Monday 21 February 2011

வடிகால்

முந்தைய வாரத்தின் தொடர்ச்சி......   



“ இது விளையாட்டில்லை பாட்டி. யாசகம். ஒரு குழந்தையைப் பெற முடியாதவளின் ஆசை. ஒரு விபத்தில் இவளுக்குத் தாய்மையின் தகுதி போய் விட்டது. ஒருவருக்கு மற்றவர்தான் துணை என்று அவளைப் பழக்கினேன். ஆனால் அவளுடைய ஏக்கத்தை என்னால் போக்க முடியவில்லை. ஏதாவது ஒரு குழந்தையை-அதுவும் இந்தியாவில்-தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற முடிவு செய்த பிறகு நாங்கள் முதன் முதலாக நுழைந்த ஊர் இதுதான். இந்தக் குழந்தையைப் பார்த்த பிறகு என் மனைவி கேட்டது சரிதானோ எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஜார்ஜ்.

“ இதற்குப்பெயர் யாசகம் இல்லை. இல்லாததைக் கேட்டு வாங்குவது என்பது யாசகமாய் இருக்கலாம். ஆனால் மற்றவருடைய குழந்தையை தன் வயிற்றில் பிறந்ததாக நினைத்து வளர்க்க, அதற்கு கல்வி, மற்ற எல்லா செல்வங்களையும் கொடுத்து உயர் நிலையில் வைக்க மனதில் ரொம்பவும் கருணை-பெருந்தன்மை வேண்டும்”

பாட்டியின் அழகான ஆங்கிலத்தில் அதிசயித்துப்போய் ரோஸரீனா கேட்டாள்.

“எப்படி பாட்டி இத்தனை அழகாக உங்களால் ஆங்கிலம் பேச முடிகிறது?”

“அதுவா? நான் சின்னப் பெண்ணாக இருந்தபோதே கற்றுக்கொண்டது.. .. ..”

பாட்டியின் முகம்-எதிலோ-எந்த நினைவிலோ மெய்மறப்பது போலிருந்தது.
பாட்டிக்கு தன் சிறு வயதுப்பெயர் ஞாபகத்திற்கு வந்தது.

குமுதம்!

ஓர் ஆசிரியரின் மகளாய்ப் பிறந்ததால் இயற்கையாகவே அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் அவளுள் நிரம்பியிருந்தது. தந்தை தன் மாணவர்களுக்காக திண்ணையில் ஆங்கிலம் கற்பித்தபோது இவளும் உட்புறத்தில் அமர்ந்தவாறே நோட்டில் எழுதிப்படித்துக் கற்றாள்.
அவ்வளவு உற்சாகம்.. ஆசை..அன்பு..கருணை என வாழ்க்கையில் எத்தனையோ உணர்ச்சிகளை வைத்திருந்தவள், பதினைந்து வயதில் திருமணம் என்ற ஒன்று ஆனதுமே மாறிப்போனாள்.

கணவனிடம் தோழமையில்லை. அவனுடைய தாயிடம் தாயின் பரிவில்லை. மற்றவர்களிடமோ உண்மையான அன்பில்லை. அவளின் கருணைக்கோ, பரிவிற்கோ அங்கு எந்தப்பயனுமில்லாமல், வெகுளித்தனமான மனசில் நிறைய அடிகள் விழ விழ அவள் மாறிப்போனாள். திரும்பவும் பெற்றோரைப் புகலிடமாக நினைத்துப்போக அவர்கள் உயிருடன் இல்லாத நிலையில், வெளியே சென்று பிழைக்கும் அளவிற்குக் கல்வித்தகுதியுமில்லை என்ற நிதர்சனத்தில்  அவள் முற்றிலும் ஜடமாகிப்போனாள். மலடி என்ற பட்டம் அவள் உள்ள‌த்தைக் கிழித்துப்போட்ட பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத் தொண்டையிலேயே நிறுத்தி விடும் அள‌வு அவள் பழகிப்போனாள்.

