Wednesday 27 April 2011

கற்பனையை விஞ்சும் நிகழ்கால உண்மைகள்!!

இந்த முறை 'முத்துக்குவியலில்' நான் சமீபத்தில் படித்து வியந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு எழுதலாமென்று நினைத்தே. இங்கே வெளியிட்டிருக்கும் இரண்டு செய்திகளுமே மிக மிக ஆச்சரியமான விஷயங்கள்தாம்!
  
குழந்தையே பிறக்காத கிராமம்!

இப்படி ஒரு செய்தியைப்படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிடிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சியூன்கா நகர். அதனருகில் உள்ள ஒல்மெடா தி லா சியூஸ்டா என்ற கிராமத்தில்தான் கடந்த 40 வருடங்களாக குழந்தைகலே பிறக்கவில்லை. குழந்தைகள் மட்டுமில்லை, சிறுவர்கள், இளைஞர்களைப்பார்த்தும்கூட 40 வருடங்கள் ஆகிவிட்டன இந்த கிராமத்திற்கு.




இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 15 பேர் தான். அவர்களும் 65 வயதிலிருந்து 90 வயதிற்குட்பட்டவர்கள். ஒரு காலத்தில் இந்த கிராமம் விவசாயத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. அதன் பின் விவசாயம் கொஞ்சம் தடுமாற பிழைப்புக்காக வெளி மாநிலங்களில் இந்த கிராமத்து மக்கள் குடியேறி விட்டார்கள். நல்லது, கெட்டது எதற்குமே அப்படிச் சென்றவர்கள் திரும்ப வந்ததில்லை. கிராமத்தை விட்டு வெளியேற விரும்பாத சிலர் அப்படியே இருந்து விட, ஐந்து வ‌ருடங்களுக்கு முன் கணக்கெடுத்தபோது 22 பேர்களாயிருந்து, இப்போது பதினைந்தாகக் குறைந்து விட்டார்கள்.

அதற்காக, நிலைமையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை இந்தப் பெரியவர்கள். தன் கிராமத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியே ஆக வேன்டும் என முடிவெடுத்து அதற்கான செயலிலும் இறங்கி விட்டார்கள். அதற்காக அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ரியல் எஸ்டேட். நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். அதற்காக அவர்கள் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். நிலத்தை வாங்குபவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டுமென்பதுதான். தற்போது பலரும் அங்கே நிலங்களை வாங்கிப் போட்ட வண்ணம் இருக்கிறார்களாம். ஆனாலும் ஓரளவு அங்கே ஜனத்தொகை கூடுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார் சியூன்கா மேயர்!

                                                              &&&&&&&&&

தாய்ப்பால் ஐஸ்க்ரீம்!

ஐஸ்கிரீமிஸ்ட்ஸ்!

இது லண்டனிலுள்ள மிகப்பெரிய ஐஸ்கிரீம் பார்லர்! இங்கு ஒரு ஐஸ்கிரீம் கிடைக்கிறதென்றால் அது வேறு எங்கேயும் அறிமுகப்படுத்தாத அல்லது அறிமுகப்படுத்தியிருந்தாலும் அத்தனை சுவையில்லாததாகத்தான் இருக்கும்!
இதன் நிறுவனர் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர். அதனால்தான் யாருமே கற்பனைகூட செய்திருக்க முடியாத தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்திருக்கிறது. உலகில்  பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதில் சிரமம் இருக்கின்றன. கொடுப்பதில் உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது குடிப்பதில் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். இதன் விளைவாக, பால் கட்டிக்கொண்டு செயற்கை முறையில் அதை வெளியேற்ற வீணாக்க வேண்டியிருக்கிறது.



