வார்த்தைகள் இல்லை!!! ஆனால் சொல்லாத-வெளிப்படாத உணர்வுகளுக்கு என்றுமே ஒரு புனிதம் உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ என்ற கவித்துவமான வரிகளுக்கு இணையானதுதான் ஒரு தந்தையின் பெருமை! 

ஆலமரம் எத்தனையோ பேர்களுக்கு குளிர்ச்சி தருகிறது! நிழல் தருகிறது ஒரு தாய் தன் குழந்தைகளுக்குத் தரும் இதம் போல! ஆனால் அந்த ஆலமரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அதன் வலிமையான வேர்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை!
சில வருடங்களுக்கு முன் தஞ்சையில் என் வீட்டருகேயுள்ள-எனக்கு பழக்கமுள்ள ஒரு பெண் மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களுக்காக காத்திருந்தபோது அங்கே புதிதாக ஒட்டப்பட்டிருந்த இரு சிறிய சுவரொட்டிகளை கவனித்தேன். முதலாவது தாய்மையின் உயர்வைப்பற்றிய கவிதை. மிக அருமையாக இருந்தது. அடுத்ததுதான் என்னை முதலில் வியப்பிலாழ்த்தி, பின் நெகிழ்ந்து கனிந்து போக வைத்தது.

அந்த கவிதை.. .. .. ..


அம்மா இல்லத்தின் தன்மானம் என்றால்
  அப்பா இல்லத்தின் அடையாளம்!
  அம்மா ஊட்டுவது அன்பு.
  அப்பா காட்டுவது மனத்தெம்பு!

  நாளும் பொழுதும் உணவளிப்பவள் அம்மா-ஆனால்
  அந்த உணவை சம்பாதித்துத் தருவது அப்பா என்பதை
  மறந்தே போகிறோம்!

  கல்லில் இடறும்போது வாயில் வரும் வார்த்தை
‘அம்மாடியோ!’
  காரில் மோதி கீழே விழும்போது வாயில் வரும் வார்த்தை
 ‘ஐயோ அப்பா!’

  ஏனெனில் சின்னச்சின்னத் துன்பங்களில் 
  தேடுவது அம்மாவின் அன்பு! 

  ஆனால் பெரிய துன்பங்களில் துணை நிற்பது
  அப்பாவின் ஆதரவு!

   அப்பா ஒரு நெடிய ஆலமரம்!
   அவர் தரும் குளிர் நிழலே குடும்பம்!’


மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசி பாராட்டியபோது அவர்களின் விழியோரத்தில் கண்ணீர் முத்துக்கள்!!

‘என் அப்பா சமீபத்தில்தான் இறந்து போனார்கள். ஆனால் அவரின் அன்பு, அவர் கொடுத்த மனத்தெம்பு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாவற்றையும் ஒரு நொடியில் இழந்து விட்டேன்!’ என்றார்கள்.

உண்மைதான்! அன்பிற்குரியவர்கள் திடீரென்று மறையும்போது அந்த அன்புடன் வாழ்வில் உள்ள நம்பிக்கையும் அதைச் சார்ந்த அனைத்து விஷயங்களும் ஆட்டம் கண்டு விடுகின்றது! அந்தக்கவிதையில் உள்ளது போல பெரிய துன்பங்களில் தெம்புடன் பிடித்துக்கொண்ட தோள்கள் மறைந்து விட்டன! 

ஒரு தந்தையின் பெருமையை உணர்த்த இதைவிட எளிமையான, அழகான கவிதையை நான் படித்ததில்லை!

Tuesday, 13 June 2017

மருத்துவங்கள் பலவிதம்!!!!

கடந்த சில மாதங்கள் தஞ்சையில் இருந்தபோது பல விதமான நோயாளிகள், நோயால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த உறவுகள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அவதியுற்றுக்கொண்டிருந்தவர்கள் என்று வெளியில் புறப்பட்டுப்போக நேர்ந்ததெல்லாம் இந்த மாதிரி காரணங்களுக்காகவே என்று ஆகிப்போனது. ஒரு சந்தர்ப்பத்தில் மனது மிகவும் சலித்துப்போய் எங்காவது சுப காரியம் என்று போய் வந்தால் மனதுக்கு ஒரு மாற்றம் இருக்குமே என்று கூட யோசனை வந்தது.

இடையே சில மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் நல்லவிதமான யோசனைகளும் சிலருக்கு என்னால் தர முடிந்ததில் இத்தனை அலைச்சல், சலிப்பையும் மீறி மனதிற்கு நிறைவும் கிடைத்தது.  நம்மால் சிலருக்கு வேதனைகள் தீருவது நமக்கு விவரிக்க இயலாத மன நிறைவு அளிக்கும்தானே? அவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன். இணையம் மூலம் நிறைய பேருக்கு அவை பலனளிக்கும் என்கிற ஆவலும் அக்கறையும் தான் காரணங்கள்.

தாங்க முடியாத பல்வலிக்கு:இதை மட்டும் முன்பேயே எழுதியிருக்கிறேன். பல்வலி இருக்குமிடத்தில் இரவு படுக்கும்போது ஒரு துண்டு உப்பு நார்த்தங்காயை வைத்து சற்று அழுத்தி விட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விடலாம். காலையில் விழித்தெழும்போது பல் வலி சுத்தமாக நீங்கியிருக்கும். அந்த நார்த்தங்காய்த்துண்டை துப்பி விட்டு மிதமான வெந்நீர் விட்டு வலி இருந்த இடத்தைக் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின் மறுபடியும் பல் வலி அந்த இடத்தில் அநேகமாக வராது.

கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து பாதம் வரை]:

ஒரு நாள் உறவினரின் குழந்தைக்கு நாவல்பழ ஜுஸ் வாங்க ஒரு இயற்கை அங்காடிக்குச் சென்றிருந்தேன்.  யதேச்சையாக ஒரு களிம்பு கண்ணில் பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால் வலிக்கு என்று அதன் மீது எழுதியிருந்தது. எனக்கு எப்போதுமே குதிகால் எலும்புகளில் வலி இருக்கும். அதற்கு இது பயன்படுகிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்து ஒரு பாட்டில் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பிரித்து அதனுள் இருந்த பேப்பரைப் படித்துப்பார்த்த போது மருந்தை கெண்டைக்காலில் மட்டுமே தடவ வேண்டுமென்பதை கவனித்தேன். உறங்கச்செல்லும்போது கெண்டைக்காலில் சற்று தாராளமாக தடவிக்கொண்டு உறங்க வேண்டும். அது போலவே இரண்டு நாட்கள் தடவினேன். மூன்றாம் நாள் பல மாதங்கள், ஏன் வருடக்கணக்காக குதிகால் எலும்பில் தொடர்ந்து இருந்த வலியைக்காணோம்! எனக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு மாதமாகியும் அந்த வலி இன்னும் வரவில்லை.  என் சகோதரியின் மருமகள் 10 நாட்களாக காலில் தொடையிலிருந்து கடுமையான வலி என்று பல மருந்துகளை உபயோகித்து, மருத்துவரிடமும் சென்று பலனில்லாமல் இந்த மருந்தையும் உபயோகிக்க ஆரம்பித்தார். இரண்டே நாட்களில் வலி அனைத்தும் போய் இது வரை திரும்ப வரவில்லை என்று சில நாட்களுக்கு முன் அலைபேசியில் சொன்னார். இப்போது இந்த மருந்தின் புகழ் அங்கே அனைவரிடமும் பரவிக்கொண்டிருக்கிறது.

மருந்தின் பெயர்: CONARCS, விலை ரூ 120. படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க:

ஒரு புத்தகத்தில் படித்த குறிப்பு இது. உபயோகப்படுத்த மறந்து போய் பல காலமாக என் ஃபைலில் அப்படியே இருந்தது. சமீபத்தில் தான் மறுபடியும் இந்தக் குறிப்பைப்படிக்க நேர்ந்த போது இதை எப்படி இத்தனை நாட்களாக மறந்து போனோம் என்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஹீமோகுளோபின் எனக்கும் என் கணவருக்குமே குறைவாகவே பல காலமாக இருந்து வருகிறது. என் மறதியை நொந்து கொண்டேன்.
உலர்ந்த கருப்பு திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்பது தான் பொது விதி. எப்படி சாப்பிட வேண்டுமென்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன.  இதற்கு 72 திராட்சைகள் தேவைப்படும். முதல் நாள் 3 திராட்சைகளைக் கழுவி ஒரு தம்ளர் நீரில் முதல் நாளிரவே ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலை வெறும் வயிற்றில் ஒரு திராட்சையை மென்று தின்று அது ஊறிய தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கை குடிக்க வேண்டும். மதியம் 12 மணிக்கு அடுத்த திராட்சை, அடுத்த பங்கு ஊறிய நீர், மாலை 6 மணிக்கு கடைசி திராட்சையை மென்று பாக்கியுள்ள நீரை குடிக்க வேண்டும்.  உடனேயே அடுத்த நாளுக்காக ஆறு திராட்சையை ஊறப்போட வேண்டும். மறு நாள் மேற்சொன்ன மாதிரியே சாப்பிட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது திராட்சைகள். அதற்கடுத்த நாள் 12 திராட்சைகள்.  இந்த 12 திராட்சைகள் மட்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து ஊறப்போட வேண்டும். அதற்கடுத்த நாள் ஒன்பது, அதற்கடுத்த நாள் ஆறு, அதற்கடுத்த நாள் 3 என்று குறைத்து மொத்தம் 9 நாட்கள் சாப்பிட வேண்டும்.  3, 6, 9, 12, 12, 12, 9, 6, 3 என்று இந்த வரிசைகளில் சாப்பிட்டு  முடிக்க வேண்டும். அதற்கப்புறம் 2 நாட்கள் கழித்து இரத்தப்பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.  நான் அவ்வளவாக முதலில் இதை நம்பவில்லை. வெறும் உலர் திராட்சையில் அதுவும் 9 நாட்களில் எப்படி ஹீமோகுளோபின் கூடும் என்று தான் நினைத்தேன். இரத்தப்பரிசோதனை முடிவு வந்ததும் அசந்து போய் விட்டேன். 10.5ல் இருந்த என் ஹீமோகுளோபின் 12க்கும் 12ல் இருந்த என் கணவரின் ஹீமோகுளோபின் 15க்கும் ஏறியிருந்தது!!
குறைந்த செலவில் அருமையான பலன் கொடுக்கும் இயற்கை வைத்தியம் இது! செய்து பாருங்கள்! அவ்வளவாக திருப்திகரமாக ஹீமோகுளோபின் ஏறவில்லையென்றால் இன்னொரு 9 நாட்கள் கருப்பு திராட்சைகளை மேற்சொன்ன முறையில் உண்ண வேண்டும்!