அவளுடைய பதினைந்து வயதிலிருந்து அறுபது வயது வரை அனுபவித்த சிறைவாசம் அவளுடைய கணவனின் இறப்பென்ற முடிவில் ஒரு நாள் நின்று போனது. அத்துடன் அவள் கணவனால் ஏற்பட்டிருந்த கடன்களுக்கு அந்தப் பெரிய வீடும் அதன் சொத்துக்களும் சரியாகப்போனதும் அவள் அமைதியாக பெற்றோர் அவளுக்கென விட்டுச் சென்ற இந்த பழைய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளுக்கு தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. மூச்சு முட்ட அனுபவித்த சிறை வாசம் நின்று போன மகிழ்வில், இந்த விடுதலையை-அதன் அமைதியையாவது அவள் எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் அனுபவிக்கத் தீர்மானித்திருந்தாள்.

“ பாட்டி!”

ஒரு நிமிடத்தில் பழைய உலகிற்குப்போனவள் மறுபடியும் அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.

“ ஒண்ணுமில்லை.. .. பழைய ஞாபகங்கள்.. ..”

அவர்கள் விடை பெற எழுந்தார்கள்.

“ பாட்டி! குழந்தையைப்பற்றி  .. ..”

 “ இல்லையப்பா! இத்தனை நாட்கள் எந்த பந்தமுமில்லாது வாழ்ந்து விட்டேன். இந்தப் புதிய உறவு இந்த வயதில்கூட எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது!”

“ ஓ.கே.பாட்டி! நாங்கள் கிளம்புகிறோம், இங்கு மலை மேலுள்ள கோவிலுக்கு இன்றைக்கு மாலை சென்று விட்டு அப்படியே ஊருக்குக் கிளம்புகிறோம். ஒரு வேளை உங்கள் மனசு மாறினால் .. .. எங்களை நீங்கள் அங்கே சந்திக்கலாம்.”

அவர்கள் விடை பெற்றுப்போய் ரொம்ப நேரமாகியும் அவள் பேசாமலேயே அந்த சாய்வு நாற்காலியிலேயே சாய்ந்து கிடந்தாள்.

‘இந்தப் புதிய உறவு எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் எழுபது வயதாயிருக்கும் என்னால் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியைத் தர முடியுமா? நல்ல கல்வியைத் தர முடியுமா? உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியுமா? யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது போய், யாருடைய அன்பும் தேவையில்லை என்ற முதிர்ச்சியான‌ வயதில் இருக்கும் எனக்கு எதற்காக ஒரு பந்தம்? இந்த பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன்?”

மனம் கனக்க ஏதேதோ குற்ற உணர்ச்சியால் சிந்தனை குழம்பியது. கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அலை பாய்ந்தன.   பாரதியின் பாடல்களை அனிச்சையாகப் புரட்டிக்கொண்டே வந்தவளின் கண்கள் திடீரென அனிச்சையாக ஓரிடத்தில் நிலைத்தன.

“ மரணமு மஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம் பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும்- நற்புகழ் யாவுமோர் பொருளெனக்கொள்ளேன்..
.. .. .. . . . . . .. . . . . .. .. .. .. .. . . . . . .
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள் கண்ணிலாப்பேயை யெள்ளுவேன், இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன் .. .. ’
அவள் மெதுவாகக்  கண்களை மூடினாள். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. கூடவே மனதில் ரொம்ப நாட்களாய் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி விட்டதைப்போலிருந்தது. இதுவரை அவளறியாத ஓர் அமைதி மனதில் குடி கொண்டது.


மாலைக்கதிரவனின் ஒளிக்கீற்றுக்களிடையே பாட்டி மெதுவாகப் படி ஏறினாள். இருபது படிகள் ஏறுவதற்குள்ளாகவே மூச்சு இரைக்கவே, மெதுவாக படிகளுக்கிடையே இருந்த அந்த சிறு மண்டபத்தில் குழந்தையோடு அமர்ந்து கொண்டாள்.
“ பாட்டி”!
நிமிர்ந்தவளை அவர்கள் கை குவித்து வணங்கினர்.
“ என்ன பாட்டி.. ..மனசு மாறி விட்டதா?”
அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிப் பரவசத்தைப்பார்த்து மனம் கனிந்தவாறே
ஊமைப்பாட்டி கூறினாள்.