             இப்படிப்பட்டவர்கள் தயவு செய்து உங்கள் பாலை வீணாக்காமல் எங்களுக்குத் தாருங்கள். நாங்கள் காசு தருகிறோம் என்று ஒரு விள‌ம்பரம் இதன் நிறுவனர் வெளியிட்டார். பல தாய்மார்கள் முன் வந்தார்கள். அந்தத் தாய்ப்பாலை அதி நவீன முறையில் பதப்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்திருக்கிறது ஐஸ்கிரீமிஸ்ட்ஸ் கம்பெனி!
ஒரு தாய்ப்பால் ஐஸ்கிரீம் விலை 14 பவுண்டுகள்! [23 டாலர்கள், கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு ரூபாய்கள்!}

Friday 22 April 2011

பிராயச்சித்தங்கள் நியாயங்களாவதில்லை!

 மெல்லப்பரவி வரும் இருளில் என் ஹோட்டல் ‘ப்ரியா’ வண்ன விளக்குகளின் பின்னணியில், செயற்கை நீரூற்றுக்களின் ஒளிச்சிதறல்களிடையே தனி அழகுடன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து விலகி, அரையிருளில் கிடந்த ஒரு நற்காலியில் அமர்ந்தவாறு, ஆங்காங்கே பணி புரிந்து கொண்டிருந்தவர்களது சுறுசுறுப்பையும் பலதரப்பட்ட உனர்ச்சிக்குவியல்கள் அடங்கியிருந்த ஜனத்திரளையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று முதுகில் யாரோ தட்டியதும் சற்று கோபத்துடன் திரும்பினேன்.

“ராமு!”

“ செல்வம்! எத்தனை நாட்கள், வருஷங்கள் ஆகி விட்டன நாம் சந்தித்து! முதலில் நீதானா என்று சந்தேகமாகவே இருந்தது எனக்கு! பிறகு இது என் செல்வத்தைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிந்து விட்டது.. ..”

அவன் முகத்தில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியைப்பார்த்தபோது என் மனதில் ஏற்பட்டது மகிழ்வா, ஆத்திரமா, கசப்பா என்று எனக்கே தெரியவில்லை. முறிந்து போனதாக நினைத்திருந்த நட்பு, ‘ மறுபடியும் இது துளிர்க்கும்’ என்பது போலல்லவா இவன் சிரிக்கிறான்!

இருவரும் குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது, ராமு மெதுவாகத் தயக்கத்துடன் கேட்டான்.

“ அவள்..அவளை.. .. நீ எங்காவது பார்த்தாயா?”

ராமுவையே உற்று நோக்கிக்கொண்டிருந்த என்னுள் கோபம் திரண்டெழுந்தது.

“ அவள் என்றால் யார் ராமு? இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால்.. உன்னால் கருகிப்போன யாரைப்பற்றியாவது கேட்கிறாயா?”

ராமு என் கரங்களைப்பற்றி அழுத்தினான்.

“ ப்ளீஸ்.. செல்வம்.. ..ப்ளீஸ்”

என்னால் ஏனோ என்னைக்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“ அவளை முதன் முதலில் பார்த்தபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? வைகறைப்பொழுதின் மலர்ந்தும் மலராத ஒரு பரிசுத்தமான பூவின் நினைவுதான் தோன்றியது எனக்கு. இத்தனை அழகாக, குழந்தையாகச் சிரிக்கும் இவளை நேசிக்கத் தெரியுமா உனக்கு என்றுதான் நினைத்தேன் ராமு! நீ அப்போது என்ன சொன்னாய்? இது உன்னுடைய வழக்கமான பலவீனம் இல்லையென்றாய். உன்மையாகவே அவளைக்காதலிப்பதாகச் சொன்னாய். என்னால் மேலே வாதாட முடியவில்லையே தவிர, நான் உன்னை நம்பவேயில்லை ராமு!”

“ ப்ளீஸ்.. .. செல்வம்! குரங்கு கையில் பூமாலையாய் அவள் சிதறிப்போனது என்னால்தான்.. .. எதற்கு செல்வம் பழைய குப்பையைக் கிளறுகிறாய்?”

