Monday 26 March 2012

பிரணயம்!!


சென்ற வாரம் பிரணயம் என்றதொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். பிரணயம் என்றால் காதல், அன்பு என்று சொல்லியிருக்கிறார்கள். முதுமையில் தடம் பத்திருக்கும் மூவரின் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிப் பிரவாகங்கள் தான் இந்த படத்தின் கதை. நம் இந்திய திரையுலகின் மூன்று சிறந்த நட்சத்திரங்கள்-விருதுகள் பல பெற்றவர்கள் இந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஜெயப்பிரதா கதாநாயகியாகவும்  மோகன்லாலும் அனுபம் கேரும் கதாநாயகர்களாகவும் தங்கள் மன உணர்வுகளை அருமையாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.. இது தன் dream project என்று இதன் இயக்குனர் ப்ளெஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தன் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்க, தன் மருமகளுடனும் பேத்தியுடனும் வாழும் அனுபம் கேரும் தன் மகள், மருமகனுடன் வாழும் ஜெயப்ரதாவும் லிஃட்டில் சந்திக்கிறார்கள். ஜெயப்ரதா லிஃடிலிருந்து வெளியேறும்போது அனுபம் கேருக்கு அது யாரென்று புரிந்து அவர் பெய்ரைச் சொல்லி அழைக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட இதயத்தாக்குதலில் ஒரு விநாடியில் கீழே விழுகிறார்.  ஜெயப்ரதா பதறித்துடித்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ப்பொழிய அவரது முன்னாள் வாழ்க்கை நிழலாய்க் கண் முன் விரிகிறது.

இளம் வயதில் கிறிஸ்தவரான கிரேஸ் என்ற ஜெயப்ரதாவிற்கும் அச்சுதன் என்ற அனுபம் கேருக்கும் காதல் ஏற்பட, எதிர்ப்புகளுக்கிடையில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மன வேறுபாடு காரணமாய் மனைவியை அனுபம் கேர் தன் மகனுடன் விரைவிலேயே பிரிய, விவாக ரத்து நடக்கிறது.. அதன் பின் மாத்யூஸ் என்ற மோகன் லாலை ஜெயப்ரதா மணக்கிறார். பிரிவிற்குப் பின் தன் தவறை உணர்ந்த அனுபம் கேர் வேறு திருமணம் செய்யாமல் தனிமையிலேயே வாழ்கிறார்.

நாற்பது வருடங்களுக்குப்பிறகு தன் முன்னாள் கணவரை சந்திக்கையில் பிரிந்த போன தன் மகனை நினைத்தும் மிக இளம் வயதில் தனக்கு அனுபம் கேரிடம் ஏற்பட்ட அன்பை நினைத்தும் குமுறிக் குமுறி தவிக்கிறார் ஜெயப்ரதா. மோகன்லாலிடம் தன் மன உணர்வுகளைப் பகிர்ந்தும் அழுகிறார். பக்க வாதத்தால் செயலிழந்து எந்நேரமும் படுக்கையிலும் வீல் சேரிலும் முடங்கியிருக்கும் மோகன்லால் தன் மனைவியின் உனர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்வது தான் இந்தத் திரைப்படத்தில் மிக அழகு. அனுபம் கேர் மருத்துமனையில் இருக்கும்போதே, அவரின் மருமகளிடம் தான் யாரென்று சொல்லி அழுகிறார் ஜெயப்ரதா. வெளி நாட்டிலிருந்து உடனேயே திரும்பிய மகனுக்கு, குழந்தைப்பருவத்தில் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு அடங்கவில்லை. வார்த்தைகளால் குதறுகிறார். தன் தந்தையின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாமென்கிறார். இதற்கப்பால் ஜெயப்ரதாவும் மோகன்லாலும் அனுபம் கேரும் நண்பர்களாகப் பழகுவதை மோகன்லாலின் மகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரும் தன் வார்த்தைகளால் தன் அன்னையைக் காயப்படுத்துகிறார்.
மன அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இந்த மூவரும் தன் குழந்தைகளிடம்கூட சொல்லாமல் ரொம்ப தூரத்திற்கு பயணம் செல்லுகிறார்கள். வழியெல்லாம் சிரித்து, ஆடிப்பாடி மகிழ்ந்து போகிறார்கள் இவர்கள். திடீரென்று மோகன்லாலுக்கு மறுபடியும் பக்கவாதம் வந்து தாக்க, அவர் ஒரு மருத்துவமனியில் சேர்க்கப்படுகிறார். உயிருக்குப் போராடி பிறகு கண் விழிக்கும் அந்த நிலையிலும் மோகன்லால் ‘தனக்கு ஏதேனும் ஆகி விட்டால் இருவரும் மறுபடியும் ஒன்று சேர வேண்டும்’ என்கிறார். அதை மறுத்து, தன் கணவரை தான் மிகவும் நேசிப்பதாக சொல்லி அழும் ஜெயப்ரதா, தாங்கள் தங்குமிடத்துக்கு திரும்புகிறார். அந்த நிலையில் அவரின் மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ‘தன் தவறை உணர்ந்து கொண்டதாகவும் தன் தாயின் உணர்வுகளைப்புரிந்து கொண்டதாகவும் தன் அம்மாவை மிக மிக நேசிப்பதாகவும்’ சொல்லி விடை பெற்றுச் செல்லும் மகனை நினைத்து கண்ணீருடனும் சந்தோஷத்துடனும்  புன்னகைக்கிறார் ஜெயப்ரதா. அப்படியே அனுபம் கேரின் மீது சாய்ந்து இறந்து போகிறார்.

