Saturday 31 December 2016

இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

வலையுலக சகோதர, சகோதரியற்கு இனிய                      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

வற்றாத அன்பும் குறைவில்லாத நன்னலமும்    மகிழ்ச்சியும் உற்சாகமும் புது மழையாய்    அனைவரது வீட்டிலும் பொழியட்டும்!! 



Monday 26 December 2016

உலகின் இன்னொரு அதிசயம்!!!



உலகிலேயே மிகப்பெரிய, பரந்த தீம் பார்க் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் துபாயில் திறந்துள்ளார்கள். அது தான்

 IMG WORLDS OF ADVENTURE!!!

ஒரு நாளைக்கு 20000 பேர்கள் வருகை தந்து ரசிக்கக்கூடிய அளவிற்கு கொள்ளளவு உடைய பிரம்மாண்டமான பார்க்காக இது விளங்குகிறது. அமீரகத்தின் மிகப்பெரிய செல்வந்தர்களான கலதாரி குழுமம் இதனை பெருஞ்செலவு செய்து நிர்மாணித்திருக்கிரார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் இது இன்னும் மிகப்பெரிய தீம் பார்க்காக உருவெடுக்கும் என்கிறார்கள்.ஒரு லட்சத்து நாற்பதாயிரம் சதுர மீட்டர் இடத்தில் இந்த கனவுலகம் அமைந்திருக்கிறது.  





இதன் கூரை சவுண்ட் ப்ரூஃப் செய்யப்பட்டது. நிறைய இடங்கள் அங்கங்கே அமரவும் உணவகங்கள் அங்கங்கே உண்ணவும் இருக்கின்றன.

ENTRANCE!
உலக நாடுகளின் அத்தனை பேர்களும் சாப்பிடக்கூடிய வகையில் அவை அமைந்துள்ளன. சில இடங்களில் மொபைல், காமிரா அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றையும் உடமைகளையும் பத்திரமாக வைத்து பாதுகாக்க அங்கங்கே கட்டணத்துடன் கூடிய லாக்கர்களையும் அமைத்திருக்கிறார்கள். உள்ளே முழுவதுமாக குளிர்ப்பதனம் செய்யப்பட்டிருப்பதால் அதுவும்  சில இடங்களில் மிகவும் சில்லென்று இருப்பதால் ஸ்வெட்டர் தேவைப்படுகிறது. அங்கங்கே கேரளாவின் 'டீக்கடை' கூட சூடாக டீ குடிப்பதற்கும் சமோசா உண்பதற்கும்  இருக்கிறது!



நுழைவுக்கட்டணம் 300 திர்ஹம்ஸ் [ கிட்டத்தட்ட 6000 ரூபாய்] பண்டிகை காலங்களிலும் முக்கியமான நாட்களிலும் 50 அல்லது 100 திரஹம்ஸ் நுழைவுக்கட்டணத்தில் குறைக்கிறார்கள். காலை பத்து மணிக்கு உள்ளே நுழைந்தால் இரவு ஒன்பது வரை அங்கே விளையாடிக்கொண்டிருக்கலாம்! ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஷோவிற்கும் சிறுவர்கள் இத்தனை அடி உயரம் இருக்க வேன்டும், இத்தனை வயதிற்கு மேற்பட்டு இருக்க வேன்டும் என்பது போல நிறைய சட்ட திட்டங்கள் எல்லாம் உண்டு!



இது 4 உலகமாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது டிஸ்னி மார்வெல் எனப்படுவது.  [ Marvel zone ]





 இதில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலான்டுடன் இணைந்து டிஸ்னி உலகமாய் பல வித விளையாட்டுக்கள், பொழுது போக்குத் திட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தெருக்கள் பழங்கால அமெரிக்க நகரத்து சாலைகள் வடிவில்! ஸ்பைடர்மேன், Incredible HULK போன்ற சாகச வீரர்களை தியேட்டரில் அமர்ந்து பார்த்து ரசிக்கலாம். அவர்கள் சாகசங்களை ரசிக்கலாம். நாங்கள் Incredible HULK ஐப் பார்க்கச் சென்றோம்.