“ ராமு! என்னைக் கொஞ்சம் பேச விடு. இருபது வருடங்களாக அழுத்திக்கொண்டிருந்த மனச் சுமை இந்த நிமிடம்தான் இறங்கிக் கொண்டிருக்கிறது, தெரியுமா உனக்கு? நீங்கள் எவ்வளவோ சிரித்தாலும் நெருக்கத்திலிருந்தாலும் என்னால் அதையெல்லாம் நிதர்சனமாக ஏற்றுக்கொள்ள‌ முடிந்ததே இல்லை. என் மனதில் ஏதோ ஒன்று, இது சீக்கிரமே காற்று போன பலூனாகப் போகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை மறுபடியும் வேறொருத்தியுடன் பார்க்கப் போகிறேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.

ராமு இடை மறித்து மெதுவாகப்பேசினான்.

" அன்றைக்குக் கொதித்துப்போய் நீ கூறிய வார்த்தைகள் என் நெஞ்சில் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன, செல்வம்! நீ கூறினாய், ' நீ மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறாய்! உன் இளமையின் பலத்தாலும் தான் என்ற கர்வத்தாலும் இன்னும்கூட மேலே மேலே பறப்பாய்! ஆனால் கீழே இருப்பது தரைதான். களைப்புடன் என்றாவது நீ  இறங்கும்போது நிச்சயம் உன்னை வரவேற்க யாருமே இருக்க மாட்டார்கள் ' என்று கூறினாய். உண்மைதான் செல்வம்! நான் இப்போது கீழே தான் இருக்கிறேன். என் மனைவியையும் இழந்து, கண்ணுக்கெட்டியவரை யாருடைய உன்மையான அன்பின் துணையில்லாமல் தனியாக‌ நிற்கிறேன். உயரத்தில் கூடப்பறந்தவர்கள் எல்லாம் உண்மையான துணைகள் இல்லை என்பதை இப்போது என்னை சுடும் தனிமையில்தான் உணர்கிறேன் செல்வம்!"
 
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து சிதறியது!

" ராமு! என்ன இது?"

" செல்வம்! என் குழந்தையைப்பற்றி.. .. ஏதாவது தகவல்.. .. உனக்குத் தெரியுமா?"

மறுபடியும் எனக்கு கோபம் பொங்கி எழுந்தது.

" எந்தக்குழந்தை? 'இந்தக் குழந்தை என்னுடையதுதான் என்று எனக்கெப்படித் தெரியும்' என்று அன்றைக்குக் கேட்டாயே, அந்தக் குழந்தையா? அது எப்போதிலிருந்து உன்னுடையதாயிற்று.. ..?"

"ப்ளீஸ்.. .. என்னை வதைக்காதே... .."

ராமு சோர்ந்து போய் அமர்ந்திருந்தான். கலங்கியிருந்த அவனது முகத்தைப்பார்த்த போது, கோபத்தையும் வருத்தத்தையும் மீறி அவன் மனதிற்கு இதமாக ஒரு மகிழ்ச்சியைத் தரவேண்டும்போல் இருந்தது எனக்கு.

" ராமு! அவள்..ராஜி இங்கு தானிருக்கிறாள். அவள் மகனுக்கும் அதாவது உன் மகனுக்கும் என் மகளுக்கும் வெகு விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது.. .."

சற்று நேரம் என்னையே வெறித்து நோக்கியவனின் கண்களில் மெதுவாக பனி படர்ந்தது. உணர்ச்சியுடன் என் கரங்களை பற்றினான்.
 
" செல்வம்! உனக்கு எப்படி என் நன்றியைத் தெரிவிப்பதென்றே தெரியவில்லை. நான் இழந்த நிம்மதியை, மகிழ்ச்சியை நீதான் மீட்டுக்கொடுத்திருக்கிறாய்.அவள்.. ராஜி எங்கிருக்கிறாள் செல்வம்?"