“ ஆமாம்மா! மனசு மாறி விட்டது. என் காலம் முடியப்போகிற நேரத்தில் பந்தம் எதுவும் வேண்டாம் என்று தோன்றியது. என் வேண்டுகோள் எல்லாம் இந்தக் குழந்தையை நீங்கள் நன்றாக படிக்க வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வளவுதான்.”

பாட்டி மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தாள்.

“பாட்டி! இந்தக் குழந்தைக்கு ஏதாவது பணம்..”

“ இந்தப்பணமென்பது என்னிடம் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை உங்களிடம் தந்திருக்க மாட்டேன்..”

அவர்கள் பல முறை நன்றி கூறி, கண்கள் கலங்கப் புறப்பட்டுச் சென்ற பிறகும்.. போய் வெகு நேரமாகியும் பாட்டி சிவந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்து, திடீரெனெ ஏற்பட்ட ஒரு பந்தத்தை ‘தன்னைப்போன்ற’ இன்னொருத்திக்கு அர்ப்பணித்தபோது.. ..இத்தனை நாட்கள் செயலற்று, வழியற்றுக் கிடந்த அவளின் கருணைக்கும் அன்புக்கும் இந்த வடிகால் கிடைத்த நிறைவில் அவள் மனது மகிழ்ச்சியால் பொங்கியது. சுத்தமாக பந்தங்களையும் பாசங்களையும் அறுத்து விட்டு, யாருக்கும் பயப்படட் தேவையில்லாமல்.. .. சுதந்திரமாக, நிச்சலனமாக.. .. தன் மனதுக்குப் பிடித்தமான ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு  பெரிய விஷயம்? எழுபது வருட ரணங்களும் துன்பங்களும் இந்த சாதனையில் தூசியாய் மறைய ஆரம்பிக்க, கிழவி சிரித்தவாறே இறங்க ஆரம்பித்தாள்.

கீழே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் “டேய்! ஊமைப்பாட்டி சிரிக்கிறாங்கடா!” என்று ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார்கள்!!   

 [நிறைவடைந்தது]                                  

Monday 14 February 2011

வடிகால்

25 வருடங்களுக்கு முன் சிறு கதைகள் பல இதழ்களில் எழுத ஆரம்பித்த சமயம். ஆனந்த விகடனுக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட இந்த சிறுகதை உடனடியாக வெளியானதுடன் ஆசிரியரின் பாராட்டையும் பெற்றுத்தந்தது மறக்க முடியாத மகிழ்வான அனுபவம். மற்ற‌ சிறுகதைகளினின்றும் இச்சிறுகதை எனக்கு தனியான மகிழ்வைக்கொடுத்தது. காரணம் இச்சிறுகதையின் கதாநாயகி 70 வயது முதிர்ந்த, இலையுதிர்காலத்தில் நின்று கொன்டிருந்த ஒரு முதியவள். வழக்கம்போல் ரசித்து கருத்துக்களை என் அன்புத் தோழமைகள் அனைவரும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்து இதை இங்கே வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்க்கையில் வடிகால்கள் பலவிதம். இந்தப்பதிவுகள் எழுதுவதும் வலைப்பூக்களில் பங்கு கொள்வதும்கூட ஒரு வித வடிகால்தான் மனதிற்கு! கண்ணீர் சிந்துவதும், கவிதைகளும் கதைகள் எழுதுவதும், மற்ற‌வர்களை ஆனந்தப்படுத்திப்பார்ப்பதும்-‍ இப்படி உலகத்தில் பல வித வடிகால்கள் மனிதர்களுக்கு இருக்கின்றன!

இந்த வ‌டிகாலும் ஒரு முதியவளுக்குக் கிடைத்த நெஞ்சார்ந்த நிறைவு என்று கூட சொல்லலாம்!

இனிமேல் கதை தொடர்கின்றது!!  