இரு வட்டங்களான சோபாவில் உட்கார்ந்ததும் சீட் பெல்ட் போட்டிருக்கிறோமா என்று செக்யூரிட்டிகள் வந்து பரிசோதித்த பிறகு ஷோ ஆரம்பிக்கிறார்கள். கும்மிருட்டில் பறந்து பறந்து 3டி ல் சண்டை போடுகிறார் Incredible HULK!! . சோஃபா அப்படியே சுற்றுகிற‌து. வட்டமடிக்கிறது. அந்த அனுபவம் பிரமிப்பாய், அசத்தலாய் மிக அருமை!

என் பேரன்!
[CARTOON NETWORK ]

அடுத்தது கார்ட்டூன் நெட்வொர்க்குடன் இணைந்து செய்திருக்கிறார்கள்.
 மிகப்பெரிய தியேட்டர், விளையாட்டுக்கள் அடங்கிய பகுதி. சிறுவர்களின் கூட்டத்தை அதிக அளவில் காணலாம் இங்கே.



மூன்றாவது Lost Valley என்ற தனி உலகம். [ LOST VALLEY]

கலதாரி என்ற அரேபிய சகோதர்கள் தங்கள் கனவுலகமாக தனிப்பட்ட முறையில் இதை நிர்மாணித்திருக்கிறார்கள். பழங்கால டயனோஸர்கள் உலகமாக பல பாகங்களாக இது அமைந்திருக்கிறது.  FORBIDDEN TERRITORY என்ற இடத்திற்குள் நாங்கள் நுழைந்தோம்.



மேற்புறம் திறந்த ஒரு பழங்கால வான் போன்ற அமைப்பில் நாங்கள் ஏறி அமர்ந்து ஸீட் பெல்ட் போட்ட‌தும் எதிரே கோட்டைக்கதவு போன்றதொரு கதவு திறக்க, உள்ளே நாங்கள் அமர்ந்திருந்த ஆட்டமாடிக் வாகனம் நுழைந்தது!.



கும்மென்ற இருட்டில் காடு. அங்கங்கே மெல்லிய வெளிச்சம். உறுமுகின்ற, பறக்கின்ற, தாவுகின்ற, விலங்கினங்கள்! டயனோஸர்கள்! மிக அருகே ராட்சஸ சிலந்திகள்! எங்கள் வாகனம் சுற்றுகிறது, சுழல்கிறது, திடீரென்று அந்த விலங்கினங்களுக்கேற்ப முன்னே ஒரு தாவல், பின்னே ஒரு பதுங்குதல்! என் பேரன் என் கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். அற்புதமான இந்தப்பயணம் விசித்திரமான காட்டில் 15 நிமிடங்கள் சுற்றி விட்டு ஏறிய இடத்திற்கு வந்து சேர்ந்தது!



இது போல நிறைய உலகங்கள்!



நான்காவதாக இருப்பது IMG BOULEVARD!!

இங்கே தான் டீன் ஏஜ் இளைஞர்கள் மட்டுமல்ல, பெரியவர்களின் கூட்டமும் அலை மோதுகிறது. அதற்குக் காரணம் அங்கேயுள்ள‌ The Haunted Hotel! 

