Tuesday 26 April 2016

குழந்தைகளும் வலிகளும்!!

முன்பெல்லாம் ஒரு குழந்தையின் பிறப்பு இப்போது போலவே கொண்டாடக்கூடியதாக இருந்தாலும் அதை வளர்ப்பதென்பது வீட்டிலுக்கும் பெரியவர்கள், அதுவும் பாட்டிமார்களின் உதவிகளால் ஒரு பெண்ணுக்கு சாதாரணமாகவே, சுலபமாகவே இருந்து வந்தது. குழந்தைகளின் உடல்நிலைக்கு பெரியவர்கள் பல வித கைவைத்தியம் செய்தார்கள். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தன. வீட்டிலிருந்த ஆண்கள் கண்டிப்பையும் உழைப்பையும் சொல்லிக்கொடுத்தார்கள். குழந்தைகள் உரமுடனும் நல்லொழுக்கங்களுடனும் வளர்ந்தார்கள்! அது பின்னாளில் அறுபது வயதுக்குப்பின்னாலும்கூட  மனதையும் உடலையும் திடகாத்திரமாக இருக்க வைத்தன! ஆனால் இப்போதோ கூட்டுக்குடும்பங்கள் அருகி விட்ட நிலையில் தொட்டதற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடுவது அதிகமாகி விட்டது. தனக்கு எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையும் அதிகமாகி விட்டது. அது குழந்தைகள் விஷயத்தில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை அலசுவது தான் இந்தப்பதிவின் நோக்கம்!

மனித உடலில் இதயம் எலும்புக்கூட்டுக்குள்ளும் மூளை மண்டையோட்டுக்குள்ளும் மிக பத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மரபணுக்கள் காரணமாக கோடியில் 10 குழந்தைகள் இதயம் உடலுக்கு வெளியே தொங்கிய நிலையில் பிறக்கின்றன. இப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் விரைவில் மரணித்து விடுகின்றன அல்லது பிறப்பதற்கு முன்னாலேயே கருவிலேயே அழிந்து விடுகின்றன 

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த தெரஸா என்பவருக்கு இதயம் உடலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்க குழந்தை சாதாரணமாகவே பிறந்தது! மருத்துவர்களுக்கு இது ஒரு அதிசயமாக இருந்தது. காரணம், தெரஸா இப்போது இருப்பது போல அல்ட்ரா செளண்ட் அல்லது சோனோகிராம் போன்ற ஆய்வுகள் அல்லது வீரீயமான மருந்துகள் எதையுமே மேற்கொள்ளவில்லை.

 

 
 
இந்தக்குழந்தையின் மார்பின் உள்பகுதியில் இதயம் இருப்பதற்கான அறைகளே இல்லை. அது அறைகுறையாக வளர்ந்த நிலையில் இருந்ததுடன், மார்பு எலும்புகளுமே முழுமையான வளர்ச்சியில்லாதிருந்தது. எனவே இதயத்தை உள்ளே தள்ளி அதை மூட மருத்துவர்களுக்கு இயலவில்லை. பல ஆராய்ச்சிகளுக்குப்பிறகு, கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுக்குப்பிறகு, செயற்கையாக அறையை உருவாக்கி இதயத்தை உள்ளே தள்ளி வைத்தார்கள். இதயத்தை செயற்கைத்தோலால் மூடினார்கள். ஆனாலும் இதயத்தைப் பாதுகாக்கும் மார்பெலும்புகள் இல்லை. அதனால் இடுப்பு மற்றும் கால்களில் இருந்து எலும்புகள் எடுத்து அவற்றை பதிய முறையில் வளர்த்தார்கள். அந்த எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர நான்கரை ஆண்டுகள் ஆயின. அவற்றைப்பொருத்த மருத்துவர்கள் முயன்ற போது தோல்வியே கிட்டியது. அதன் பிறகு விளையாட்டு வீரர்கள் தலைக்கவசமாகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருளைக்கொண்டு மார்புக்கு கவசம் செய்து பொருத்தி இதயத்திற்கு அரண்போல பாதுகாப்பு கொடுத்தார்கள்.