த்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் இந்த ஊமைப்பாட்டி தட்டுமுட்டு சாமான்களுடனும் அந்த இரட்டை பீரோவுடனும் வந்து இந்த பூட்டிய வீட்டைத் திறந்தபோது ஊரே அதிசயமாய்ப் பாட்டியைப் பார்த்தது. அவள் யார், அதற்கு முன் எங்கேயிருந்தாள், குழந்தைகள், குடும்பம் உள்ள‌வளா-எதுவுமே யாருக்கும் இதுவரை தெரிந்ததில்லை. கேட்டாலும் பாட்டி பதில் எதுவுமே சொல்லாமல் ஒரே வரியில் தான் யாருமற்ற அனாதை என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுவாள்.
அந்த வீட்டில் ஊமைப்பாட்டிக்கு இருந்த ஒரே சொத்து அடுப்பிற்கு அருகாமையில் இருக்கும் அந்த இரட்டை பீரோதான். அவை நிறைய தமிழும் ஆங்கிலமுமாய் புத்தகங்கள். அவற்றில் ஏதாவதொன்றை எடுத்துப்படித்துக்கொண்டு அடிக்கடி வெளியுலகை மறந்து போவாள் பாட்டி. இட்லி சுடும் நேரங்களைத் தவிர பெரும்பாலும் இந்த சாய்வு நாற்காலிதான் அவள் உலகம்.
இட்லி வாங்க வருபவர்களிடம் எதுவும் பேசாது, சிரிக்காது, மெளனமாகவே காசை வாங்கிக் கொண்டு உள்ளே போய், தையல் இலையில் வைத்துக்கட்டிக் கொண்டு வந்து தருவாள். சுத்தமான மல்லிகைப்பூப்போன்ற அந்த இட்லி, கடந்த பத்து வருடங்களாய் தரம் மாறாத ருசியுடன் இருந்ததால், நல்ல பெயருடனும் மதிப்புடனும் பாட்டியின் இட்லி வியாபாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.
பாட்டியின் கம்பீரமான-அமைதியான சிரிக்காத முகமும்-இந்த எழுபது வயதிலும்கூட முழுவதும் நரைக்காத தலைமுடியும் அவளை மிகவும் மரியாதைக்குரியவளாக வாழச் செய்து கொண்டிருந்தன. எப்போதோ-எந்த குழந்தையோ வைத்த ‘ஊமைப்பாட்டி’ என்ற பெயரும் நிலைத்துப்போயிற்று. அவளும் அதை மெளனமாகவே ஏற்றுக்கொண்டாள்.
ஆனால்.. .. ..
கடந்த ஒரு வாரமாக ஊமைப்பாட்டியின் வீடே மாறியிருந்தது. அந்த வீட்டின் நடு மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த துணித்தூளியில் அன்றலர்ந்த மலர் போன்ற ஒரு குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது. பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்காக பாட்டிக்குப் படிக்கும் நேரமும் குறைந்து போய், கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீரையிறைத்து பிள்ளைத்துணிகளை அலசும் வேலைகள் தினமும் பல முறை ஏற்பட்டன.
அந்தக் குழந்தை யாரென்ற கேள்விக்கு ஊமைப்பாட்டி ஒரே வரியில் பதிலளித்தாள்.
“ என் பெண் வயிற்றுப் பேத்தி!”
உண்மையில் அந்தக் குழந்தையை ஒரு நாள் ஊரையடுத்திருக்கும் மாரியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள இலுப்பைத்தோப்பில், அந்தி வேளையில் ஊமைப்பாட்டி கண்டெடுத்தாள். அதுவும் மனதைத் தாக்கும் சூழ்நிலையில். பக்கத்திலுள்ள மரத்தில் நாகல் பழ நிறத்தில் கிழிந்த அழுக்கு ஆடையில் எண்ணெய் காணாத முடியுடன் ஒரு பெண் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க.. .., வெளியுலகின் அவலங்களோ, அசிங்கங்களோ தெரியாத அந்தக் குழந்தை அழுது கொண்டிருப்பதைப்பார்த்ததும் பல வருடங்களுக்குப்பிறகு அவள் மனது கலங்கிப்போயிற்று. இற‌ந்ததன் மூலம் தன் வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடிவு கண்ட அந்தப்பெண், தன் குழந்தைக்கு மட்டும் எந்த விடிவையும் காண்பிக்காமல் ஏன் தனியே விட்டுச் சென்றாள்?
தாயின் நிறத்துக்குச் சம்பந்தமே இல்லாமல்-ரோஜா நிறத்துடன் அவளை உற்று நோக்கிய அந்தக் குழந்தையின் முகம் அவளின் எழுபது வருட வாழ்க்கையின் வெறுமையையும் நெஞ்சத்துத் துன்பங்களையும் ஒரே நிமிடத்தில் குபீரென நினைவுக்குக் கொண்டு வந்தது. உறுதியால் மடிந்த உதடுகளுடன் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்தாள். மலடி என்று எத்தனையோ பேர் சுட்ட ஆறாத ரணங்களுக்கு அந்தக் குழந்தையின் மென்மை இதமாக இருந்தது.
‘ எங்கோ குப்பை மேட்டில்-அதையாகவோ-முறையற்றோ-எந்த ஜாதியிலோ பிறந்து-சமுதாய‌த்தில் எள்ளி நகையாடும் நிலையில் விழவிருந்த ஒரு குழந்தையை-அல்லது கத்திக் கத்தியே கவனிப்பாரற்று சாகவிருந்த இந்தக் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்’
அவள் நினைவுகள் உன்னதமானவை. கூடவே அவை அன்பில்லாத கொடுமையினாலும்-யாருமற்ற வரட்சியினாலும் ஏற்பட்டவை. எழுபது வருடங்களுக்குப் பின் புதியதாக ஒரு துணை-அதுவும் இந்த மண்ணின் வஞ்சகமும் சூதும் தெரியாத பச்சிளம் மழலையொன்று கிடைத்ததும் அந்த ஒரு நிமிடத்தில் பாட்டியின் வாழ்வே மாறிப்போனது.
 