இதற்குள் நுழைந்தால் அதற்குள் இருக்கும் ஆவிகள், மயிர்கூச்செரியும் பயங்கர கூக்குர‌ல்கள், தடுமாறச்செய்யும் அனுபவங்கள் காரணமாக, 'தைரியம் உள்ள‌வர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். இதய நோயுள்ளவர்கள் உள்ளே செல்லுதல் கூடாது' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வரிசையில் நின்று கொண்டிருந்த‌ கூட்டத்தைப்பார்த்து விட்டு சலிப்புடன் என் மகன் வெளியே வந்து விட்டார். மகனும் மகளும் பேரனுடன் வேறு பகுதியில் விளையாடச் செல்ல, நானும் என் கணவரும் ஓய்வெடுப்பதற்காக டீயும் சமோசாவும் வாங்கிக்கொண்டு அருகிலுள்ள சிறு பார்க் போன்ற பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று எங்கள் பின்னாலுள்ள கதவு திறந்தது. நடுங்கிக்கொண்டிருந்த ஒர் பெண்ணை செக்யூரிட்டி ஒருத்தரும் ஒரு பெண்ணும் கொண்டு வந்து பக்கத்து பெஞ்சில் அமர வைத்து தண்ணீர் குடிக்க வைத்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது அந்தப் பெண் அந்த Haunted Hotel உள்ளே சென்று பார்த்த அனுபவத்தால் பாதிக்கப்பட்டவர் என்று! ரொம்ப நேரம் நடுக்கம் குறையவேயில்லை. தெளிந்ததும் அந்தப்பெண் சின்ன சிரிப்புடன் நகர்ந்து சென்று விட்டது.
அப்புறம் இன்னொரு பெண் அதே போல்! . மூன்றாவதாக வந்த பெண் எழுந்திருக்கவே இல்லை. அழுகையும் நடுக்கமும் மிரட்சியும் நிற்கவேயில்லை. அப்புறம் ஒரு சிறு ஆம்புலன்ஸ் கொன்டு வந்து அந்தப்பெண்ணை அனுப்பி வைத்தார்கள்!!



முற்றிலும் வித்தியாசமான,  திரும்பவும் விரும்பிச் செல்லும் அனுபவமாக அமைந்தது இந்த பயணம்!!

Wednesday 14 December 2016

ஒரு சாதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

ஒரு சாதனை,சகாப்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது போகும் வழியெங்கும் இனிமையை நம் செவிகளிலும் நிறைவை நம் மனங்களிலும் நிரப்பிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அது தான்
 ஸ்ரீபதி பண்டிதராதையுல பாலசுப்ரமணியம் என்றறியப்படும் பின்னணி இசைப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலிசை!

ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு தற்போது 70 வயது முடிந்திருக்கிறது! ஆனால் இன்னும் அவரின் இனிமையான குரலுக்கு வயதாகவில்லை. கம்பீரமும் குறையவில்லை!




பாடகர் என்பதோடு இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று பல அவதாரங்கள் அவர் எடுத்திருக்கிறார். அதிக பாட்டுக்கள் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருக்கிறார். இந்திய அரசாங்க  பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் 25 முறை ஆந்திராவின் ந்ந்தி விருதுகளும் நான்கு முறை தமிழக அரசு விருதுகளும் மூன்று முறை கர்நாடகா அரசு விருதுகளும் பெற்றவர்.

தமிழக, கர்நாடக, தெலுங்கு அரசு விருதுகள், இந்த மூன்று மாநில 'டாக்டர்' விருதுகள்,  ஆறு முறைகள் தேசீய விருதுகள் இன்னும் பல நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கி இவர் குவித்திருக்கிறார். 1966ல் மரியாதை ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் பாடகாரத் தொடங்கிய இவரின் இசைப்பயணம் தமிழில் பயணிக்க ஆரம்பித்தபோது எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் பாடியதன் மூலம் புகழேணியில் ஏற ஆரம்பித்தது. இதுவரை 40000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ள ஒரே ஆண் பாடகர். [பெண் பாடகரில் அந்த சாதனை ஏற்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.] ஒரே நாளில் கன்னட இசை அமைப்பாளர் உபேந்திர குமாரிடம் 21 பாடல்கள் பதிவு செய்திருக்கிறார். இது ஒரு இசை சாதனையாக கருதப்படுகிறது. தமிழில் அதிக பட்சம் ஒரே நாளில் 19 பாடல்களை பதிவு செய்திருக்கிறார்.