சிறுநீரகப்பிரச்சினைகள்

நீண்ட நாள் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் வேறு பல அசாதாரண காரணங்களாலும் தற்போதெல்லாம் சிறுநீரகப்பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நமக்குச் சுட்டிக்காண்பதற்கும் நம் மீது அக்கறையுள்ள மருத்துவர் அமைய வேண்டும். ‘ எல்லா மருத்துவர்களும் நோயாளியிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ என்று ஒரு சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரே என்னிடம் சொன்னார்!! பொதுவாய் சிறுநீர் பரிசோதனையில் 60 வயது மேற்பட்டவர்களுக்கு, அதுவும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ALBUMIN TRACE என்று காணப்படும். இப்படி இருந்தால் நமக்கு சிறுநீரக நோய் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். அதிகப்படியான புரதம் இரத்தத்தால் உட்கிரகிக்க முடியாமல் சிறுநீரக நெஃப்ரான்கள் பலமிழந்து, அதன் வடிகட்டிகளின் துளைகள் பெரிதாவதால் சிறு நீர் வழியே வெளியேறுகிறது. சர்க்கரை, டயட், உயர் இரத்த அழுத்தம், பிற இரத்தப்பரிசோதனைகளான யூரியா, கிரியாட்டினைன் முதலியவை நாம் கட்டுக்குள் வைத்திருக்கிற வரையில் பிரச்சினை இல்லை.  நாளடைவில் கிரியாட்டினைன் அல்லது யூரியாவின் அளவு அதிகமாகலாம். அப்போது தான் மருத்துவர்கள் மருந்துகள் கொடுப்பார்கள்.  இயற்கையான முறையில் இரத்தத்தில் அதிகமாகும் கிரியாட்டினைனை குறைக்கும் வழி இது! Tuesday, 30 May 2017

ஆலமரம்!!!

மனிதர்கள் எல்லோரும் மகான்களாவதில்லை. உயர்ந்த சிந்தனைகளாலும் செயல்களாலும்தான் அவர்கள் மகான்களாகிறார்கள். அதற்கு எல்லையற்ற நேசமும் கருணையும் வேண்டும்.

' மனிதனாய்ப்பிறந்தால் அவன் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்க வேன்டும் ' என்று எல்லோரும் பல தருணங்களில் நினைப்பது தான்! ஆனால் அந்த அர்த்தம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும், அன்பையும் கருணையையும் மட்டுமே அந்த உயர்ந்த வாழ்க்கைக்கு மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு அதன்படியே வாழ்ந்து கொன்டிருக்கும் ஒருவரைப்பற்றி ஒரு மாத இதழில் படிக்க நேர்ந்தது. படித்து முடித்த பிறகு அந்த பாதிப்பிலிருந்து என்னால் நெடுநேரம் விடுபட முடியவில்லை! இது ஒரு தவ வாழ்க்கையல்லவா, இப்படி யாரால் வாழ முடியும் என்று மனம் பிரமித்துப்போனது. அவரைப்பற்றி இதோ... எழுத ஆரம்பிக்கிறேன்.

நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் அருகில்கூட நெருங்க முடியாத அளவுக்கு துர்நாற்றமும் புண்களில் சீழ் பிடித்து சில சமயங்களில் புழுக்களும் வைத்து, உறவினர்களால் வெளியேற்றப்பட்டு, ஆதரவின்றி தெருக்களில் அலையும் தொழுநோயாளிகளைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து, குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிவித்து கருணை மழை பொழிந்து கொண்டிருக்கிறார் சமூக சேவகர் மணிமாறன்.திருவண்ணாமலை அருகேயுள்ள தலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிமாறன் சிறு வயதில் படிப்பில் நாட்டமின்றி, தந்தையின் ஆதரவுடன் தன்னுடைய பதினேழு வயதில் அன்னை தெரசாவின் ஆசிரமம் தேடி பயணமானார். பணம், முகவரி அடையாளம், உடைகள் பறி போய், பிச்சையெடுக்கும் கும்பலில் சிக்கி அடிபட்டு, தமிழ் பேசிய ஒரு ஆட்டோ டிரைவர் மூலம் அன்னை தெரசாவின் ஆசிரமத்தை அடைந்திருக்கிறார் இவர். பெண்கள் மட்டுமே தங்க முடியும் அங்கு என்பதால் இவரை வெளியில் தங்க வைத்து அந்த ஆசிரமத்தில் பணி செய்ய அவர்கள் அனுமதித்தனர். நான்கு மாதங்கள் தங்கி சேவை புரிந்து, சேவை பற்றி நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டு, 'பிறருக்கு உதவுவதற்காகவே இந்த உடலையும் உயிரையும் ஆண்டவன் படைத்திருக்கிறான்' என்ற உணர்வுடன் இவர் ஊருக்குத்திரும்பினார்.திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைப்பார்க்கத்தொடங்கினார் இவர். கிடைத்த 1100 சம்பளத்தில் தன் தந்தையிடம் 500 ரூபாய் கொடுத்து விட்டு, மீதமுள்ள பணம் முழுவதையும் சாலையோரம் வசிக்கும் எழைகளுக்கு உணவாகவே வழங்கி வந்தார். இதைப்பார்த்து விட்டு இவர் கம்பெனியின் நிறுவனர் பனியன் நிறுவனத்தில் மிஞ்சும் ஆடைகள், பிஸ்கட்டுகள் இவற்றை தானும் வழங்க, இவரின் சமூக சேவை வளரத்தொடங்கியது. வீதியில் அலையும் தொழுநோயாளிகளுக்கு எப்படி உதவலாம் என்ற யோசனையில் இருந்தவருக்கு தமிழக தொழுநோய் பிரிவு டைரக்டராக இருந்த திரு.ராமலிங்கம் உதவி செய்தார். பல விழிப்புணர்வு முகாம்களுக்கு இவரை அனுப்பி வைத்ததுடன் தொழுநோயாளிகளின் புண்களுக்கு எப்படி மருந்தளிக்க வேண்டும், நாம் எப்படி அந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளையும் வழங்கினார். அதன் பின் மணிமாறன் தனது பைக்கில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அத்தனை மருந்துகளையும் வைத்துக்கொண்டு, எங்கு தொழுநோயாளிகள் தென்பட்டாலும் அவர்களிடம் கனிவுடன் பேசி, ஆறுதலளித்து, சிகிச்சை அளித்து மருத்துவ மனைகளிலும் சேவை நிலையங்களிலும் சேர்ந்து அதன்பிறகும் அவர்களை தொடர்ந்து கவனிக்கவும் செய்கிறார் இவர்.2008ல் மறைந்த திரு அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனைப்படி ' உலக மக்கள் சேவை மையம்' என்ற மையத்தைத்தொடங்கி, ' முகம் சுளிக்காது சேவை செய்யும் மனம் இருப்பவர்கள் என் மையத்திற்கு வாருங்கள் ' என்று அழைப்பு விடுத்தார். இன்றைக்கு இவரின் மைஉயத்தில் 450 உறுப்பினர்கள் சேவை புரிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமன்றி 17 மாநிலங்களிலும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் இவருடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதுவரை இவர் 40000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு இவர் உதவிகள் செய்திருக்கிறார். இதில் பதினைந்தாயிரம் பேர் தொழுநோயாளிகள். நோயிலிருந்து விடுபட்டவர்கள் சுய தொழில் தொடங்கவும் வழி செய்துள்ளார் இவர். நோய்த்தாக்குதலினால் இறந்து போனால் அவர்களின் இறுதிக் காரியாங்களையும் இவரே செய்கிறார். ஆதரவற்றோர், தொழுநோயாளிகள் என 275 பேருக்கு இவர் இறுதிச் சடங்கு செய்துள்ளார்.விபத்து பற்றிய தகவல்கள் இவருக்கு வந்தால் அங்கு சென்று முதலுதவிகள் செய்து வருகிறார். தவிர்க்க முடியாமல் இறந்து போனவர்களின் குடும்பத்தினரிடம் பேசி இதுவரை 22 ஜோடிக் கண்களை தானமாகப்பெற்று வழங்கியிருக்கிறார்.

இன்னும் அசத்தலான விஷயம், நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு ஊரின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பகுதிகளை சுத்தம் செய்கிறார். இது வரைக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை சுத்தம் செய்து அங்கு குப்பைத்தொட்டிகளை அமைத்திருக்கிறார். இவர் செய்வதைப்பார்த்து அங்குள்ள மருத்துவர்களும் அரசு அதிகாரிகளும் தொடர்ந்து மருத்துவமனைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள முயல்வது தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமென்று சொல்கிறார்.

இன்றைய தேதியில் கூட்டுக்குடும்பங்களின் அழிவை நினைத்து வருத்தப்படும் இவர், அப்படி உறவே இல்லாதவர்களுக்கு தான் உறவாக இருக்க வேண்டும், அவர்களுக்காக ஒரு ஆசிரமத்தை உருவாக்க வேண்டுமென்பதே தனது அடுத்த பயணத்தின் இலக்கு என்கிறார் இவர்.