ணி பத்தாகியிருந்தது. யாரோ வெளியில் அழைக்கும் குரல் கேட்டதும் கதவைத் திறந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள்.
இரு வெள்ளைக்காரர்கள்-ஆணும் பெண்ணுமாய் கெள‌ரவத் தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
 
“ ப்ளீஸ்..பி ஸீட்டட்”

அவர்கள் அதிசயித்துப்போனவர்களாய் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்தார்கள். தன்னை ஜார்ஜ் என்றும் தன் மனைவியை ரோஸரினா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டவர் தொடர்ந்து சொன்னார்.

“ நாங்கள் இந்த ஊர் மலையிலுள்ள கோவிலைப்பார்க்க வந்தோம். தாமதமாக வந்ததால் காலையில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது இங்கு இட்லி கிடைக்கும் என்று சொன்னார்கள்”

பாட்டி உள்ளே சென்று இட்லிகளும் தேங்காய்ச் சட்னியும் தையல் இலைகளுடன் கொண்டு வந்தாள். இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டதும் ரோஸரினா சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பாட்டி குழந்தையை சமாதானப்படுத்தியவாறே தூக்கி வந்தாள்.

“இது யார் பாட்டி?”
“ இறந்து போன என் பெண்ணின் குழந்தை”
“பாட்டி! இந்தக்குழந்தையை இந்த வயதில் உங்களால் வளர்க்க முடியுமா? என்னிடம் கொடுத்து விடுங்களேன்.”
“என்னது?”
கேட்ட மாத்திரத்திலேயே மனது பதறிப் போயிற்று. கையிலிருந்த வைரங்களை யாரோ தட்டிவிட்டது போல சிந்தனை குழம்பிப்போனது.
[தொடர்கின்றது...........]

Wednesday 9 February 2011

பெண்ணெனும் வீணையின் ராகங்கள்!!