" நீ அவளைப் புறக்கணித்து வேறொருத்தியை மணந்து சென்ற பிறகு, நான் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். அவள் மேலே ப‌டித்து, இப்போது கல்லூரியொன்றில் விரிவுரையாளராக வேலை செய்கிறாள். உன் மகன் மேற்படிப்பிற்காக ஜெர்மனி சென்றிருக்கிறான்.. .."

அவன் முகத்தில் பலதரப்பட்ட உணர்ச்சிகள்! கண்கள் கலங்க என்னை நிமிர்ந்து பார்த்தான்.

" செல்வம்! எனக்கு அவளைப்பார்க்க வேன்டும். பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்..."

"அண்ணா!"

சரேலென்று திரும்பினேன் நான். ஐயோ! இவள் எதற்காக இங்கே வந்தாள் இப்போது?

" அண்ணா! எங்கள் கல்லூரியிலிருந்து விலகிப்போகும் ப்ரின்ஸ்பாலுக்கு நம் ஹோட்டலில்தான் பார்ட்டி ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காகத்தான் நான் அவசரம் அவசரமாக இங்கே வந்தேன் இப்போது! நீங்கள் ஏன் இங்கே தனிமையில் உட்.. .."
என் அருகில் யோரோ அமர்ந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தவளாய் சட்டென்று பேச்சை நிறுத்தினாள். நிறுத்தியபோதே அமர்ந்திருப்பது யாரென்று புரிந்து விட்ட நிலையில் உறைந்து போய் சலனமின்றி நின்றாள்.

" நான் அப்புறம் வந்து உங்களிடம் பேசிக்கொள்கிறேன்.. .."

வேகமாகத் திரும்பி நடந்தவளை ராமுவின் வார்த்தைகள் நிறுத்தின.

"ராஜி! உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேன்டும்.. .."

என் அருகேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். வேகமாக எழுந்த என்னையும் அதட்டினாள்.

" அண்ணா! நீங்களும் இருங்கள். அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். அதை உங்கள் முன்னேயே கூறட்டும்.."

ராமுவின் கண்கள் கலங்கின.

" ராஜி! இத்தனை நாட்களாய் உனக்குக் கொடுக்கத் தவறிய வாழ்க்கையை இனியாவது கொடுத்து.. .. அதன் மூலமாவது உன் மன்னிப்பு எனக்குக் கிடைக்குமா?"

அவள் மெதுவாகச் சிரித்தாள்.

" என்னை நீங்கள் இன்னும் சரியாக கவனிக்கவில்லை. என் நெற்றியில் குங்குமமில்லை. என் உடலில் வெள்ளை நிறப்புடவைதான் இருக்கிறது. பார்க்கவில்லையா நீங்கள்?"

" ராஜி.. .. .."

" இது எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷம். வெளியுலகத்திற்குத்தான் வேஷமே தவிர, என்னைப்பொறுத்தவரை என் உண்மையான நிலையும் இதுதான். பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத நிலையில், உங்களையே நம்பி, என்னை வளர்த்த பெரியப்பாவை விட்டு வெளியேறி வந்த என்னை, முழுவதுமாக வாசத்தையெல்லாம் நுகர்ந்து விட்டு, ஒரு குழந்தையையும் பரிசாகக் கொடுத்து விட்டு நீங்கள் வேறு மலருக்குத் தாவி விட்டீர்கள். எனக்காகப் பரிந்து பேச வந்த அண்ணாவிடம் இந்தக் குழந்தையையே சந்தேகித்துக் கேட்ட பிறகு என்னிடமிருந்த எல்லாமே செத்து விட்டன. வெளியுலகின் பேச்சுக்களைத் தவிர்க்க உங்களையும் சாகடித்து விட்டேன். உங்களின் கேள்விக்கு இதுதான் பதிலும்கூட!"

அவளின் பேச்சு என்னை பிரமிக்க வைத்தது.