‘அவள் அத்தனை பிரியம் என் மீது வைத்திருந்தாள். நானும் அவளிடம் அத்தனை பிரியம் வைத்திருந்தேன்’ என்று கலங்கி அழும் மோகன்லாலை வீல் சேரில் அமர்த்தி அனுபம் கேர் தள்ளிச் செல்ல.. படம் நிறைவடைகிறது.

ஜெயப்ரதாவின் தவிப்பும் கண்ணீரும் நிறைந்த நடிப்பு மனதை நெகிழ்த்துகிறது. மோகன்லாலிடம் அவர் வைத்திருக்கும் பிரியத்தை படம் முழுவதும் அவர் வெளிப்படுத்தும் விதம் ஒரு காவியம். முன்னாள் கணவரைப் பார்த்த பின் அவரிடம் தான் வைத்திருந்த பாசம், பிரியம் எல்லாம் உடைந்து போன சோகமும் ஒரு பெண்ணாக நாற்பது வருடங்களுக்குப்பிறகும் அவரின் மனதை வலிக்கச் செய்கிறது. தன் மகனை நினைத்து, அவனின் வெறுப்பை நினைத்துக் குமுறும்போது ஒரு தாயாக அவர் தவிக்கிறார். ஒரு சமயம் அனுபம் கேரும் அவரும் தனிமையில் சந்திக்கும்போது, அனுபம் ‘ அவனுக்கு தாயன்பு கிடைக்காதது உன் தவறு என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். எங்கே என்மீது வைத்திருக்கும் அவனின் பிரியமும் மதிப்பும் குறைந்து போய் விடுமோ என்ற பயத்தில் தவறு செய்தவன் நான் தானென்று இதுவரை சொல்லவில்லை. உன் மீது இந்த அளவு வெறுப்பை அவன் காட்டுவதைப்பார்க்கும்போது உண்மையைச் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்றுகிறது’ என்று கலங்கும்போது ‘வேண்டாம். என்னை இதுவரை தவறாக நினைத்ததே போதும். இனி உங்களையும் தவறாக நினைக்க வேண்டாம்’ என்னும்போது அவரின் நல்ல மனம் வெளிப்படுகிறது.

மோகன்லாலும் ஜெயப்ரதாவும் ஒருத்தருக்கொருத்தர் பிரியமாகப் பேசிக்கொள்ளும்போதும் மோகன்லால் தன் மனைவியை மிக உயர்ந்தவராய் ஆராதித்துப் பேசும்போதும் அவர்களைத் தள்ளி நின்று ரசிப்பதும் சில சமயம் அந்த அன்பைப்பார்த்து மனம் கலங்கி  தன் இழப்பு நினைவுக்கு வந்து ஒரு விநாடி சோகமாவதுமாக அனுபம் கேர் மிக அழகாக நடித்திருக்கிரார்.