திரைப்படங்களில் ஒரு பெண்ணின் உணர்வுகளை கவிஞர்கள் எல்லோரும் காலம் காலமாய் போட்டி போட்டுக்கொன்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மகளாய், காதலியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய், பின் வயது முதிரும்போது பாட்டியாய்-இப்படி பல நிலைகளை ஒவ்வொன்றாகக் கடக்கும்போதும் அவள் தன்னிலை மறந்து மற்றவர்களை உள்ளன்புடன் பேணும்போது அவள் என்றுமே சிறப்படைகிறாள். அவளின் ஒவ்வொரு நிலையையும் கவிஞர்கள் எப்படி வர்ணித்திருக்கிறர்கள் என்று பார்க்கலாம்.


இந்தப் பாடல்களை நான் பழைய திரைப்படங்களிலிருந்துதான் எடுத்திருக்கிறேன். காரணம், இன்றைக்கு நிறைய பேருக்கு, எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப்பற்றித் தெரியும். ஆனால் அதற்கு முன் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கண்ணதாசனும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் கோலோச்சிய காலங்களைப்பற்றியும் அவர்களின் மறக்க முடியாத பாடல்களைப்பற்றியும் அவ்வளவாகத் தெரியாது. அவர்களும் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மாகாதேவன், பாடகர்கள் சுசீலா, டி.எம்.செளந்தரராஜன், -பிபி.சீனிவாஸ் -இவர்கள் பிரகாசித்த காலத்தைத் திரையுலகின் பொற்காலமென்று சொல்வார்கள். அதனால் அவற்றிலிருந்துதான் இங்கே பாடல்களைக் குறிப்பிடப்போகிறேன்.

ஒரு பெண்ணின் இளம் வயதில் ஆயிரம் கனவுச் சிதறல்கள் பூந்தூறலாய்த்தூவிக்கொண்டிருக்கும். ஒரு வீட்டின் செல்ல மகளாய், வாழ்க்கையின் சுழல்களுக்கு அர்த்தமே தெரியாமல், சிட்டுக்குருவியாய் பாடித்திரிகிற காலம் அது.


சவாலே சமாளி திரைப்படத்தில் அந்த மனநிலையை ஜெயலலிதா அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். சுசீலாவின் தேன் குரலில் அந்தப் பாடல் இதோ!


சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே, உனக்கெது சொந்த வீடு?
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு!


மரத்தில் படரும் கொடியே
உன்னை வளர்த்தவரா இங்கு படர விட்டார்?
மண்ணின் நடக்கும் நதியே!
உன்னைப் படைத்தவரா இங்கு பாதை சொன்னார்?
உங்கள் வழியே உந்தன் உலகு!
இந்த வழிதான் எந்தன் கனவு!


வளரும் தென்னை மரமே
நீ வளர்ந்ததைப்போல் நான் நிமிர்ந்து நிற்பேன்!
வளைந்து நெளியும் நாணல்
நீ வளைவதைப்போல் தலை குனிவதில்லை!
பார்க்கும் கண்கள் பணிய வேண்டும்
பாவை உலகம் மதிக்க வேண்டும்


அவள் ஒருவனிடம் மனதைப்பறி கொடுத்த பின் அவள் உலகம் அப்படியே மாறுகிறது. பார்க்கும் அத்தனையும் அழகாய்த் தெரிகின்றன. கண்கள் கனவுலகில் மிதந்தவாறே, கவிதைகள் பல பாடிக்கொண்டிருக்கும் பெண்ணின் இந்த நிலையைப்பற்றி கண்ணதாசனின் வரிகளில் சுசீலா தன் இனிய குரலில் ‘ மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார்.


ஒரு நாள் யாரோ
என்னப்பாடல் சொல்லித்தந்தாரோ!
கண்ணுக்குள் ராகம், நெஞ்சுக்குள் தாளம் !
என்னென்று சொல்வேன் தோழி?


உள்ளம் விழித்தது மெல்ல! அந்தப்பாடலின் பாதையில் செல்ல!
மெல்லத்திறந்தது கதவு! என்னை வாவென்று சொன்னது உறவு!
நில்லடி என்றது நாணம்! விட்டுச் செல்லடி என்றது ஆசை!


செக்கச்சிவந்தன விழிகள்! கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்!
இமை பிரிந்தது உறக்கம்! நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்!