'சொன்ன மொழி தவறு மன்னனுக்கே எங்கும் தோழமையில்லை' என்னும் வரிகளை அவள் நிதர்சனமாக்கி விட்டாள்.

 என் பிரமிப்பு அவனின் கெஞ்சுதலால் கலைந்தது.

" என்னுடைய தவறுகளுக்கு, நான் உனக்கு இழைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தம் செய்ய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க மாட்டாயா ராஜி?"

அவள் அமைதியுடன் அவனை நோக்கி புன்னகைத்தாள்.

" தழும்பாகிப்போன மனக்காயங்களுக்கு என்ன பிராயச்சித்தங்கள் செய்ய முடியும் சொல்லுங்கள்? ஏனென்றால் பிராயச்சித்தங்கள் என்றுமே நியாயங்களாவதில்லை. பிராயச்சித்தங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனது சொல்லும் தீர்ப்புகள்தானே தவிர பாதித்தவர்களது தனி நியாயங்கள் அல்ல!"

இருவரும் பேச்சிழந்து நிற்க, அவள் மெதுவாக விலகி நடந்தாள்.


பின் குறிப்பு:

மே 1983ல் 'பாரதி' என்ற எனக்குப்பிடித்தமான புனைப்பெயரில் ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை இது.
ஓவியர் ராமு அழகாக படம் வரைந்திருந்தார்.

இது ஒரு உண்மைக்கதையும் கூட! ஆனால் நிஜக்க‌தாநாயகி என் கதையின் நாயகி போல அமைதியாய் விலகி இருக்கவில்லை. இக்கதை வெளி வந்த பிறகு சில வருடங்கள் கழித்து, நாயகனுக்கெதிராய் வழக்கு போட்டு அதில் ஜெயிக்கவும் செய்தாள்.அதனால் நாயகனின் நல்ல வேலையை அவன் இழக்கவும் காரணமானாள். 

Tuesday 12 April 2011

பெண் எழுத்து-தொடர் பதிவு



இந்தத் தொடர்பதிவில் பங்கு பெற சகோதரி ஸாதிகா என்னை அழைத்ததற்கு என் இதயங்கனிந்த நன்றி!

எழுத்து என்பது ஆழ்ந்த மன உனர்வுகளின் அருமையான வடிகால். இலக்கியச் செறிவுக்கும் ஆழ்ந்த கருத்துக்களுக்கும் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும் ஆண் பெண் என்ற‌ வித்தியாசமில்லை தான். ‘ நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்’ கொண்ட ‘ பாரதி ’யின் வழி வந்த பெண்களின் உலகளாவிய பார்வையும் தீக்கனலான சிந்தனைகளும் இன்று அறிவுப்பூர்வமான எழுத்துக்களாய் ஆணுக்கு நிகராய் திக்கெங்கும் புகழ் பரப்புகின்றன! இதிலும் கருத்து பேதமில்லை. ஆனால் நிச்சயம் பெண் எழுத்துக்கும் ஆண் எழுத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன!

ஒரு பெண், அவள் பெண் என்பதாலேயே அவளின் எழுத்து கண்ணியமாக, மற்றவர்கள் முகம் சுளிக்காத அளவில் தரமான எழுத்தாக இருந்தேயாக வேண்டும். புகழ் பெற்ற எழுத்தாளரான ‘ சாண்டில்யனின்’ எழுத்துக்கள் சிருங்கார ரசம் மிக்கவை. ஒரு பெண்ணால் அப்படி எழுத முடியாது, எழுத மாட்டாள் என்பது தான் நிதர்சனம். அவளைச் சுற்றி நாகரீகம், சமூகக்கட்டுப்பாடு, பண்பாடு என்ற மென்வேலிகள் இருக்கின்றன. அதை அவளால் உடைத்தெறிய முடியும். ஆனால் அவள் அதை உடைக்க விரும்ப மாட்டாள்.