மோகன்லால் நடிப்பைப்பற்றி சொல்லவே வேண்டாம். கேரளத் திரையுலகில் தன் நடிப்பால் உயர்ந்து நிற்பவர். அனுபம் கேர் ரோல் தான் அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது. அதை மறுத்து இந்தக் கதாபாத்திரம்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம் மோகன்லால். அதை அவர் மிக அழகாக நியாயப்படுத்தியிருக்கிறார் தண் தன் மிகச் சிறந்த நடிப்பினால். இயங்க முடியாத உடலின் வலியையும் அவஸ்தையையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் மன உணர்வுகளை மிக அழகாகப் பிரபலித்த படம் இது!!  

படங்கள் உதவி: கூகிள்

Monday 19 March 2012

கிரிக்கெட்டும் நானும் சச்சினின் நூறும்!!


தனது நூறாவது சதத்தை சச்சின் அடித்து கிரிக்கெட் உலகில் ஒரு சாதனையைப் படைத்த போது, என் நினைவுகள் கடந்த கால கிரிக்கெட் உலக முக்கிய நிகழ்வுகளை நினைத்து பின்னோக்கி ஓடின.
1983-ஆம் ஆண்டு. இந்தியா உலகக்கோப்பையை வென்ற நேரம். நாடெங்கும் அமளி துளியாக இருந்தது. அது வரையில் கிரிக்கெட் என்ற விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. தொலைகாட்சியில் நேரடி ஒலிபரப்பில்லாத காலம். வெளியே சென்றிருக்கும்  என் கணவருக்கு ரேடியோவில் அவ்வப்போது கமெண்ட்ரி கேட்டு யார் அவுட், யார் நாட் அவுட் என்று சொல்லியாக வேண்டும். இப்படித்தான் ஓரளவு அதைப்பற்றிய அறிவும் கிடைத்து, ஓரளவு ஈடுபாடும் வந்தது.
அதன் பிறகு ஷார்ஜாவில் 1985-ல் நடந்த ராத்தமன்ஸ் கோப்பை நிறைய ஈடுபாட்டை ஏற்படுத்தி விட்டது. அதே வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த Benson&Hedges world cricket championship போட்டியில் இந்தியா வென்று  ரவி சாஸ்திரி ஆடி காரில் கிரவுண்டை வலம் வந்ததும் உற்சாகம் பீரிட்டது. அன்றிலிருந்து நானும் என் கணவர், மகனுடன் கிரிக்கெட் ஸ்டேடியம் செல்ல ஆரம்பித்தேன். கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்கள் படிப்பதும் அவற்றை சேமித்து வைப்பதும் வீடியோ டேப்புகள் பதிவு செய்து வைப்பதுமாக ஆர்வம் தொடர்ந்தது. ஒரு முறை என் சகோதரி இல்லத்தில் ஒரு ஐந்து வயசு பொடியனுடன் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவன் எனக்கு ‘ மெய்டன் விக்கட்’ என்றால் என்னவென்று சொல்லிக்கொடுத்தான்!! அசந்து விட்டேன் நான்!
ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டக்காரர் என்பதால் ரசிகைகள் கூட்டம் அவரை மொய்க்கும். அவரையும் கவாஸ்கரையும் ஓவியங்களாய் வரைந்து அவர்களிடம் அவற்றில் கையொப்பம் பெற்றது கூட நடந்தது!! இந்த இடத்தில் ஷார்ஜா கிரிக்கெட்டைப்பற்றி சில வார்த்தைகள் அவசியம் சொல்ல வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், என்று பல நாடுகள் கலந்து கொண்டாலும் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த விளையாட்டுக்கள் மட்டிலும்தான் முக்கியத்துவம் அதிகமாய் பெறும். இது விளையாட்டு என்பதையும் கடந்து தேசிய உணர்வுகள் இரு பக்கமும் கொழுந்து விட்டெரியும். ஒரு இந்தியர் அவுட் ஆனால் போதும், உடனே பாகிஸ்தான் ரசிகர்கள் தட்டு நிறைய இனிப்புக்கள், கேக்குகள் எடுத்துக்கொண்டு ஓடி வந்து நமக்கு கட்டாயமாகக் கொடுப்பார்கள். அல்லது கர்சிப் கொண்டு வந்து தருவார்கள்.[ நாம் அழுகிறோமாம்! கண்களைத் துடைத்துக்கொள்ளத் தருகிறார்களாம்! ] இந்தியர்கள் இதை எதுவுமே செய்யாமல் அமைதியாக ரசிப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக இருப்பார்கள். நாங்கள் மட்டுமல்ல, சுற்றுப்புற நண்பர்கள் கூட்டம் எல்லாமே, காலையிலேயே சாப்பாட்டு பொட்டலங்களை கட்டிக்கொண்டு ஸ்டேடியத்திற்கு ஆஜராகி விடுவோம். ஒரு முறை பச்சைப்புடவை கட்டிக்கொண்டு சென்ற போது நம் நண்பர்கள் எல்லாம் ‘நீங்கள் இப்படிப்பட்ட உடையில் வரலாமா? என்று ஆதங்கமே பட்டு விட்டார்கள். [ பாகிஸ்தானியரின் கொடி நிறம் பச்சை என்பதால் அவர்களையே நம்மவர்கள் பச்சை என்று தான் குறிப்பிடுவார்கள் எப்போதுமே! ] கிரிக்கெட்டை ரசித்து மகிழ்ந்த காலம் அவை!!