தானும் இரத்த தானம் அளிப்பதுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ரத்த தானம் வழங்க தூண்டுகோலாகவும் இருந்து வருகிறார்.அமெரிக்க பயாகிராஃபி இன்ஸ்ட்டியூட் தங்கப்பதக்கம், அமெரிக்க தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது, மத்திய அரசின் சிறந்த சமூக சேவகர் விருது என்ற பல்வேறு விருதுகளைப்பெற்றிருக்கிறார் இவர்.

மிகச் சிறிய விதை மனதில் விழுந்ததை தன் உயர்ந்த மனதினால் பெரிய ஆலமரமாக்கியிருக்கிறார் இவர். அதுவும் எப்படிப்பட்ட ஆலமரம்! தன் விழுதுகள் அனைத்தாலும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நிழல் தருவது என்ற உயர்ந்த சிந்தனை! அவரை மனதால் வணங்குகிறேன்!!!

மேலும் இவரைப்பற்றி முழுமையாக அறிய கீழ்க்கண்ட வலைத்தளத்திற்குச் செல்லலாம்.

http://worldpeopleservicecentre.org/


Thursday, 18 May 2017

ஆதங்கம்!

10 நாட்களுக்கு முன் என் நெருங்கிய சினேகிதியின் பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

என் சினேகிதி பள்ளிக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பில் எப்போதும் இருக்கிறார். எப்போதும் நான் துபாயிலிருந்து வரும்போதும் திரும்பவும் அங்கு செல்லும்போதும் தஞ்சை வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல்வது எப்போதுமே வழக்கம்! ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் தொடங்கி ஜூன் தொடக்க‌ம் வரை எப்போதும் அவரின் இரு பெண்கள், பேரன்களுடன் மிகவும் பிஸியாகி விடுவார். இந்த வருடமும் ஜூன் மாதம் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றதும் தஞ்சைக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்.

இப்போது அவரின் இரண்டாவது பெண்ணிடமிருந்து அழைப்பு! சாதாரணமாக எப்போதும்போல தொலைபேசி அழைப்பு என்று நினைத்து பேச ஆரம்பித்த எனக்கு தொலைபேசியில் குண்டு வெடித்ததைப்போல இருந்தது.

என் சினேகிதியின் மூத்த மகளின் மூத்த பேரன் [ முதல் பேரன்] பாட்டி வீட்டுக்கு வந்த இடத்தில் திடீரென உலகை விட்டு மறைந்து விட்டாரென்று சொன்னதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதினேழு வயது தான். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு நுழையும் ஆர்வத்தில் இருந்தவன். பெற்றோர் இவனைத்தான் மலை போல நம்பியிருந்தார்கள். கண்ணீருடன் அரற்றிய என் சினேகிதியிடமோ, அவரின் பெண்களிடமோ என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் சின்ன மகள் தான் எனக்கு மிகவும் பழக்கம். அவர்தான் அழுகையுடன் நடந்ததை விவரித்தார்.

முதல் நாள் எல்லா குழந்தைகளும் பானி பூரி வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். அடுத்த நாள் எல்லோருக்கும் மூத்தவனான இந்தப்பையன் மட்டிலும் தொடர்ந்து வயிற்றுப்போக்கால் அவதியுற்றிருக்கிறான். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று அவதியுற்று, மருத்துவரிடமும் சென்று அதற்கான மருந்துகளையும் எடுத்திருக்கிறான்.  ஐந்தாம் நாள் இரவு எனக்கு என்னென்னவோ செய்கிறது. மருத்துவமனை செல்லலாமா என்று நள்ளிரவு அவன் கேட்டதும் பயந்து போய் அவனைத்தொட்டுப் பார்க்கையில் உடம்பு முழுவதும் வியர்த்துக்கொட்டி, முழுவதுமாக சில்லிட்டும் போயிருந்திருக்கிறது. ஆனால் தெம்புடனேயே அவன் ஆட்டோவில் அமர்ந்து சென்றிருக்கிறான். ஆனால் அவனை அட்மிட் செய்ததுமே அவன் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாகவும் பல்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாமே தாழ்நிலைக்குப்போய் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவனைக் காப்பாற்ற முடியாமல் மறு நாள் காலை அவன் இறந்தும் போய் விட்டான்.

இறந்து போகிற வயதா இது? அவனையே நம்பியிருந்த பெற்றோர் ஒரு பக்கம் நிலை குலைந்து போக, மறு பக்கம் பாட்டியான என் சினேகிதி அதிர்ச்சி தாங்காமல் தளர்ந்து போக, வீடே ஆறுதலுக்கு அப்பாற்பட்ட நிலைக்குப்போய் விட்டது.

எதனால் இந்த மரணம் என்பதை மருத்துவமனையால் சொல்ல முடியவில்லையாம். ஒரு வேளை இது FOOD POISONஆக இருக்கலாம் என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. இது பற்றி என் உறவினரிடம் பேசிக்கொண்டிருந்த போது, இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற என் சந்தேகத்தை சொன்னேன். அதற்கு அவர் இது FOOD POISON போலத்தான் இருக்கிறது என்று சொன்னார். சில நாட்களுக்கு முன் காலால் மிதித்து பானி பூரிக்கான மாவு பிசையப்படுவதாகவும் சாலையில் விற்கும் பானி பூரியை வாங்கி சாப்பிடாதீர்கள் என்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து தகவல் வந்ததாகச் சொன்னார். தனக்குத்தெரிந்த சிறு வயது கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென்று வயிற்றுப்போக்கு, வாந்தி, ஜுரம் என்று வந்து அன்று மாலையே இறந்ததாகவும் காரணம் விசாரித்த போது சாலையோரக்கடை ஒன்றில் பொரித்த கோழி வருவல் சாப்பிட்டதாகவும் தெரிந்தது என்றும் தெரிவித்தார்.சுகாதாரமற்ற சிறு உணவுக்கடைகள் சாலையெங்கும் முளைத்திருக்கிறது. எந்தக் கடையில் பழைய, வீணான பொருள்களை விற்கிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

இது மட்டுமல்ல, காய்கறிகளைக்கூட, அவை உரம் போட்டு வளர்க்கப்பட்டிருப்பதால் நன்கு கழுவி, அலசி அதன் பிறகே சமைக்க பல சமயங்களில் அறிவுறுத்தப்படுகிறது. இதை எழுதும்போது பழைய சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது.

ஒரு நரம்பியல் மருத்துவர், அறுவை சிகிச்சையில் புகழ் பெற்றவர், தான் செய்த ஒரு அறுவை சிகிச்சையைப்பற்றி ஒரு பெண்கள் இதழில் விவரித்திருந்தார்.

ஒரு வயதான் அம்மாவுக்கு தலையில் பொறுக்க முடியாத வலி என்று அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது அந்த அம்மாவின் மூளையிலிருந்து இரத்தக்குழாய் வழியாக கண்களுக்குள் புழுக்கள் வந்திருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார். அவற்றை நீக்கி சரி செய்து அவரை குணப்படுத்தி அதன் பின் அந்த அம்மாவிடம் அவரது உணவுப் பழக்க வழக்கங்களை விசாரித்த போது அவர் கொல்லைப்புறத்தில் பன்றிகள் மேயும் இடங்களில் வளர்ந்து கிடந்த கத்தரிக்காய்களை அடிக்கடி உண்டிருக்கிறார் என்று தெரிய வந்ததாம். கத்தரிக்காய்களில் பாவாடை என்னும் பகுதியில் அந்த பன்றியின் மலத்திலிருந்து வெளி வந்த புழுக்களின் முட்டைகள் ஒட்டியிருந்திருக்கின்றன. அந்தப்பாவாடையுடன் கத்தரிக்காய்களை சமைத்து உண்ணும்போது, உணவுக்கான அதிக பட்ச வெப்ப நிலையில்கூட அந்த முட்டைகள் அழியாமல் அது அவரின் உடலுக்குள் சென்று மூளையை அடைந்திருக்கிறது. அங்கேயே முட்டைகள் பொரித்து, புழுக்கள் உண்டாகி கண்ணுக்குள்ளும் வந்திருக்கின்றன. இந்த உண்மை சம்பவத்தை எழுதிய அந்த மருத்துவர், ' நான் பெண்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து காய்கறிகளை பல முறை கழுவி சுத்தம் செய்து சமையுங்கள்.' என்று வேண்டுகோள் விடுத்து முடித்திருந்தார்!

துபாய் போன்ற அரேபிய நாடுகளில் கடுமையான சட்ட திட்டங்கள் அமுலில் இருக்கின்றன. அவற்றிற்கு உடன்பட்டே ஒவ்வொரு உணவகமும் நடத்தப்பட வேண்டும். ஒரு உணவகத்தை 25 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தியவர் என் கணவர். அத்தனை கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுவதால்தான் அங்கே உணவகங்களில் தைரியமாக அமர்ந்து உண்ண முடிகிறது.

இங்கே....?

குழந்தைகளுக்கு வெளியில் பலகாரங்களையும் கோழி வறுவல் போன்றவைகளையும் பெரியவர்கள் தான் வாங்கிக்கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறார்கள். வீட்டில் வறுத்த எண்ணெயையே இரண்டாம் முறை வேறு எதுவும் பொரிப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடாது என்ற அறிவுரைகள் அவ்வப்போது தொலைக்காட்சி, மீடியாக்களில் வருகின்றன. எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொரித்த எண்ணெயிலேயே கடைகளில் மீண்டும் மீண்டும் வடை, போண்டா போன்றவற்றை பொரித்துக்கொடுக்கிறார்கள். அதை உண்ணுபவர்கள் பலருக்கு கான்ஸரும் வருகிறது. இப்படி எத்தனையோ பாதிப்புகள். புகழ் பெற்ற கடைகளில் விற்கும் பலகாரங்கள்கூட கெட்டுப்போயிருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. முதலில் பெரியவர்களுக்குத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

முடிந்த வரையில் நாம் தாம் நம் நாக்கிற்கு கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை.