 


கிறிஸ்டோபர் வளர ஆரம்பித்தார். மருத்துவர்களின் அன்பான கவனிப்பில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்து வேலையிலும் அமர்ந்தார். 21 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதால் காது கேட்கும் திறன் இழந்து, நினைவாற்றலும் குறைந்தாலும் ஆரோக்கியமாக கூடைப்பந்து, கராத்தே, சைக்கிள் ஓட்டுவது என்று உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தற்போது வயது நாற்பது! இன்னும் பல காலம் வாழ்வார்கள் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள் 

இது பிறவியிலேயே ஏற்பட்ட ஒரு குறை. ஆனால் அந்தக்குறையையும் ஏற்றுக்கொன்டு பல சோதனைகளைத்தாங்கி அந்தக்குறையுடனேயே வாழப்பழகி விட்டது அந்தக்குழந்தை. ஆனால் நன்றாகப் பிறந்து திடீரென்று சோதனைகள் ஏற்பட்டு கடுமையான நோயில் விழுந்த சில குழந்தைகளைப்பார்க்கையில் னம் வேதனையில் கரைகிறது.
 


எங்களின் உறவினரின் குழந்தை அப்படித்தான் நல்லபடியாகப் பிறந்து ஒரு மாதத்திலேயே பாக்டீரியா தாக்குதலுக்கு ஆளாகி அதன் முதுகெலும்பில் ஒன்று அப்படியே அரிக்கப்பட்டு அழிந்து விட்டது. உடலெங்கும் குழாய்களுடன் கிடந்த அந்தக்குழந்தையைப் பார்த்தபோது அப்ப‌டி வேதனையாக இருந்தது. ஒரு வழியாக மருத்துவர்கள் அதைக்காப்பாற்றி விட்டாலும் அதனால் அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விட்டது. ஒன்றரை வயதாகியும் இப்போது தான் தவழுகிறது. இன்னும் சில மாதங்களில் அந்த எலும்பு அரிக்கப்பட்ட இடத்தில் ப்ளேட் பொருத்த இருக்கிறார்கள். 

இன்னொரு குழந்தை 6 மாதம் தான் ஆகிறது. தொடர்ந்து வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் சிறுநீரகத்தில் பாக்டீரியா புகுந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளுக்கு இப்போதெல்லாம்  தாய்மார்கள் டயாஃபர் தொடர்ந்து போட ஆரம்பித்து விட்டார்கள் அவசரத்திற்குப்போடாமல் வசதிக்காக போடும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதுவும் சிலர் டயாஃபரை கழட்டுவதேயில்லை. அது சொதசொதவென்று ஈரமான பிறகே நீக்குகிறார்கள். இந்தக்குழந்தைக்கும் அது போலவே செய்ததால் பாக்டீரியாக்கள் உருவாகி சிறுநீரகத்தில் புகுந்து விட்டதாம். இது நம் கவனக்குறைவால் உருவாகிய தவறு. நாம் செய்யும் தவறு நம் குழந்தையை எப்படியெல்லாம் பாதிக்கின்றது!    

முன்பெல்லாம் கருவில் குழந்தை வளர்கையில் சில சமயங்களில் அதைச் சுற்றியிருக்கும் தண்ணீர் குறைந்து விட்டால் உடனேயே குழந்தையை வெளியில் எடுத்து விட வேண்டும் என்று சொல்லி அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விடுவார்கள். இப்போது சுற்றியிருக்கும் நீர் அதிகமாகி விட்டது, ஆபத்து என்கிறார்கள். சமீபத்தில் வேறொரு உறவினரின் குழந்தை இந்த மாதிரி தண்ணீர் அதிகமாகி இதயத்தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டது.   

என் மகனின் நண்பர் அவர். அவரின் குழந்தைக்கு இப்போது ஆறு வயது. அதன் வளர்ச்சியோ இரண்டு வயதுக்குழந்தையின் வளர்ச்சி மட்டுமே. பல வித சிகிச்சைகள், ஆய்வுகளுக்குப்பின் உடலுக்குள் வளர்ந்திருக்கும் பாக்டீரியாக்கள் மூளையை ஓரளவிற்கு செயலிழக்க வைத்து விட்டன என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்! 