1989 ஆம் ஆண்டு, முதன் முதலாக சச்சின் அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்ரீகாந்துடன் அவர் அதிரடியாக விளையாண்ட போது, அந்த 16 வயது இளைஞரைப்பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனஸின் பந்து வாயில் பட்டு இரத்தக்காயமேற்படுத்தியபோதும் தைரியமாக வந்து விளையாடிய அவரைப்பார்த்து பாகிஸ்தானிய வீரர்கள் அசந்து போனார்கள், நானும் தான்! 1990-ல் இங்கிலாந்தில் டெஸ்ட் மாட்சில் தனியொரு ஆளாய் சதம் அடித்து இந்தியா தோற்றுப்போகாமல் காப்பாற்றிய அவரைப்பார்த்து இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் ‘ what a seventeen!!’ என்று அதிசயித்த போது பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. அன்றைக்கு உயரத்தில் ஏறத்தொடர்ந்த அவரின் ஆட்டம் இத்தனை வருடங்களில் பல உலக சாதனைகளைப் படைத்து மிகுந்த உயரத்திலேயே இன்னும் இருக்கிறது!
1999-ல் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடந்தபோது, அவர் தந்தை இறந்து போனார். உடனே மும்பை சென்று தந்தைக்கான காரியங்களை முடித்துத் திரும்பி அடுத்த மாட்சில் அவர் விளையாடியபோது உலகமே அவரை மிகவும் மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தது!

1991-ல் ஷார்ஜாவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியில் அம்பயரின் தவறான கணிப்பில் பாகிஸ்தான் வென்றது. மாட்ச் ஃபிக்ஸிங் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்ப்ட்டன. அதன் பின் சச்சின் ஷார்ஜா வந்து விளையாட மறுத்து விட்டதால் அது வரையில் கிரிக்கெட்டின் கனவுலகமாக இருந்து வந்த ஷார்ஜா மெல்ல மெல்ல மறக்கப்பட ஆரம்பித்தது. 1998-ல் மீண்டும் பல வருடங்களுக்குப்பின் சச்சின் விளையாட வந்து புயல்போல ஆடி ஆஸ்திரேலியாவை ஜெயித்து இந்தியாவிற்கு பெருமையூட்டினார். ஆனாலும் 2001-ல் இந்திய அரசாங்கம் ஷார்ஜாவில் அப்போது நடக்கவிருந்த ஷார்ஜா கப் போட்டியில் இந்திய வீரர்கள் வந்து விளையாட தடை விதிக்கவே அப்போது கீழே விழ ஆரம்பித்த ஷார்ஜா கிரிக்கெட் அதன் பின் எழவில்லை.
அதன் பின் இந்திய கிரிக்கெட் உலகில் வெகுவாக பேசப்பட்ட மாட்ச் ஃபிக்ஸிங், முன்னாள் காப்டன் அசருதீன் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டது, எப்போது தோற்றலும் இந்தியா காசு வாங்கிக்கொண்டு தோற்றது என்று எழுந்த குற்றச்சாட்டுக்கள் என்று தொடர்ந்து வந்த தேக்கங்கள் என் ஈடுபாட்டை மெல்ல மெல்ல குறைத்தது. 2003ல் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பையில் ஃபைனல் ஆட்டத்திற்கு வந்தது. கிரிக்கெட் ஜுரத்தில் இந்தியா மூழ்கியிருந்தபோது, கங்குலி செய்த சொதப்பலால் இந்தியா பரிதாபமாகத் தோற்ரது. வெறுத்துப்போன நான் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். 10 வருடங்களுக்குப்பின் ஒரு கிரிக்கெட் மாட்சை முழுமையாக அமர்ந்து நான் பார்த்தது சச்சின் தன் 100ஆவது சதம் அடித்த போது தான்!
எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும் இந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் ஆராதித்ததில்லை. எந்த ஒரு வீரரும் மற்ற நாட்டு பந்து வீச்சாளர்களை இந்த அளவிற்கு திணற வைத்ததில்லை. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும்  ஒவ்வொரு முறையும் விளையாடச் செல்லும்போது சதம் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