Friday, 5 May 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்-[ பாகம் இரண்டு]!!!

தல விருட்சம் வில்வம். சூரிய புஷ்கரணியும் காவிரியும் தீர்த்தமாகும்.
இறைவனின் திருநாமங்கள்: ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர்
இறைவி: தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி, திரிபுரசுந்தரி.

குளத்தினுள் சிறு மண்டபம்!
தெற்கு கோபுர வாசல் வழியே நாம் நுழைவோம்.
தெற்கு கோபுர வாசலுக்கு நேரே காவிரி படித்துறை அமைந்துள்ளது. இந்த காவிரி நதியில் நீராடுவதை அப்பர் சுவாமிகள் வெகுவாக சிறப்பித்துள்ளார். புஷ்பமண்டப படித்துறை என்ற இத்துறையில் நீராடும் பக்தர்களை, ஐயாறப்பர் பெருஞ்செல்வந்தர்களாக மாற்றுவார் என்பது அப்பரின் வாக்கு.
இத்தலப் படித்துறையில் மார்கழி மாதம் கடைசி நாளன்று காவிரி அன்னை இங்கு தங்கி, ஐயாறப்பரை வழிபட்டு மறுநாள், தைப் பிறப்பன்று வருணனை அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. எனவே, பெண்கள் இன்றும் மார்கழி கடைசி நாளன்று இரவு இங்கு தங்கி ஐயாறப்பரை வழிபட்டு, தை முதல் தேதியன்று இந்தப் படித்துறையில் பொங்கல் தயாரித்து, காவிரி அன்னைக்கு மங்கலப் பொருட்களுடன் படைத்து வழிபடுகிறார்கள்.தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும் வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. இவர்கள் தான் நுழைவாசலில் துவார பாலகர்களாக இருக்கிறார்கள்.

தென் கைலாயம்
இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.தெற்கு வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்புறமாக அமர்ந்துள்ளார் ஓலமிட்ட விநாயகர். சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

தென் கைலாயம் நுழைவாயில்
திருவையாறு ஐயாரப்பர் கோவில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும்.முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூத லிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இலக்குமிக்கு இரண்டாம் பிராகாரத்தில் தனிக்கோயில் இருக்கின்றது. வெள்ளிக் கிழமைதோறும் இலக்குமி புறப்பாடு இத்தலத்தில் நடைபெற்று வருகின்றது.


மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.  நான்காம் பிரகாரத்தில் சூரிய புஷ்கரணி தீர்த்தம்,. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம்.மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு மணல் லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

வட கைலாயம்! இது பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது!
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

இறைவன் சன்னதி!
இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார்.

சுற்றுப்பிரகாரத்தில் ஓவியங்கள்!
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்.இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்' என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வட கயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.சமயக்குரவர்களில் ஒருவரான அப்பருக்கு சிவ பெருமான் திருவையாறில் கயிலைக்காட்சியினைக் காட்டி அருள் புரிந்தாகவும், இதனால் வடக்கே காசிக்கு தீர்த்த யாத்திரை செல்ல முடியாத பக்தர்கள் தென் கயிலாயமான திருவையாறு வந்தால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது. சூரியனுடைய வழியில்வந்த ஸ்ரீ ராமன் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து  வணங்கினார்.பொதுவாக சிவாலய‌ங்களில் நவக்கிரகங்கள் வேறு வேறு திசையில் இருக்கும்.
இதற்கு நேர் மாறாக திருவையாறில் நவக்கிரகங்களில் ஏனைய எட்டு கிரகங்கள் சூரியனையே பார்த்து நிற்கின்றனர்.

அம்மன் சன்னதியில் அழகு மிக்க தூண்கள்!
இங்குள்ள தியான மண்டபம் அல்லது முக்தி மண்டபம் சுண்ணாம்பு, கருப்பட்டியால் கட்டப்பட்டது. முக்தி மண்டபத்தில் விஷ்ணு, நந்தி தேவர், அகத்திய முனிவர் உபதேசம் பெற்றனர்.இறைவனின் கோவிலுக்கு ஈசான்ய மூலையில் அம்மனின் கோவில் இரு திருச்சுற்றுகளுடன் உள்ளன. எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு அம்பாளுக்கு அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

மிகவும் சுத்தமாக கோயிலைப் பேணி பாதுகாக்கிறார்கள். வட கைலாயம், முக்தி மண்டபம் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன! வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு அழகிய கோவிலை தரிசித்த திருப்தியுடன் திரும்பினேன்!!


Saturday, 22 April 2017

திருவையாறு பஞ்சநாதேஸ்வரர்!!

என் நெருங்கிய சினேகிதி திருவையாறு அருகே தில்லைஸ்தானம் என்ற ஊரில் இருக்கிறார். ரொம்ப நாளாய் திருவையாறு ஐயாரப்பர் கோவிலைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்ததால் சில நாட்களுக்கு முன்னே என் இன்னொரு சினேகிதியுடன் திருவையாறு கிளம்பினேன். கிளம்புவதற்கு முன் வழக்கம்போல ஐயாரப்பர் கோவில் பற்றிய விபரங்களை சேகரித்த போது பிரமிப்பின் உச்சநிலையை அடைந்தேன்! எத்தனை பிரம்மாண்டமான கோவில் இது! எத்தனை அரசர்களை இந்தக் கோவில் பார்த்திருக்கிறது! எத்தனை எத்தனை கல்வெட்டுக்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது! எத்தனை எத்தனை ஆச்சரியகரமான வரலாற்றுக்கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!முதலில் இந்த கோவில் உருவான கதையைப்பார்ப்போம்.

இத்திருக்கோவில் முதன் முதலாக "பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச  சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு.  கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த  சோழப்பேரரசன் "கரிகாற்பெருவளத்தான்" இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில்,  ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி நகர மறுத்தது.  "இதன்  அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது" என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.  அடியில்  சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திரு உருவங்களும் யோகி  ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன.  மேலும் அகழ்ந்து ஆராய்ந்தபோது,  நியமேசர் எனும் சித்தரைக் கண்டு நின்றான். அவரும் கரிகாலனிடம்,  "தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இறைவனுக்கு கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும்  வெல்வதற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின்  குளம்படியில் கிடைக்குமென்று கூறி என அருள் புரிந்தார்.  அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில்  கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.  கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே  சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில்  கட்ட செய்தான். கோவிலின் உள்ளே  கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதால் பிரகாரம் சுற்றக்கூடாது என்ற ஐதீகமும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் இவற்றிற்கு சாட்சியாக உள்ளன.

``குந்தி நடந்து குனிந்தொருகைக் கோலூன்றி
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி-வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.``

காடவர்கோன் நாயனார் பாடிய பாடலுடன் நான் திருவையாறுக்குள் நுழைவோம்!

இவ்வூர் முதலாம் இராஜராஜன் காலத்தில் இராஜேந்திரசிங்க வளநாட்டுப்பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் திருபுவனமுழுதுடைய வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும், சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டில், இராசராச வளநாட்டுப் பொய்கைநாட்டுத் திருவையாறு என்றும் வழங்கப்பெற்று வந்துள்ளது.காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். சிலாத முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை செப்பேசன். தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் அருள் நிறைந்த தரிசனத்தால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றான். அதன் பின் ஐயாறப்பர் செப்பேசருக்கு ஞானோபதேசமும் நந்தீசர் எனும் நாமமும், சிவகணத் தலைமையும் முதல் குருநாதன் என்ற தகுதியும் அருளினார்.

அத்துடன் நில்லாது, இறைவன் தாமே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை பங்குனிப் புனர்பூசத்தே திருமணம் செய்துவைத்தார்.

சித்திரைப்பெருந்திருவிழா:

இது சித்திரைமாதத்தில் நிகழ்வது. இதைப் பிரமோற்சவம் என்றும் வழங்குவர். இதில் ஐந்தாம் நாள் விழா தன்னைத்தான் பூசிப்பதாகும். இவ்விழாவின் முடிவில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியாருடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிப்பல்லக்கிலும், நந்திதேவர் தனியொரு வெட்டிவேர்ப் பல்லக்கிலும் எழுந்தருளித் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் எனும் தலங்களுக்கு எழுந்தருள, திருக்கண்டியூரார் நகைகள் வழங்க, திருப்பழனத்தினர் பழங்கள் வழங்க, திருப்பூந்துருத்தியினர் பூக்கள் வழங்க, திருச்சோற்றுத்துறையினர் சோறு வழங்க, திருநெய்தானத்தினர் நெய் வழங்க, திருவேதிக்குடியிலிருந்து வேதியர் வர அந்தந்த ஊர்களின் இறைவரும் தனித்தனி வெட்டிவேர்ப்பல்லக்குகளில் எதிர்கொண்டு அழைத்து உடன்தொடர மறுநாட்காலை ஐயாற்றுக்கு எழுந்தருளுவார். இதை ஏழூர் விழா அல்லது சப்தஸ்தானத் திருவிழா என்பர். அதன் தொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும்.  திருமழப்பாடியில் நந்திதேவருக்கு நடைபெறும் திருமணத்தை நடத்திவைக்க ஐயாறப்பன் கிளம்பும் நந்திதேவர் திருமண விழாவும் சித்திரைத் திருவிழாவும் இவ்வூரின் பெருவிழாகள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் திருவையாற்றில் ’சப்தஸ்தானம்’ திருவிழா கொண்டாடப்படுகிறது. இது நந்தி தேவருடைய திருமண ஊர்வலமாக கருதப்படுகின்றது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லாக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக் கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ’பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. தென்னாட்டில் இதைப் போன்றதொரு விழாவைக் காணமுடியாது. இவ்விழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் குழுமி ஏழு ஊர்களையும் சுற்றிவரும் காட்சி அற்புதமானதொன்றாகும்.

நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகருடன் அருணகிரி நாதர், பட்டிணத்தார், ஐயடிகள் காடவர்கோன், முத்துசாமி தீட்சிதர், வள்ளலார், தியாகராஜர் உள்ளிட்ட பலரால் பாடப்பெற்ற தலமிது.

அடுத்த வாரம் கோவிலுக்குள் செல்வோம்!

தொடரும்.....

Thursday, 13 April 2017

உறவுகளை இணைக்கும் பாலங்கள்!!

பழைய ஃபைல்களை சுத்தம் செய்து கொன்டிருந்த போது முக்கியமான கடிதங்கள் அடங்கிய ஃபைல் கண்ணில் பட்டது. அதை எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடிதமாய் படிக்க ஆரம்பித்த போது மனம் பல வருடங்களுக்குப்பின் போய் விட்டது.
எத்தனை எத்தனை உணர்வுக்கலவைகள்!

அந்த நாட்களில் மன உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த கடிதங்கள் தேவைப்பட்டன‌. கடிதங்கள் தான் உறவுகளை இணைக்கும் பாலங்களாக விளங்கின.சின்ன வயதில் பொங்கல் திருநாளின் போது நானும் என் தங்கையும் பொங்கல் கரும்பு எல்லாவற்றையும் சுவைத்து விட்டு சீக்கிரமே வெளியில் வந்து விடுவோம். தபால்காரர் பொங்கல் அன்றைக்கு வர வழக்கத்தை விட தாமதம் ஆகும். இருந்தாலும் அவரது வருகைக்காக கடும் தவம் இருப்போம். அவர் அருகே வர வர ஒவ்வொரு படியாய் இறங்கி யார் முன்னால் நிற்பது என்பதில் பெரிய போட்டியே நடக்கும்.

பல வருடங்கள் அவற்றையெல்லாம் சேமித்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருந்தேன் நான். வெளி நாட்டில் வாழ்ந்த போதிலும் துணைக்கு ஒரு உறவினர் பையனை அழைத்துக்கொண்டு தமிழ்க்கடைகள் அனைத்திலும் ஏறி இறங்கி பொங்கல் வாழ்த்துக்கள் வாங்குவேன். ஒரு முறை 64 பொங்கல் வாழ்த்துக்கள் வாங்கிய ஞாபகம் இருக்கிறது.

என் மாமாவிற்கு திருமண நிச்சயம் முடிந்து பல மாதங்கள் கழித்துத்தான் திருமணம். அஸ்ஸாமிலிருந்த அவர் கடிதங்கள் அனுப்பும்போது ஒவ்வொரு முறையும் ரோஜா இதழ்கள் கூடவே வருமாம்! அக்கா வெட்கத்துடன் சொல்லுவார்!

லண்டன் ஆங்கில மீடியத்தில் வெளிநாட்டில் படித்துக்கொன்டிருந்த என் மகனை ஈராக் போர் காரணமாக ஒரு வருடம் தஞ்சை டான் பாஸ்கோவில் சேர்க்க வேண்டியதாயிற்று. முதல் முதலாய் தமிழ் கற்று 'அம்மா, நான் மனப்பாடமாக திருக்குறளை எழுதியிருக்கிறேன் பாருங்கள்!' என்று என் மகன் சிறு வயதில் மிக சந்தோஷமாக அனுப்பிய கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது!!

முன்பெல்லாம் என் மாமியார் வெளி நாட்டில் வாழும் எங்களுக்கு அனுப்பும் கடிதங்களில் முதல் பக்கம் முழுவதும் நலம் விசாரித்தும் ஊரிலுள்ளவர்களின் நலத்தை அறிவித்தும் நிரம்பியிருக்கும்! அது மாதிரியெல்லாம் இனி யார் கடிதம் எழுதப்போகிறார்கள்?

எத்தனை கடிதங்கள் அப்போதெல்லாம் இனிப்பையும் அதிர்ச்சிகளையும் தாங்கி வந்திருக்கின்றன! அப்போதெல்லாம் காதலுக்கும் இந்தக்கடிதங்கள் தானே தூதுவர்கள்?

எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் அவரின் சித்தப்பா தொண்டையில் புற்று நோய் வந்து சாப்பிட்டதெல்லாம் ஒவ்வொரு முறையும் வெளியே வந்த நிலையில் எங்கள் நண்பர் தன் கஷ்டங்களையெல்லாம் மீறி சித்தப்பாவை காப்பாற்ற எவ்வளவோ பாடுபட்டார். கடைசியில் அவரின் சித்தப்பா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். 'என்னைக் காப்பாற்ற முயற்சித்து உன் சேமிப்பையெல்லாம் செலவழிக்காதே. இனி நான் உயிரோடு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. உன் சின்னமாவை மட்டும் காப்பாற்று' என்று எழுதி வைத்து விட்டு இறந்து போனார்.

இப்படி மன உணர்வுகளை வெளிப்படுத்த அன்று கடிதங்கள் தான் அனைவருக்கும் துணையாக இருந்தன. சிவாஜி கூட ஒரு படத்தில் பாடியிருப்பார் ' நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்!
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல, எண்ணம்!' என்று!!

என் பாட்டியின் தகப்பனார் என் பாட்டிக்குத் திருமணம் செய்வித்தபோது ஒரு நான்கு பக்க கடிதம் எழுதி தன் மகளுக்குக் கொடுத்தார். அதை நான் இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறேன். அதில் எப்படியெல்லாம் மாமியார், மாமியாரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேன்டும், கணவரிடம் எப்படியெல்லாம் கடமையுணர்வுடன் நடந்து கொள்ள‌ வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எழுதி, ' இதுவரை இவர்களின் மகள் என்று சொன்ன காலம் போய் இவளின் பெற்றோரா இவர்கள் என்று அனைவரும் பெருமிதப்படும்படி நீ நடந்து கொள்வதில் தான் எனக்குப் பெருமை இருக்கிறது!' என்று முடித்திருந்தார்கள். அதில் ஒரு வாசகம் என்னை மலைக்க வைத்தது. " உனக்கு நான் போட்டிருக்கும் நகைகள் என் கெளரத்திற்காகவும் உன் மதிப்பிற்காகவும் போட்டவை. அவ்வளவு தான். ஆனால் அவை என்றும் உன் புகுந்த வீட்டிற்கு உன் கணவருக்குச் சொந்தமானவை. உன் கணவர் உன்னை ஏதாவது ஒரு நகையைக் கழற்றித்தரச்சொன்னால் சிறிது கூட மன சலனமோ அல்லது முகச்சுருக்கமோ இல்லாமல் அவரிடம் கொடுத்து விட வேண்டும். அது தான் ஒரு நல்ல மனைவிக்கு அழகு!" எப்படிப்பட்ட கடிதம் இது!

இப்படிப்பட்ட, அன்பையும் கடமையும் தாங்கி வந்த‌ கடிதங்கள் பற்றி இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியுமா? இத்துடனிருக்கும் கடிதத்தைப்பாருங்கள்.காலஞ்சென்ற குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி எழுதியிருக்கிறார், ' ஏதேனும் ஒரு காரணத்தினால் தபால் நிலையங்களெல்லாம் இழுத்து மூடப்பட்டு விட்டால் உலகமே நிலை குத்திப்போய் விடும்' என்று! கடிதமென்பது எத்தகைய சிறப்புகளைக்கொண்டது என்று அவர் எப்படியெல்லாம் விவரித்திருக்கிறார் பாருங்கள்!!

கடிதங்கள் என்று நினைக்கும் போதே நிச்சயம் இந்த இரண்டு பாடல்களும் நினைவில் வரும் எல்லோருக்கும்!


விரிவான கடிதங்கள் போய் சுருக்கமான ஈமெயில்கள் வந்தன. அப்புறம் சின்ன சின்ன மெஸேஜ்கள்! அவைகளும் தேய்ந்து போய் மொபைல் ஃபோன் வந்தன! அப்புறம் உலகமும் உள்ளங்களும் சுருங்கியே போய் விட்டன! அப்புறம் மொபைல் ஃபோனில் பேசுவதும் இப்போதும் சுருங்கி விட்டன! சார்ஜ் தீர்ந்து போய் விட்டது, கிரெடிட் இல்லை, கனெக்க்ஷன் இல்லை என்று பல காரணங்கள்! மொத்தத்தில் உறவுகள் எல்லாமே சுருங்கிப்போய் விட்டன! இல்லை, மனங்கள் தான் மிகவும் சுருங்கிப்போய் விட்டன!


Thursday, 30 March 2017

முருங்கைக்காய் ரசம்!!!

வெகு நாட்களுக்குப்பிறகு ஒரு சமயல் குறிப்பு. ஊரெல்லாம் பச்சைப்பசேலென்று அருமையாக முருங்கைக்காய் கிடைக்கிறது. பொதுவாய் முருங்கைக்காயை வாரம் இருமுறை சமைப்பதால் இரத்தத்திற்கும் சிறுநீருக்கும் சக்தி கிடைக்கின்றன. முருங்கைக்காயை ரசமாகவோ அதன் சாற்றை வைத்தோ சமைத்து உண்பது தோல் சம்பந்தமான பிரச்சினைகளையும் நீக்குகிறது என்றும் சொல்கிறார்கள். சதைப்பற்றான ஒரு முருங்கைக்காயை வைத்து ஒரு சமையல்!மிளகு ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், எலுமிச்சை ரசம் என்று பழைய வகை ரசங்களுக்கு அப்பால் இப்போது வாழைத்தண்டு ரசம், முள்ளங்கி ரசம், கண்டத்திப்பிலி ரசம், முடக்கத்தான் ரசம் என்று பல புதிய வகை ரசங்களையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இப்போது முருங்கைக்காய் ரசம்!
முருங்கைக்காய் ரசம்!