சென்ற 9ந்தேதி இவரின் இசைக்கச்சேரி துபாயின் மிகப்பெரிய அரங்கொன்றில் நடைபெற்றது. இதற்கு முன்னே இவர் இங்கே பல முறைகள் இசை விருந்தளிக்க வந்திருக்கிறாரென்றாலும் இந்த முறை வந்த காரணம் வித்தியாசமானது. இசையுலகில் இவரின் பயணம் 50 வருடங்களை முடித்திருக்கிற வகையில் உலக நாடுகள் பலவற்றுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்து இசை விருந்து அளித்துக்கொன்டிருக்கிறார். இந்த இசை விருந்து எட்டு முப்பதுக்கு ஆரம்பித்து நள்ளிரவைத்தாண்டி சென்றது. இந்த இசைத்தேனை நானும் சுவைத்து அனுபவித்தேன். "என்னை இத்தனை ஆண்டுகள் ரசித்து இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் என் ரசிகர்களுக்கு அவர்களைத்தேடிச் சென்று நன்றி சொல்லவே இந்தப்பயணம் "என்றார்




இவர். இணைந்து பாடிய எஸ்.பி.ஷைலஜா, சித்ரா, ஸ்வேதா மோகன், எஸ்.பி.சரண், கார்த்திக் அனைவரும் அந்த இரவு நேரத்தை மிகவும் இனிமையடையச் செய்தார்கள்! முதல் பாடல் ஆரம்பிக்கையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எல்லோரையும் எழுந்து நின்று இரங்கல் தெரிவிக்கச் சொன்னார். ஜெயலலிதா பாடிய நான்கு பாடல்களில் மூன்று இவருடன் பாடியதாகச் சொல்லி அதில் ஒன்றை இவர் தேர்ந்தெடுத்துப் பாடி அவருக்கு முதல் வணக்கத்தைத் தெரிவித்தது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மீது அதிக மரியாதையைத் தோற்றுவித்தது.

இளம் வயதில் இவரின் குரலோடு தான் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். இவரின் எந்தப்பாடல் மிக இனிமை என்ற கேள்விக்கு என்றுமே பதில் இல்லை. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்த இவரது சில பாடல்களை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.







Sunday 4 December 2016

குளோபல் வில்லேஜ்-2016!!!!

இந்த ஆண்டும் குளோபல் வில்லேஜ் வண்ண விளக்குகளுடனும் எழிலார்ந்த, பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் துபாயில்   பிரகாசிக்கத்தொடங்கி விட்டது. இது மார்ச் முடிய நடந்து கொண்டிருக்குமென்றாலும் வழக்கம்போல அதிக குளிர் வருவதற்கு முன் நாங்கள் சென்று விட்டோம். இந்த முறை அமெரிக்க அரங்கம் இல்லை. மேலும் மலேஷியா சிங்கப்பூரைக்காணோம். வழக்கம்போல ஒரு சில அரங்கங்க‌ளுக்குத்தான் செல்ல முடிந்தது. அதற்கே மூன்று மணி நேரமாகி விட்டது. மாலை 4 மணியிலிருந்து நள்ளிரவு வரை சுற்றினால் ஓரளவு சுற்றிபார்த்த திருப்தி கிட்டும்!

நுழைவுப்பகுதியில் இருக்கும் 'DOME'!!
கேரளாவின் கல்யாண் ஜுவெல்லரி தனக்கென எழுப்பியிருக்கும் பிரம்மாண்டமான அரங்கம்!



ஈரான் அரங்கத்தின் உள்பகுதி!
















தாய்லாந்து அரங்கத்துள்ளே நடனம்!
சிறுவர்கள் கார் ஓட்டவென்றே ஒரு பகுதி இருக்கிறது. கட்டணம் கட்டியதும் எப்படி காரை ஓட்டுவது என்று சொல்லிக்கொடுத்து அதன் பிறகே காரை ஒட்ட அனுமதிக்கிறார்கள். பத்தே நிமிடம் தான் ஒவ்வொருத்தருக்கும்! என் பேரன் தலையில் உடன்! [பனி கொட்டியதால்!]