அதற்கு மாறாக தன் தரம் மிக்க எழுத்தால் சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி சுப்ரமணியம், லக்ஷ்மி போன்றவர்கள் 40 வருடங்களுக்கு முன்பே ஜெயித்துக்காட்டியிருக்கிறார்கள். நிகழ்காலத்தில் சிவசங்கரி, அனுராதா ரமணன், வித்யா சுப்ரமணியம் போன்று எத்தனையோ பெண்கள் இன்று தங்களின் வித்தியாசமான எழுத்தால், வித்தியாசமான சிந்தனைகளால் புகழும் பெயரும் அடைந்திருக்கிறார்கள். முக்கிய‌மாக‌, எழுத்தாள‌ர் சிவ‌ச‌ங்க‌ரி கான்ஸ‌ர், போதைப்பொருள்க‌ளினால் ஏற்ப‌டும் சீர‌ழிவு இப்ப‌டி ப‌ல‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ள், வியாதிக‌ள் இவ‌ற்றை நிலைக்க‌ள‌ன்களாக‌‌க் கொன்டு ஆராய்ச்சிக‌ள் செய்து நாவ‌ல்க‌ளைப் ப‌டைத்து புக‌ழடைந்திருக்கிறார். திருமதி.விதயா சுப்ரமணியம் தனது 'உப்புக்கணக்கு' நாவலில் தேச பக்தியை நிலைக்களனாக வைத்து அன்பு என்னும் வலைகளை அதைச் சுற்றி பின்னியிருப்பார். இவர்களெல்லாம் இப்படி புகழடைந்ததற்கான அடிப்படை வேர்கள் எந்த எழுத்தில் ஆரம்பமானது என்கிறீர்கள்? குடும்ப உறவு, அன்பு, பாசம் இவற்றின் அடிப்படையில்தான்.

அதைப்பற்றித்தான் இங்கே சொல்ல வருகின்றேன். ஒரு வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்ற புகப்பெற்ற‌ ஒரு வாக்குண்டு. இன்றைக்கு நாடு முழுவதும் மன முறிவுகளும் சிதைவுகளும் விவாகரத்து வழக்குகளும் பரவிக்கிடக்கின்றன. குடும்ப உறவின் அடி நாதங்களான பிரியம், பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்றவை மெல்ல மெல்ல மறைந்து வருவதுதான் இவற்றுக்கெல்லாம் காரணம். இதற்கு தார்மீகப்பொறுப்பேற்க வேன்டியவர்கள் பெண்கள்தான் என்பேன் நான். மெல்லிய மயில் தோகை போல மென்மையானவள் பெண். குடும்பப்பொறுப்புகளை ஏற்று, அவள் அடையும் அனுபவங்கள் அவளுக்கு யானை பலத்தைத் தருகின்றன. அவளுக்கு அன்பையும் குடும்ப உறவின் நன்மைகளையும் பொறுப்புணர்வையும் சொல்லிக்கொடுக்க வேன்டிய பொறுப்பு இருக்கிறது. அவளின் எழுத்தில் முதல் நிலைக்களனாக இவையெல்லாம்தான் இருக்க வேண்டும். அதற்குப்பிறகு காற்றைச் சாடி, தீயாய் தகித்து, ஆகாய‌மாய் உயர்ந்திருக்க அவள் எழுத்திற்கு எத்தனையோ நிலைக்களன்கள் இருக்கின்றன! ஆனால் அடிப்படை வேரான அன்பிலிருந்தும் குடும்ப உறவிலிருந்தும்தான் அவள் எழுத்து ஆரம்பிக்க வேன்டும். அந்த எழுத்து பல இதயங்களை சுத்திகரிக்க வேன்டும். அதனால் நாடு நலம் பெற வேண்டும்.