செய்வதற்கான பொருள்கள்:

சதைப்பற்றான ஒரு நீளமான முருங்கைக்காய்
தக்காளிப்பழம் பெரிதாக ஒன்று
சின்ன வெங்காயம் 4
தேங்காய்த்துருவல் ஒரு மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
துருவிய இஞ்சி அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லித்தழை 2 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நெய் 1 ஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன்
கட்டிப்பெருங்காயம் 1 துண்டு
புளி சிறு எலுமிச்சம்பழ அளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
சாம்பார்ப்பொடி அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் துண்டு துண்டாய் அரிந்த முருங்கைக்காயைப்போட்டு துவரம்பருப்பு, மஞ்சள் தூள், தக்காளித்துண்டுகள் சேர்த்து அவை மூழ்க்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசிலுக்கு வேக வைக்கவும்.
ஆறியதும் முருங்கை, தக்காளி, பருப்பை கையால் நன்கு பிசைந்து, முருங்கைக்காய் தோல்களை அப்புறப்படுத்தவும்.
இந்த முருங்கைக்காய், தக்காளி கலவையுடன் மல்லி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
புளியைக்கரைத்து சேர்க்கவும்.
மொத்தம் நாலைந்து தம்ளர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள‌வும்.
தேங்காய், இஞ்சி, பூண்டு, மிளகு, சேரகம், சின்ன வெங்காயம் இவற்றை ஒன்று பாதியாக தட்டி சேர்க்கவும்.
உப்பு சேர்த்து ருசியையையும் உப்பையும் சரி பார்த்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகும் பெருங்காயமும் போட்டு கடுகு வெடித்ததும் ரசத்தைக் கொட்டவும்.
ரசம் நன்கு நுரைத்து வரும்போது சாம்பார்ப்பொடியைத்தூவி மறுபடியும் ஒரு கொதி வரும்போது தீயை அணத்து ரசத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
சுவையான முருங்கைக்காய் ரசம் தயார்!

Thursday, 16 March 2017

முத்துக்குவியல்-45!!!

ஆதங்க முத்து:

சென்ற வாரம் பெங்களூரிலிருந்து தஞ்சைக்கு இரவில்      பயணித்தோம். இரவு ஏழு மணிக்கு ரயில் புறப்பட ஆரம்பித்ததும் 10 பேர் அடங்கிய குழு வந்து சேர்ந்தது. அதில் இருவர் எங்களுக்கு மேல் படுக்கையிலும் இன்னும் இருவர் எதிர்ப்படுக்கைகளிலும் மற்றவர்கள் அடுத்தடுத்த பெட்டிகளிலும் அமர்ந்தனர். அதில் வயது முதிர்ந்த ஒருவர் இருந்தார். எல்லோரும் மாற்றி மாற்றி அவரிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரே சப்தம், இரைச்சல், உணவை எடுத்து ஒருத்தர் மாற்றி இன்னொருத்தரிடம் கொடுப்பதுமாக அமைதி என்பது ஒரு சதவிகிதம் கூட அங்கில்லை. அங்கு நான் மட்டும்தான் பெண். நானும் என் கணவரும் ஒரு வழியாக சாப்பிட்டு, படுக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னதும் மெதுவாக எழுந்து நின்றார்கள். நாங்கள் படுக்கையை விரித்து படுத்ததும் பார்த்தால் எங்கள் காலடியில் சிலர் அமர்ந்து கொண்டு மறுபடியும் சுவாரஸ்யமான பேச்சைத் தொடர்ந்தார்கள். நாங்கள் எங்கள் பக்கம் லைட்டை 'ஆஃப்' செய்தால் எதிர்ப்பக்கம் லைட்டைப்போட்டுக்கொண்டு, இரவு 11 மணி வரை இந்தக் கதை தொடர்ந்தது. என் கணவர் உறங்கி விட்டார்கள். என்னால் இந்த சப்தத்தில் உறங்க முடியவில்லை. பாத்ரூம் பக்கம் அடிக்கடி போய் வந்தேன். அப்படியும்கூட ஒரு அடிப்படை நாகரீகமோ, அடுத்தவருடைய அமைதிக்கு பங்கம் விளைவிக்கிறோமே என்கிற சிறு குற்ற உணர்வு கூட அவர்களிடம் இல்லை. 12 மணிக்கு மேல் தான் உறங்க ஆரம்பித்தேன். இரவுப்பயணம் என்பது நெடிய பயணத்தை உறங்கியவாறே கழித்து விடலாமென்பதுடன் உடல் களைப்பையும் குறைத்துக்கொன்டு விடலாமென்று தான் நிறைய பேர் இரவுப்பயணத்தை மேற்கொள்ளுகிறார்கள். எத்தனை நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க முடியாதவர்கள் கூடவே பயணம் செய்கிறார்கள்! அடிப்படை நாகரீகமோ மனிதாபிமான உணர்வோ இல்லாத இந்த மாதிரி மனிதர்களை என்ன செய்வது?

அசத்திய முத்து:

அபிலாஷா ஒரு மாற்றுத்திறனாளி. சிறு குழந்தையாக ஒரு வயதில் இருந்த போது ஃபிட்ஸ் வந்திருக்கிறது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மருந்தின் அளவை அதிகமாய்க்கொடுத்ததால் இவரது வலது காது கேட்காமல் போய் விட்டது. கேட்க முடியாததால் பேசும் திறனும் போய் விட்டது. நான்கு வயதில் இவருக்கு இவரைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காது கேட்கும் திறனுக்காக ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருக்க மறு பக்கம் ஐந்து வயதில் சென்னையில் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த இவர் மற்ற  ஆசிரியைகளின் கிண்டல்களால் மிகவும் மன பாதிப்பையடைந்தார்.வேறு பள்ளியில் சேர்த்த பிறகு தான் ஆசிரியைகளின் அன்பாலும் அரவணைப்பாலும் இவருக்கு தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது. மற்ற‌வர்கள் பரதம் ஆடும்போது தரையில் ஏற்படும் அதிர்வை வைத்து, அதை இசையாக மாற்றி இவர் பரதம் கற்றுக்கொண்டார். படிப்பு, ஓவியம், அபாக்ஸ் என இவர் இப்போது சகலகலாவல்லியாக இருக்கிறார். தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப்போல அனைத்தும் சாதிக்க வேண்டுமென்ற உந்துதலில் 'Voice of the Unheard ' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர்கள் தங்கள் குறைகளைப்பற்றிய விழிப்புணர்வை முதலில் அடைய வேண்டூம் என்பது தான் இவரின் முதல் நோக்கம். அதோடு அவர்கள் தங்கள் பாதிப்புகளை எப்படியெல்லாம் சரி செய்யலாம், அதிக குறைகள் இல்லாதவர்கள் அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்லுவது, வசதி இல்லாதவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, சமூக வலைத்தளத்தில் இவரின் அமைப்பைப்பற்றிய செய்திகளை வெளியிடுவது, பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் கவுன்ஸிலிங் தருவது என்று உற்சாகமாக இருக்கிறார் இவர். வசதியற்றவர்களுக்கு ஸ்பீச் தெரஃபியும் காது கேட்கும் கருவியும் வாங்கித்த‌ர வேண்டும், கிராமங்களிலும் சேவைகள் செய்ய கால் பாதிக்க வேன்டும் என்று இவரின் கனவுகள் விரிகின்றன!

அருமையான முத்து:

அன்பான‌வர்கள் தரும் பழையமுதம்கூட அருமையான, சுவையான விருந்தாகும். அன்பில்லாதவர்கள் தரும் அறுசுவை விருந்து எந்த சுவையும் தருவதில்லை. இந்த அர்த்தத்தைப்பொதிந்து விவேக சிந்தாமணி சொல்லும் இந்தப்பாடலை படித்துப்பாருங்கள்!

விவேக சிந்தாமணி

ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாக்கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவார் ஆயின்
கப்பிய பசியினோடு
கடும்பசி ஆகும் தானே

[ கப்பிய பசி=முன்பிருந்த பசி]

அறிய வேண்டிய முத்து:

செம்மை வனம்

எதுவும் செய்யாத வேளாண்மை’ எனப்படும் இயற்கை வேளாண்மையின் களம். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோ மீட்டரில் செங்கிப்பட்டியை அடுத்த ஆச்சாம்பட்டியில் இருக்கிறது. இங்கு தேக்கு மரத்தில் தொடங்கி, மா, பலா, வாழை, காய்கனிகள் என குதிரைவாலி வரைக்கும் அனைத்து வகையான தாவர வகைகளும், அரியவகை மரங்களும் உண்டு. இயற்கை வேளாண்மையின் விளைநிலமாக மட்டும் இல்லாமல், மரபு மருத்துவம், மரபுத் தொழிற்பயிற்சி என மரபு வாழ்வியலின் ஆசான் பள்ளியாக இருக்கிறது செம்மை வனம்.

தொடர்புகொள்ள

தஞ்சாவூர்:

1961, விவேகானந்தர் தெரு,
ராஜாஜி நகர் விரிவு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் – 613 004.
தொலைபேசி: 04362 – 246774

இசை முத்து:

'சர்க்கர‌ முத்து' என்ற மலையாளத்திரைப்படத்தில் வரும் இந்த பாடலை பார்த்து, கேட்டு ரசியுங்கள்!
Friday, 3 March 2017

பேலியோ டயட்-பகுதி-2!!!

நம்முடைய ஒரு நாள் உணவில் 40 கிராம் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருந்தால் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது எரிசக்திக்காக எடுத்துக்கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எரிசக்தியாக எடுத்துக்கொள்ளும். அதனால் பாக்கியுள்ள கொழுப்பு நமது வயிற்றைச் சுற்றி சேகரமாகிறது. இதுவே தொப்பையாகிறது.