தவமிருந்து அருமை பெருமையாகக் குழந்தை பெற்று, மகிழ்ந்து அதனினும் அருமையாக வளர்ந்து மகிழும் பேறு இப்போதெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. பல வித இன்னல்கள் அடங்கிய பிள்ளைப்பேறு, அதன் பின்பும் இன்னல்கள் தொடரும் குழந்தையின் வளர்ச்சி! கனவுகள் கலைந்து கலங்கிய கண்களுடன் தவித்துக்கொண்டு வாழும் பெற்றோர்!
 


எந்த விதக்குறைபாடுகளும் இல்லாத குழந்தையைப்பெற்றவர்கள் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். மொபைலும் மடிக்கணினியும் பழகித்தரும் பெற்றோர் அந்தக்குழந்தைக்கு ஏற்படவிருக்கும் பாதிப்பைப்பற்றி யோசிக்க வேண்டும். கையில் வரமாகக் கிடைத்திருக்கும் குழந்தை எத்தனை பெரிய பொக்கிஷம் என்பதைப் புரிந்து வளர்க்க வேண்டும்!

 
                                                                                                                   

25 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழந்தை வளர்ப்பினில் மிகவும் பயனுள்ள விஷயங்களாகத் தொகுத்துச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Thenammai Lakshmanan said...

அட இப்படி எல்லாம் குறைபாடா.. வேதனைப்பட வைத்த பதிவு :(

ஸ்ரீராம். said...

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்னும் அவ்வையின் வாக்கு நினைவுக்கு வருகிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படங்களையும், செய்திகளையும் படித்தபோது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. இதனை பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

Seeni said...

நல்ல பதிவு..

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பதிவு! விழிப்புணர்வூட்டும் கருத்துக்கள்! நன்றி!

raji said...

//குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் தாய்மார்கள் டயாஃபர் தொடர்ந்து போட ஆரம்பித்து விட்டார்கள் அவசரத்திற்குப்போடாமல் வசதிக்காக போடும் பழக்கம் அதிகமாகி விட்டது. அதுவும் சிலர் டயாஃபரை கழட்டுவதேயில்லை. அது சொதசொதவென்று ஈரமான பிறகே நீக்குகிறார்கள்//

வருத்தப்பட வேண்டிய உண்மை :(

துரை செல்வராஜூ said...

இதையெல்லாம் படிக்க நேர்கையில் மனம் மிகவும் வாடுகின்றது..

பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கு வேண்டிக்கொள்வோம்..

Ajai Sunilkar Joseph said...

விழிப்புணர்வு பதிவை அருமையாக
தந்தீர்கள்....
எனக்குத் தெரிந்த தாய்மார்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்....
மேலும் புது தகவல்கள் தாருங்கள்...

அருள்மொழிவர்மன் said...

அருமையான, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
குழந்தை வளர்ப்பு என்பது இன்று மடிக்கணினியிலும் மொபைலிலும் வளர்கிறது. இன்றைய பெற்றோர்கள் குழந்தைப் பேற்றின் மகத்துவத்தை முழுமையாக உணரவில்லை. குழந்தைப் பெற்றுக்கொள்வது அவசியமா? என்ற மனநிலை மெல்ல மெல்ல வளர்கிறது. தங்கள் சுயநலத்திற்காகக் குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடுவதும் இன்று இயல்பாகவுள்ளது.

~அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது~

சிவகுமாரன் said...

பயனுள்ள பதிவு. கொஞ்சம் பயம் ஏற்படுத்திய பதிவும் கூட.
நன்றி மேடம்

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்வையின் வாசகம் தான் எனக்கும் இதைப்பற்றியெல்லாம் கேள்விப்பட்டபோதும் கண்ணுற்ற போதும் எழுதியபோதும் நினைவுக்கு வந்தது. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சீனி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியைத்தந்தது ராஜி! நன்றாக இருக்கிறீர்களா?

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அஜய்! அடிக்கடி நான் இப்படி விழிப்ப்புணர்வு பதிவுகள் எழுதுவது வழக்கம்! தொடர்ந்து வந்து ஊக்குவிப்பது எனக்கும் மேலும் ஊக்கம் தரும்!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள் அருள்மொழி வர்மன்! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து பின்னூட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியைத்தந்தது சிவகுமாரன்!அன்பு நன்றி!