பழம்பெரும் பெண் புலவர் ஒளவையார் தனது தனிப்பாடலில்

" பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால்
எத்தாலும் கூடி இருக்கலாம்‍ சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே- யாமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்"

என்று கூறியிருப்பதை நான் அடிக்கடி நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. ஒரு பெண்னே, 'உன் மனைவி சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்' என்று ஆண்களுக்குக் கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு அந்தக்காலத்தில் பெண்களுக்கான நெறி முறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இப்போது காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ஆணுக்கு நிகரான சம உரிமை வந்து விட்டது. படிப்பில், அலுவலகங்களில், சாதனைகளில் இப்படி பல விஷயங்களில் பெண் உயர்ந்து நிற்கிறாள். ஆனால் காலச்சுழற்சியில் காணாமல் போனதென்னவோ திருமண உறவுகளும் கூட்டுக்குடும்பங்களும்தான்!

இதற்கு அடிப்படைக்காரணங்களான அன்பையும் பாசத்தையும் குடும்ப உறவுகளுக்கான வேர்களான விட்டுக்கொடுத்தல், பொறுப்புணர்ச்சி, பொறுமை இவற்றையும் முழுமையாக உயிர்த்தெழுக்கசெய்வதுதான் பெண் எழுத்தின் அடி நாதமாக இருக்க வேண்டும். வள‌‌ரும் குருத்துக்க‌ளும் செழித்து வளர்ந்திருக்கும் இளைய தலைமுறையும் இதனால் பயன் பெற வேன்டும். முதியோர் இல்லங்கள் மறைய வேன்டும்.

இந்த அடி நாதங்களைத்தான் ஆதார சுருதிகளாக தன் புதினங்களில் எப்போதும் எழுதி வருகிறார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்! அதற்காக சக பதிவர் என்ற முறையிலும் அவரின் சினேகிதி என்ற முறையிலும் அவருக்கு இங்கே நன்றி கூறுகிறேன்!

இந்தத் தொடர் பதிவில் பங்கேற்க

அன்பிற்குரிய‌


எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்,
எப்போதும் அன்பையும் உண்மையும் தன் எழுத்தில் கொண்டு வரும் 'கற்ற‌லும் கேட்டலும்' ராஜி,
தன் கவிதைகளாலும் இலக்கிய சிந்தைனைகளாலும் எப்போதும் அசத்தி வரும் 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி,

இவ‌ர்க‌ளை அன்புட‌ன் அழைக்கிறேன்!



நன்றி: கூகிள்

Wednesday 6 April 2011

அனுபவங்களே முத்துக்களாய்.. .. ..!!!

நம் வாழ்க்கை, தினந்தோறும் சோகம், மகிழ்வு, அதிர்ச்சி, கசப்பு, -இப்படி பல உணர்வுகளை அள்ளித்தெளித்து, அனுபவங்களால் நம்மை முதிர்ச்சியடைய வைக்கிறது. இலைகளினூடே ஒளிரும் ஒளிக்கற்றைகள் போல், நெடுகச் செல்லும் இந்த அனுபவங்களிடையே சில கவிதைகள், கதைகள், சில அசத்தும் சம்பவங்கள், கொஞ்ச நேரம் நம்மை நிற்க வைத்து புன்னகைக்கச் செய்கின்றன, ரசிக்கச் செய்கின்றன!! நம்மை யோசிக்க வைக்கின்றன!!


சமீபத்தில் ரசித்த கவிதை இது. வாழ்க்கையின் நிதர்சனமும்கூட. ஒரு வாரமலரில் வெளி வந்திருந்தது.



'அச்சம் தவிர்' என்கிறான் பாரதி

'பயந்து நட' என்கிறார் அப்பா!

'துணிந்து நில் என்கிறான் பாரதி

'பணிந்து நட' என்கிறாள் அம்மா!

'ரவுத்திரம் பழகு' என்கிறான் பாரதி

கோபம் குறை என்கிறான் அண்ணன்!

'சிறுமை கண்டு பொங்குவாய்' என்கிறான் பாரதி

'நமக்கேன் வம்பு, கண்டு கொள்ளாதே' என்கிறார் கணவர்!