அளவு கடந்த சாதனைகளும் அதிக செல்வமும் அவரை வந்தடைந்த போதும் அவர் என்றும் நிதானமிழக்காத, மற்றவர்களை ஒரு போதும் குறை சொல்லாத, நேயமுள்ள ஒரு நல்ல மனிதனாகவே அவர் இருந்து வருகிறார்.

அவர் சாதனைகளுக்காகவே விளையாடுகிறார் என்று சில தரப்புகள் குற்றச்சாட்டுகளையும் அடிக்கடி எழுப்புகின்றன. அதற்கு பாகிஸ்தானின் முந்தைய காப்டன் மியாண்டாட் பதில் சொன்னார்.
“ சச்சின் சாதனைகளுக்காக விளையாடுபவர் அல்ல. அப்படியே அவர் சாதனைகளுக்காக விளையாடினாலும் தப்பில்லை. ஒரு கிரிக்கெட்டர் சாதரணமாய் ரன்களைக் குவிக்கும்போது மக்கள் மனதில் அவர் நிற்பதில்லை. மறக்கப்படுகிறார். சாதனைகள் மட்டும்தான் ஒரு மனிதனை அவன் காலத்திற்குப்பின்னும் அவனை மக்கள் மனதில் புகழுடன் நிற்க வைக்கிறது ”! 
புகழுக்காகவும் பணத்திற்காகவும் பலர் விளையாடும் இந்த விளையாட்டில் அதை மிகவும் நேசிக்கும் காரணத்தால் மட்டுமே சச்சினால் இன்னும் இன்று வரையிலும் அதை சிறப்பாக விளையாட முடிகிறது. அந்த தாகமும் நேசமும் என்று குறைகிறதோ, அன்று கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என்று அவரே சொல்லியிருக்கிறார். வேறெந்த விளையாட்டிலும் உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா சோபித்ததில்லை. இன்று கிரிக்கெட் உலக அரங்கில் இந்தியாவிற்கு தனியான கெளரவத்தையும் மரியாதையும் கொடுத்திருக்கும் அவரை இன்னும் சில காலம் விளையாட அனுமதிப்பதன் மூலம் நாமும் பதில் மரியாதை தரலாமே?

HATS OFF TO SACHIN TENDULKAR!!    

Tuesday 13 March 2012

முதுமையில் இளமை!!