ஆண்டுக்கணக்கில் இது போன்ற உணவே சாப்பிடும்போது அதிக சர்க்கரையானது உடலில் தேங்கத் தேங்க இன்சுலின் உற்பத்தி தடை பட்டு நாம் சர்க்கரை நோயாளியாகிறோம்.

இத்தனை முக்கிய மூலப்பொருளான கொழுப்பை நம் உடல் தானே தயாரித்துக்கொள்ளும் வலிமையைப் பெற்றுள்ளது. நம் உடலில் ஒவ்வொரு செல்லும் கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இது தவிர நமக்குத் தேவையான கொழுப்பை நம் உடலிலிருந்தும் பெறலாம். கொழுப்பு இல்லையெனில் அட்ரினலின், கார்ட்டிக்கோல், விட்டமின்கள் போன்றவை நம் உடலில் உற்பத்தி ஆகாது. இந்தப்பணிகளுக்கு தினமும் 2000 மி.கி கொழுப்பு தேவைப்படுகிறது. அதை நம் உணவிலிருந்து சேகரிக்க கல்லீரலுக்கு பெரும் சக்தியும் நேரமும் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக நாம் கொழுப்பு மிகுந்த உணவையே உண்ணும்போது அதற்குத்தேவையான கொழுப்பு கிடைத்து விடுவதால் கல்லீரலுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. 
கல்லீரலிலிருந்து உடலெங்குமுள்ள செல்களுக்குத் தேவையான கொழுப்பை LDL [ LOW DENSITY LIPPO PROTEIN ] எனப்படும் கெட்ட கொழுப்பு எடுத்துச் செல்கிறது. செல்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை மீண்டும் கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கழிவுப்பொருளாய் வெளியேற்ற உதவுவது  HDL [ HIGH DENSITY LIPPO PROTEIN] எனப்படும் நல்ல கொழுப்பு. இந்த கெட்ட கொழுப்பு ஒரு புரதம் மட்டுமே. கொழுப்பு நீரில் கலக்காது. அதனால் கொழுப்பை புரதத்தில் ஏற்றி நம் கல்லீரல் உடலின் செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கிறது. இதனால்தான் நம் ஹார்மோன் உற்பத்தி தடைபெறாது நடைபெறுகிறது.

வெள்ளை அரிசி, மைதா, சர்க்கரை போன்றவைகளாலும் TRANS FAT எனப்படும் செயற்கை கொழுப்புக்களை உண்பதாலும் உள் காயங்கள் உண்டாகின்றன.
 
உதாரணத்திற்கு சமையல் எண்ணையை சாதாரணமாக சமைக்க முடியாது. இதன் அதிக உஷ்ண நிலையை கட்டுப்படுத்தி சமையலுக்கு ஏற்றதாக மாற்ற சூரியகாந்தி, சஃபோலா, நல்லெண்ணெய் போன்றவற்றை ஹைட்ரஜனேற்றம் என்கிற ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. அதாவது இந்த எண்ணெய்களிலுள்ள கொழுப்பில் ஒரு ஹைட்ரஜன் அணுவை செயற்கையாக நுழைக்கும்போது அந்த கொழுப்புகள் திரிந்து
TRANS FAT கொழுப்பாக மாறுகின்றன. அதன் பின் அந்த எண்ணெய்கள் உயர் சூட்டிற்கு சமையலுக்கு ஏற்றதாக மாறி விடுகின்றன. இயற்கை கொழுப்பிற்கு பழக்கப்பட்ட நம் கல்லீரல் செயற்கை கொழுப்பை ஏற்க முடியாமல் இதனால் உள்காயம் அடைகின்றன. இந்தக் காயம் உடல் உறுப்புகள் அனைத்திலும் ஏற்படுகின்றன. முதுகெலும்பில் ஏற்பட்டால் முதுகு வலி உண்டாகிறது. குடலில் ஏற்பட்டால் வயிற்று வலி உண்டாகிறது.தேங்காய் எண்ணெய், முட்டை போன்ற இயற்கை உணவில் இருக்கும் நிறை கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. தாய்ப்பாலில் இருக்கும் லாரிக் அமிலம் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காயெண்ணையில் மட்டுமே லாரிக் அமிலம் இருக்கிறது.
பேலியோ டயட் எடுத்துக்கொள்ளும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் 2ஸ்பூன் ஃபிளாக் சீட் சாப்பிட்டால் 1.2மி.கி இரும்புச் சத்து கிடைக்கும். தினமும் ஒரு தேங்காய் சாப்பிட்டால் 10 மி.கி இரும்புச்சத்து கிடைக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை உண்ணும்போது பால், தயிர் போன்ற கால்சியம் அதிகமான உணவைத் தவிர்க்க வேண்டும். கால்சியம் இரும்பின் அளவைக் குறைத்து விடும். ஹார்மோன்களை அழிக்கும் சோயா பீன்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

பேலியோவில் தவிர்க்கவேண்டியவை:

உருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி,               பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும்.

அரிசி. (பொன்னி, கைக்குத்தல், பாஸ்மதி, சுகர் ப்ரீ டயா ப்ரீ அரிசி, பாரம்பரிய அரிசி, ஆர்கானிக் அரிசி)
கோதுமை. (குட்டை கோதுமை, நெட்டை கோதுமை, டயாப்ரீ கோதுமை, சப்பாத்தி, ப்ரெட்)
மைதா. (கேக்குகள், பரோட்டாக்கள்)
பேக்கரி பொருட்கள்.(பேக்கரிகளில் விற்கப்படும் அனைத்தும்)
பழங்கள் / ஜூஸ்.
அனைத்துவகை இனிப்புகள் (நெய்யில் செய்யப்பட்டதுமுதல், டால்டாவில் செய்யப்பட்டது வரை)
தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுகர் ப்ரீ மாத்திரைகள்
ஓட்ஸ், மேகி,
பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடி டு குக் உணவுகள் அனைத்தும்.


ரிபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் சன்ப்ளவர், தேங்காய், நல்ல, கடலை , கடுகு , கனோலா, ரைஸ்பார்ன், டால்டா, பாமாயில் எண்ணெய்கள்.
ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும்.
அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்துவகை கடலைகள், (வேர்க்கடலை முதற்கொண்டு),
அனைத்து வகை பருப்புகள், புளி.
அனைத்துவகை சோயா பொருட்கள்.
காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ்,

பேலியோ டயட் எடுக்கும்போது சேர்க்க வேண்டிய காய்கறிகள்:
பரிந்துரைக்கப்படும் உணவுகள்:


கிழங்குகளில்லாத, பீன்ஸ் இல்லாத, பருப்புகள் இல்லாத காய்கறிகள்.
பாதாம், பிஸ்தா, மகடாமியா, வால்நட்ஸ்.
மஞ்சள் கருவுடன் முட்டைகள்.
கொழுப்புடன் கூடிய தோல் நீக்காத இறைச்சி வகைகள்.
அனைத்துவகை கடல் உணவுகள்.
நெய், வெண்ணெய், சீஸ், பனீர், முழுக்கொழுப்பு பால், தயிர், மோர்.
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.
அனைத்துவகை கீரைகள்.

அவகேடோ, தக்காளி, வெங்காயம், காரட், ப்ரோக்கலி, குடமிளகாய், பூசணி, சுரைக்காய், புடலை போன்ற நீர் அடங்கியிருக்கும் காய்கறிகள்,காளிபிளவர், முட்டைகோஸ்,   பாகற்காய், பீட்ரூட், தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ், காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி,

அசைவத்தில் அனைத்தும் உண்ணலாம். ஓமேகா 3 அடங்கியுள்ள முட்டை நல்லது. எதுவானாலும் எண்ணெயில் வறுத்த உணவை அடியோடு தவிர்க்க வேண்டும். நெய்யில் செய்த ஆம்லெட் சாப்பிடலாம்.

பேலியோ டயட் [ அசைவம்]: 

காலை உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது.

மதிய உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.

மாலைச் சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம்.

இரவு உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம்.
எண்ணெயில் பொறிக்கப்பட்ட இறைச்சியைத் தவிர்க்கவேண்டும். கருவாடு மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம். துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.சைவை பேலியோ டயட்:

காலை அதே உண‌வு தான். மதியம் நிறைய காய்கறிகள் சாலட், வேக வைத்த, நெய்யில் வதக்கிய காய்கறி வகைகள், முக்கியமாக காலிஃபிளவரை நிறைய உண்ணலாம். இரவில் பனீர் உணவுகள். வெண்ணெயில் தக்காளி, வெங்காய, குடமிள‌காய் வதக்கி பனீர் சேர்த்து கறி செய்து ஒரு பெரிய கப் சாப்பிடலாம். கூடவே ஏதேனும் ஒரு காய்கறி சூப் சாப்பிடலாம். கொடுக்கப்பட்டுள்ள காய்கறி வகைகளில் எப்படி வேண்டுமானாலும் தயார் செய்து சாப்பிடலாம்.


இந்த பேலியோ டயட்டில் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி தவிர இதர உடல் பிரச்னைகள், வியாதிகளை (உதா: கிட்னி பிரச்னை) கணக்கில் கொள்ளவில்லை. எனவே அதுபோன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் இன்றி இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.

என் மகனுக்கும் இந்த உணவு முறையை நான் வெளிநாட்டில் இருந்த போது பின்பற்றச் சொல்லி அவரும் பின்பற்றுகிறார்.

அவர் காலை உணவாக 50 பாதாம் கொட்டைகளும் [வறுத்தது], ஒரு ஆப்பிளும் எடுக்கிறார். [ ஆப்பிள் பேலியோ டயட்டில் கிடையாது. இருந்தாலும் என் மகன் அதை விரும்பி உண்கிறார்.]

மதியம் காய்கறி சால்ட், கீரை கூட்டு, 2 முட்டைகளில் ஆம்லட், இரவில் சில சமயம் கோழி பொடிமாஸ் அல்லது பனீர், குடமிளகாய், தக்காளி சேர்த்து ஒரு கறியுடன் ஒரு சூப்.