'நாடாளச் சொல்கிறான்' பாரதி.

'வீட்டுக்குள் ஒடுங்கச் சொல்கிறார்' மாமியார்!

'பெண்மையைப்போற்றுவோம்' என்கிறான் பாரதி.

தூற்றத் துடிதுடிக்கிறது ஊர்!

சகல் விஷயங்களிலும்

உதைபடும் பந்தாய்

அலைக்கழிக்கப்படுகிறேன் நான்!

யார் சொல்வதைக் கேட்பதாம்?

***************************************

இதுவும் கூட நான் பொக்கிஷமாக என் டைரியில் பல வருடங்களாகப் பாதுகாத்து வரும் ஒரு ஆங்கிலக் கவிதை. தமிழாக்கம் செய்திருக்கிறேன். இதுவும் வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்த்தும் கவிதை! அது மட்டுமல்ல, இது ஒரு வழிகாட்டியும்கூட.. .. ..

இனி கவிதை .. ,, .. ..

“எல்லோருக்குமே நம் வாழ்வில் முன் வரிசையில் இடம் தந்து விட முடியாது.

சிலர் மட்டும் தூரத்தில் வைத்தே அன்பு செய்யப்பட வேண்டியவர்கள்.

மாறுபட்ட, கருத்திற்கு ஒவ்வாத, விரும்பத்தகாத உறவுகளை இதுபோல தூரத்தில் வைக்கும்போது, இந்தச் செயல் எந்த அளவு நம் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பிரமிப்பளிக்கக்கூடிய விஷயம்!

உங்களைச்சுற்றி இருக்கும் உறவுகளை கூர்ந்து கவனியுங்கள்.

எந்த உறவு உங்களை மேல் நிறுத்துகிறது?

எந்த உறவு உங்களைக் கீழே தள்ளுகிறது?

எந்த உறவு உங்களை ஊக்குவிக்கிறது?

எந்த உறவு உங்களை அதைரியப்படுத்துகிறது?

தரம், வளர்ச்சி, அமைதி, அன்பு, உண்மை இவற்றை நீங்கள் தேடத்தேட, யாரை நம் வாழ்க்கையில் முன் வரிசையில் உட்கார வைக்க வேண்டும், யாரை பின் வரிசையில், பால்கனியில் உட்கார வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

தேடலில் கிடைக்கும் வலியை முத்துக்களாக்குங்கள்.



கடந்த காலத்தில், நிகழ்காலத்தில் நிறைய நிகழ்வுகள் உங்களை சோர்வடைய வைத்திருக்கும், வெறுப்படைய வைத்திருக்கும், சிந்தனையைத்தூண்டியிருக்கும், உங்களையே விழுங்கியிருக்கும். இந்த பாதிப்புக்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஒரு வகையான பாதிப்பு, சிப்பியினுள் நுழையும்போது, அது ஒரு திரவத்தை சுரந்து அந்த பாதிப்பை ஒரு போர்வை போல மூடுகிறது. பல மாதங்களுக்குப்பின் இது ஒரு முத்தாக மாறுகிறது.

அது போல ஒரு பாதிப்பு, உங்களுக்குள் நுழையும்போது, அது உங்களையே கரையான் போல அரித்து, பல வித நோய்களை உண்டு பண்ணுகிற அளவு அந்த பாதிப்பிற்கு நீங்கள் இடம் கொடுக்கலாம். அல்லது இந்த பாதிப்பு உங்களை எதுவுமே செய்ய இயலாதவாறு இது போன்ற விலைமதிப்பற்ற ‘முத்துக்கு’ச் சமமான அறிவு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று எதிர்காலத்திற்குத் தேவையான நம்பிக்கையையும் புதிய பார்வையையும் பெறலாம்.

எது வேண்டும் உங்களுக்கு?

படங்களுக்கு நன்றி: http://www.tamilvu.org/

                                           http://www.appusami.com/