 
இந்த மார்ச் 15ந்தேதி எனது ‘ முத்துச்சிதறலுக்கு’ இரண்டு வயது பூர்த்தியாகிறது. இதுவரையில் 122 பதிவுகள் மட்டுமே போட இயன்றிருக்கிறது. தொடர்ச்சியான பயணங்களும் அலைச்சல்களும் பதிவுகள் போடும் வேகத்தைக் குறைத்திருப்பதோடு, அன்புத் தோழமைகள் அனைவருக்கும் அவ்வப்போது பின்னூட்டமிடும் வேகத்தையும் குறைத்திருக்கின்றன.  இனி பின்னூட்டங்களை அதிகரிக்க வேண்டும். கூடிய மட்டிலும் ஒவ்வொரு பதிவும் தரமான முத்தாக இருப்பதற்கு முயற்சி செய்திருப்பது மட்டும் உண்மை! என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி, அன்பான, அசத்தலான பின்னூட்டமிட்டு நெகிழ்வடையச் செய்யும் அன்புள்ளங்கள் யாவருக்கும் என் மனங்கனிந்த நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இன்றைய பதிவு....!
முதுமையில் இளமை!!
இளமைப்பருவமென்பது வசந்த காலம். ஆயிரம் கனவுகளும் காதலும் அசத்தலான நட்பு வளையங்களும் கொண்ட ஒரு இனிமையான காலம். பொறுப்புக்கள் குறைவான, சில சமயம் பொறுப்புக்கள் என்றால் என்னவென்றே தெரியாத கவலையற்ற பருவம்.
அடுத்த பருவம் திருமணமான பருவம். பொறுப்புக்களை உள்வாங்கி, உற்ற துனையுடன் புரிதலும் தொடங்கும்போது அந்த மகிழ்ச்சியுடனேயே வாழ்க்கையில் முதன் முதலாக குழப்பங்கள், தடுமாற்றம், கோபம், உத்வேகம், முயற்சி எல்லாமே பக்கத்துணைகளாக கூடவே வரும்.
40 வயதிலிருந்து 50 வயது வரை பொறுப்புக்களின் சுமைகள் தலையை சுற்ற வைக்கும். வாழ்க்கையின் துரோகங்களும் வலிகளும் புலப்பட ஆரம்பிக்கும். அதன் பலனாய் உடல் உபாதைகள் திடீர் திடீரென்று புதிது புதிதாய் முளைக்க ஆரம்பிக்கும். அதுவரையில் கற்ற பொறுமை ஆட்டம் காணும். மெதுவாக முதுமை படர ஆரம்பிக்கையில் எது உண்மையான நட்பு, எது உண்மையான சொந்தம் என்ற உண்மை நிலை புரிபட ஆரம்பிக்கும். வளர்த்த குஞ்சுப்பறவைகள் அவரவர் கூட்டுக்குப் பறந்து சென்ற பிறகு வாழ்க்கையின் யதார்த்தம் முகத்தில் அறையும்.
உடலும் மனமும் முதிர ஆரம்பிக்கும் நிலை தான் முதுமை! ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள், சுமைகள், கடமைகள் எல்லாவற்றையும் முடித்து நிமிரும்போது, ஒவ்வொருத்தரும் எதிர்நோக்கும் நிலை இது! அலைக்கழிக்கும் உடல் நோய்கள், அதுவரை இருந்த முக்கியத்துவங்கள் குறைந்து அதனால் ஏற்படும் மனச்சோர்வு, மோசமான அனுபவங்களிலிருந்து பீடிக்கும் மனத்தளர்வு-இவை எல்லாவற்றையும் சமாளிக்க மனத்தெம்பை மறுபடியும் முழுபலத்தோடு கொண்டு வரவேண்டிய நிலை இது!!


உடம்பு எப்படியிருந்தாலும் மனசை இளமையாக வைத்துக்கொண்டால் மட்டுமே மிச்சமிருக்கும் நாட்களை அமைதியாக கழிக்க இயலும். உடலுக்கு மட்டும்தான் முதுமை. வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது.
‘ மனிதனுக்கு வயதாவதேயில்லை அவன் எதையாவது மகிழ்வோடு தேடிக்கொண்டேயிருந்தால்’ என்கிறது ஒரு பழமொழி. உண்மைதான்! இதுவரை இயந்திர கதியாக உழைத்துக்கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கிடைத்திருப்பதை அனுபவித்து ரசிக்க வேண்டும். காலை நேரத்தில் நடைப்பழக்கம் வைத்துக்கொள்வது சுற்றிலும் உள்ள தூய்மையான காற்றை சுவாசிக்க வைப்பதுடன் வைகறையின் அழகை ரசிக்க வைக்கிறது.
உங்கள் பேரனையோ, பேத்தியையோ கொஞ்சி மகிழ்ந்து பாருங்கள். அந்த சிறு குழந்தையின் மென்மையான அசைவுகளையும் மழலையையும் ரசித்துப் பாருங்கள். இதுவரை புலப்படாத அழகின் தரிசனம் கிடைக்கும். மனது சிறு குழந்தையின் உலகிற்குச் சென்று வரும்.
இளம் வயது சிறுவர்களை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், உங்கள் அறிவுரைகள் அவர்களுக்குத் தேவை தான். ஆனால் அதை அவசியமான சமயத்தில் மட்டுமே உபயோகியுங்கள். மற்ற நேரங்களில் அவர்களுக்கு உற்ற தோழனாக இருங்கள்.
மனதை அமைதியாக்கும் சக்தி கலைகளுக்கு உண்டு. இதுவரை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களினால் மறந்து போன உங்கள் கலைத்தாகங்களுக்கு உயிர் கொடுங்கள். இசை, ஓவியம், கவிதை- இப்படி எத்தனையோ வடிகால்கள் மனதை அமைதிப்படுத்த காத்திருக்கின்றன.