தினமணியில் பிரசுரமான பேலியோ டயட் எடுத்தவரது அனுபவத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

முட்டையுடன் கூடிய சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி உயர் ரத்த அழுத்தத்தை விரட்டியவர், திருமதி. டாலிபாலா. பெங்களூரில் வசிக்கும் 54 வயது இல்லத்தரசியான இவர், சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்தது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இருந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். தன் டயட் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

வாழ்க்கையில் இனிமேல் உடல் எடை குறையவே குறையாது என்கிற மனநிலையில் இருந்தேன். கூடவே சில உடல் உபாதைகளும் எனக்கு இருந்தது. வேறு ஒரு டயட்டால் என் எடை ஓரளவு குறைந்தாலும் அதனால் வேறுவிதமான உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் அந்த டயட்டைக் கைவிட்டேன். பழைய எடையை மீண்டும் அடைய நேரிட்டது. அப்போதுதான் நானே எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது. அதில் எடைக்குறைப்பு மற்றும் ஆரோக்கிய உடல்நலன் குறித்து படிக்க நிறைய இருக்கும். நியாண்டர் செல்வன் பரிந்துரைத்த தானியம் தவிர்த்த உணவுமுறை என்னை ஆச்சரியப்படுத்தியது. நிறைய கேள்விகளும் தோன்றின. முக்கியமாக இந்த உணவுமுறை, சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களுக்குச் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உயர் கொழுப்பு உணவு என்று வரும்போது சைவர்களுக்கு அதிகத் தேர்வுகள் இல்லை என்பதால். ஆனாலும் இந்த டயட்டை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. உடல் பிரச்னைகளால் இழந்தது ஏராளம் என்பதால் இனி புதிதாக இழக்க எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துடனும் கூடவே வீட்டினரின் எதிர்ப்புகளுடனும் இந்த டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

முட்டை, பாதாம், பனீர், காய்கறி என்று மிகக் குறைந்த அளவு உணவு வகைகளுடன் என்னுடைய பேலியோ டயட் ஆரம்பமானது. செல்வன் தவிர்க்கச் சொன்னதில் மிக முக்கியமானவை - தானியங்கள், சர்க்கரை, மாவுச்சத்து உணவுகள், ஹோட்டல் உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவை. இதில் எனக்குச் சர்க்கரையைத் தவிர்ப்பது கடினமாக இருக்கவில்லை. காபிக்குச் சர்க்கரை போட்டுக் குடிப்பதில்லை என்பதால். ஆனால் டீ-க்குச் சர்க்கரை சேர்ப்பேன். அதனால் டீ-யைச் சர்க்கரை இல்லாமல் குடிக்க முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. (ஆனால் அதுவும் இப்போது பழகி விட்டது.) அதேபோல காபி குடிக்கவில்லையென்றால் எனக்குத் தலைவலி வரும். இந்த நிலையெல்லாம் இந்தியாவில்தான். அமெரிக்கா போன பிறகு காபியை விட்டு விட்டேன். தலைவலியும் வரவில்லை.  (காபி குடிக்கவேண்டாம் என செல்வன் அறிவுறுத்தினார். காபியால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால். பல வருடங்களாக ஒரு நாளைக்கு ஏழெட்டு காபி குடித்துப் பழகியிருந்தாலும் உடல் நலனை முன்னிட்டு காபியை விட்டுவிட்டேன்.)

அரிசியைத் தவிர்ப்பது கஷ்டமாக இருக்கவில்லை. காரணம், வாரம் இரு முறைதான் சாதம் சாப்பிடுவேன். ஆனால், சப்பாத்தி உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? தினமும் மதியம் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி உண்பது பல வருடப் பழக்கம். முதல் இரண்டு நாள்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எப்படியோ அதையும் தவிர்த்தபடி பேலியோ டயட்டைத் தொடர்தேன். இதனால் எனக்கு எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை. தானியம் இல்லாத உணவுமுறை தலைவலியை உண்டாக்கும், வாந்தி வரும், மயக்கம் ஏற்படும் என்றெல்லாம் சிலர் பயமுறுத்தினார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பசித்தது. பிறகு அதுவும் பழகிவிட்டது. நிறைய காய்கறிகள், பனீர், பாதாம் எல்லாம் உண்பேன். முதலில் முட்டை சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன். பிறகு அதையும் சாப்பிட ஆரம்பித்ததால் பசி ஏற்படும் பிரச்னையும் அகன்றது.

பல வருடங்களாக கேல்லோக்ஸ் (kellogs) தான் எனது காலை உணவு . இல்லாவிட்டால் ஓட்ஸ் (oats). இந்த இரண்டு உணவுகளும் என் எடையைக் குறைக்க உதவும் என்று நம்பியிருந்தேன். பேலியோ டயட்டில் சீரியல் உணவுக்கு (breakfast cereal) இடமில்லை. அதனால் அவற்றையும் தவிர்த்தேன். அமெரிக்காவில் இருந்தபோது உணவகங்களில் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே சைவ உணவு என்றாலே வெறும் இலை, தழை நிரம்பிய சாலட்தான் அதிகம் கிடைக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பேலியோ உணவு முறையினால், முதல் வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்தது. உடல் எடை குறைந்தது. ரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆனது. மாத முடிவில் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டேன். அளவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், பல வருடங்களாக எடுத்துக்கொண்டிருந்த கொலஸ்டிரால் குறைப்பு மாத்திரையான ஸ்டாடினை (statin) நிறுத்தினேன்.

முதல் ஏழு மாதங்களில், கிட்டத்தட்ட பத்துகிலோ எடை குறைந்தது. என் வயதுக்கு இந்த முன்னேற்றம் மிக அதிகம்தான். எடை குறைந்ததால் நடப்பது எளிதாகிவிட்டது. ஆறு கிலோமீட்டர் தொடர்ந்து நடக்க முடிகிறது.

இந்த உணவுப் பழக்கத்தால் எனக்கு ஏற்பட்ட நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். எல்லா நன்மைகளையும் என்னால் ஞாபகம் வைத்துச் சொல்லமுடியாவிட்டாலும், முடிந்ததைச் சொல்கிறேன்:

54 வயதில் சைவ உணவுப் பழக்கம் கொண்ட நான் முட்டை மட்டும் சேர்த்து கொண்டு இந்த டயட்டைப் பின்பற்றியதால் கிடைத்த நன்மைகள்:

1. எடைக் குறைப்பு. 17 கிலோ.

2. முதலில் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு மூன்று மாத்திரைகளுடன் 140/90 என்றிருந்தது. ஆனால், பேலியோ டயட்டால் மளமளவென 110/70க்குச் சரிந்தது. இன்று வரை இதே அளவுதான். ஒரே ஒரு மாத்திரை மட்டுமே இப்போது எடுத்துக்கொள்கிறேன்.  ‘ரத்த அழுத்தம் இறங்கி நார்மலாக ஆனாலும், சில வருடங்கள் மாத்திரையை நிறுத்தவேண்டாம்’ என மருத்துவர் அறிவுறுத்தியதால் ஒரு மாத்திரையை மட்டும் உட்கொள்கிறேன். பத்து ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருவதால், அதை மெதுவாகத்தான் நிறுத்தவேண்டும் என்பது என் மருத்துவரின் பரிந்துரை. ஆனால் என்னுடைய ஃபிரஷர் அளவுகள் நார்மலாகவே உள்ளன.

3. இதயத்துடிப்பு மிக அதிகமாக இருந்ததால் அதற்காகப் பல வருடங்களாக எடுத்துவந்த மாத்திரையையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டேன்.

4. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் ஸ்டாட்டின் (Statin) என்கிற மாத்திரையைப் பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருந்தேன். பேலியோ டயட்டின் தைரியத்தில் அதையும் நானே நிறுத்திவிட்டேன். பிறகு, என் மருத்துவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ரத்தப் பரிசோதனை அறிக்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

5. அடுத்தபடியாக என் தோல் நல்ல பளபளப்பாக மாறியுள்ளது. இது நானாகச் சொல்லவில்லை. நண்பர்களின் கருத்து.

6. முன்பு, நடைப் பயிற்சியில் என்னால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்கமுடியாது. இப்போது சர்வ சாதாரணமாக ஆறு கிலோமீட்டருக்கு மேல் நடக்கிறேன்.

7. எனக்குக் கொஞ்சம் ஹார்மோன் பிரச்சனை உண்டு. அதன் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது.

8. உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

9. காலில் தசைப்பிடிப்பு அடிக்கடி வரும். அது சுத்தமாகக் குறைந்துவிட்டது.

10. முதலில் இருந்த பல் வலித் தொந்தரவும் இப்போது குறைந்துவிட்டது. நூறு பாதாம் தினமும் சாப்பிடுகிறேனே!

இப்படிப் பல விதங்களில் எனக்கு நன்மைகள். பேலியோ டயட் என்பது வெறும் டயட்டாக மட்டும் இல்லாமல், என் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது.


 

இறுதியாக ஒன்று! திரு.நியாண்டர் செல்வன் எழுதிய 'பேலியோ டயட்' என்ற புத்தகத்தைப்படித்த பின் எனக்கு ஏற்பட்ட பாதிப்பினால்தான் இந்த பதிவையே நான் எழுத வந்தேன். அசைவம் தான் உண்ன வேண்டுமென்பதில்லை. 
சைவ பேலியோ டயட்டை பின்பற்றி மாவுப்பொருள்கள் சார்ந்த உணவை நீக்கி  நிறைய காய்கறிகளும் பாதாம், பனீர் உணவுகளும் எடுத்து வந்தாலே போதும், நாம் சர்க்கரையை வெல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை! அவரின் இந்தப்புத்தகம் எல்லா புத்தக ஸ்டால்களிலும் கிடைக்கிறது.