 
உங்களை முதுகில் குத்தி, மனதில் சிலர் கடந்த காலத்தில் ரத்தக்காயங்களை உண்டு பண்ணியிருக்கலாம். அதையே நினைத்து நினைத்து மருகுவதை தவிர்த்து விடுங்கள். ‘ இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்து அவற்றை ஒதுக்கி வையுங்கள். கோபத்தை நீக்குவதும் நாவடக்கமும் இந்த வயதில் மிக முக்கியம்.  

இந்த வயது வரை நினைத்ததை சாப்பிட்டு ரசித்து உண்டு நாட்களை கழித்தாகி விட்டது. இனியேனும் ஆசைக்கும் பற்களுக்கும் வயிற்றுக்கும் ஓய்வு கொடுங்கள். இது மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைத் தள்ளி வைக்கும். இந்த நாவடக்கமும் வாழ்க்கையில் மிகத் தேவையான ஒன்று! 

இறுதியாக பொருளாதார பலம். வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கான தியாகங்களும் தானமும் நிச்சயம் நமக்கு மன நிறைவைத் தரும்தான். கருணையும் அன்பும் வாழ்க்கையில் முதலாவதான அருமையான விஷயங்கள்தாம்! ஆனால் நம் முன்னோர்கள்  ‘ தனக்குப்பின் தான் தான தர்மம்!’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! முதுமையில் யாசகம் என்பது மிகக் கொடுமையான விஷயம். உங்களுக்கென்று இறுதிக்காலம் வரை யாருடைய கையையும் எதிர்பாராத வகையில் ஒரு சேமிப்பு உங்களையும் உங்களின் தேவைகளையும் நிம்மதியாய் வைத்திருக்க அவசியம் தேவை!!  

என் தாயாருக்கு 93 வயதாகிறது. சர்க்கரை வியாதியும் உண்டு. என் தந்தையின் பென்ஷன் பணத்தில் யாருடைய தயவையும் மறுத்து தன் மருத்துவச் செலவிற்கு தானே செலவு செய்து கொள்வதுடன் தன் சாப்பாட்டுக்கும் என் சகோதரியிடம், அவர்கள் மறுத்தாலும் பணத்தைக் கட்டாயமாகக் கொடுத்து விடுகிறார்கள். என் வீட்டுக்கு மாடிப்படியேறி வரவேண்டும். நான் போகும்போதெல்லாம் மாடிப்படி ஏறும்போது, யாராவது கையைப் பிடித்தாலும் தட்டி விட்டு மறுத்து விடுவார்கள். தானே தான் ஏறி வருவார்கள். என் தந்தையின் சேமிப்பும் பென்ஷன் பணமும் தான் இறந்த பிறகு எப்படி பங்கு பிரிக்கப்பட்டு தன் குழந்தைகளுக்குத் தர வேண்டுமென்பதற்கு உயிலும் எழுதி வைத்து விட்டார்கள். இந்த சுய கெளரவம், தைரியம், எல்லாமே பொருளாதார பலத்தினால் வந்தது தான்!! 

முதுமையில் இளமை இருக்கிறது!! அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!! 
படங்கள் உதவி: கூகிள்

Sunday 4 March 2012

முத்துக்குவியல்கள்

நெகிழ வைத்த முத்து

நேசம் பல விதங்களில் மனித வாழ்க்கையில் வெளிப்படுவதுண்டு. மனிதர்களிடம், ஐந்தறிவு படைத்த ஜீவன்களிடம் என்று மனதுக்கு மனம் வேறுபடுகின்றன. ஆனால் காகங்களிடம்கூட ஒருத்தர் பல ஆண்டுகளாய் நேசம் காட்டி வருவதைப் பற்றி படித்த போது வியப்பாக இருந்தது.




சென்னை அம்பத்தூர் அருகே, சத்யமூர்த்தி நகரில் 20 ஆண்டுகளாக குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிரார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் காலை கடையை திறக்கும்போது சுமார் 10 காக்கைகள் கடைக்கு முன்னால் கரைந்து சப்தமிட்டுக்கொண்டிருந்திருக்கின்றன. அவற்றை விரட்டியடிக்காமல் சிறிதளவு காராசேவு அள்ளிப் போட்டிருக்கிறார். சாப்பிட்ட காக்கைகள் பறந்து போய்விட்டன. ஆனால் மறு நாள் அவர் டீக்கடையைத் திறக்க வந்த போது கடை முன் மறுபடியும் அவை கூடியிருந்தன. இவரும் அவைகளுக்கு மீண்டும் இரை போட்டிருக்கிறார். இதுவே வாடிக்கையாகி, 15 வருடங்களாய் இந்த நட்பும் நேசமும் தொடர்ந்து வருகின்றது. இப்போது நூற்றுக்கணக்கான காக்கைகள் அவரது நண்பர்கள்!!! அவசரமாக வெளியூர் சென்றாலோ, வெளியில் தங்க நேரிட்டாலோ மட்டும்தான் இவர் அவைகளுக்கு உனவிடுவதில்லை. ஆனால் இவர் கடையைத் திறக்கா விட்டாலும் குறைந்தது அரை மணி நேரமாவது அவருக்காக காத்திருந்து பார்த்து, பின் மேலே வட்டமிட்டபடி கரைந்து, பறந்து சென்று விடுகின்றனவாம். இவர் அவைகளின் அருகில் போய் நின்றாலும் அவைகள் பறந்து செல்வதில்லை. சராசரி வாச்க்கை வாழ்ந்து வரும் இவர் தினமும் 3 பாக்கெட் பொரி, காராசேவு என்று அவைகளுக்கு செலவு செய்கிறார். அவைகளிடம் அதிக பாசம் வைத்திருக்கும் இவர், யாராவது காக்கைகளை விரட்டி அடித்தால் டென்ஷனாகி விடுகிறாராம்!! ‘ பறவைகளை நேசியுங்கள்’ என்று உபதேசம் செய்வாராம்!!

அசர வைத்த முத்து
 
 
 
ரொம்ப நாட்களாகவே நான் என் மகனிடமும் கணவரிடமும் அடிக்கடி ‘ இந்த கைபேசி உபயோகிக்க இப்படி தினமும் சார்ஜ் பண்ணுவது போர். என்னென்னவோ கண்டு பிடிக்கிறார்கள் உலகத்தில்- சார்ஜ் பண்ணத் தேவையேயில்லாத மொபைல் ஃபோன் கண்டு பிடிக்கவில்லையே இன்னும்!’ என்று சொல்வது வழக்கம். அது இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை!!


அலைபேசியில் சார்ஜ் ஏற பேசினாலே போதும்!!


பேசினாலே பாட்டரியில் சார்ஜ் ஏறும் கைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். ஒருவர் பேசும் ஒலி எலெக்ட்ரிக் பவராக மாறி கைபேசியின் பாட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது. சியோல் பல்கலைக்கழக மாணவரான சாங் உகீம் இந்த கைபேசியைக் கண்டு பிடித்திருப்பதாக The Sunday Telegraph செய்தி வெளியிட்டிருக்கிறது. மின்சாரம் இன்றி, சுற்றுப்புறத்தில் ஏற்படும் ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைபேசியின் பாட்டரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகவல் முத்து
 
 
 
குறட்டையைத் தடுக்க புதிய வழி!!


மூச்சு விடுகையில் மூச்சுக்குழாயின் மேற்பகுதியில் ஏற்படும் இடர்ப்பாடுகளால் சீராக மூச்சு விடமுடியாமல் போகும்போது குறட்டை ஏற்படுகிறது. இதைத்தடுக்க அமெரிக்காவில் மேயோ கிளினிக் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய சாதனம் இது. பிளாஸ்திரி போன்ற சிறிய கருவியான இதை உதடுகளில் பிளாஸ்டர் போல ஒட்டிக்கொண்டு, ஐபாட் போன்ற இதன் துணைக்கருவியை காதுக்கருகில் பொருத்திக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் இதை எடுத்து வைத்து விடலாம். இதனால் எந்த பாதிப்போ, பக்க விளைவுகளோ கிடையாது. இதற்கான ஆய்வை குறட்டை விடுவோரிடம் செய்து வெற்றி பெற்றுள்ளார்கள் இந்த ஆய்வாளர்கள்! இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் குறட்டை சத்தம் வந்தால் தூக்கத்தில் உள்ளவர்களை எழுப்பாமல் அதை கட்டுப்படுத்தும். இது மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகள் மூலம் குறட்டை பாதிப்பு குறைகிறதாம்!!

ரசித்த முத்து

நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
படங்கள் உதவி: கூகிள்