கால வெள்ளத்தின் சுழல்களுக்கிடையே அவன் அவளைப் பிரியும் நிலை ஏற்படுகிறது. அழகாய் மலர்ந்து சிரித்த உலகம் அவளுக்கு இப்போது கசந்து போகிறது. கண்ணதாசனின் பாடலை 'வாழ்க்கை வாழ்வதற்கே ' என்ற திரைப்படத்தில் சுசீலா அருமையாகப் பாடியிருப்பார்.


அவன் போருக்குப் போனான்- நான் போர்க்களமானேன்
அவன் வேல் கொன்டு சென்றான்- நான் விழிகளை இழந்தேன்

அவன் காவலன் என்றான்- நான் காவலை இழந்தேன்
அவன் பாவலன் என்றான்- நான் பாடலை மறந்தேன்
அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ?
அவன் தோளும் வராதோ? ஒரு தூது சொல்லாதோ?


பிரிவு விலகி அவள் அவனுடன் திருமணத்தில் இணைகிறாள். மனதில் பூத்திருந்த கனவுகள் அத்தனையும் நனவாகி அவளின் இல்லறம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறது. அவன் அவளுக்கு உயிராகிறான். அந்த மன நிலையில் ஒரு மனைவி பாடும் பாடலில் இருக்கக்கூடிய அத்தனை மெல்லிய அன்பு உணர்வுகளை திருமதி..சுசீலா தன் இனிமையான குரலில் ‘கனி முத்து பாப்பா’ என்ற திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.


‘ராதையின் நெஞ்சமே கண்னனுக்குச் சொந்தமே!


ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த கால தேரில் வந்து வாழ்த்து கூறும் தென்றலே!


வாழ்வினில் ஒளி தரும் தீபத்தை ஏற்றுவேன்.
கோவிலைப்போலவே குடும்பத்தைப் போற்றுவேன்.
மாலையிட்ட மன்னனோடு மனம் நிறைந்து வாழுவேன்’


மனம் நிறைந்த தாம்பத்தியத்திற்கு சாட்சியாய் இளங்குருத்தாய் புது மழலையின் வரவு அவர்களின் வாழ்வை வசந்தமாக்குகிறது. தாய்மை அவளைப் புது உலகிற்கு பயணித்துச் செல்கிறது. வழி வழியாய் தொடரும் தாய்மைப் பாசம் அவளையும் பிணைக்கிறது இறுக்கமாக. தான் பெற்ற குழந்தையை அவள் எப்படியெல்லாம் நேசிக்கிறாள்! தன் உயிரையே அமுதாக்கி எத்தனை அன்புடன் அளிக்கிறாள்! எப்படியெல்லாம் அந்தக் குழந்தையை வர்ணிக்கிறாள்! ஒரு குழந்தையை இதை விட அழகாக வர்ணிக்க முடியாது என்பதுபோல் இந்தப் பாடல் இருக்கும். நான் என்றுமே நேசிக்கும் இந்தப் பாட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எம்.ஜி.ஆர், நடிகையர் திலகம் சாவித்திரி இணைந்து நடித்த ‘ மகாதேவி ’ என்ற படத்தில் வருகிறது இந்தப்பாட்டு.


‘ சிங்காரப்புன்னகை கண்ணாரக்கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா?
மங்காத கண்களில் மையிட்டுப்பார்த்தாலே
தங்கமும் வைரமும் எதுக்கும்மா?
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே!
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் எதுக்கம்மா?


தன்மானச் செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்! மழலைச் சொல் தந்தாய்!!
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா!’


காலங்கள் மாறுகின்றன! மனிதர்கள் மாறுகின்றார்கள்! ஆயிரமாயிரம் அனுபவங்கள் அவளை பக்குவமடைய வைக்கின்றன. மூப்பும் நெருங்குகிறது. வாழ்வின் அத்தனை நிலைகளையும் கடந்த நிலையில்-மனதாலும் உடலாலும் சோர்வுற்ற நிலையில் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும் கண்ணதாசன் மிக அழகாக எழுதி திருமதி..சுசீலா தனது தேன் குரலில் அந்த உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருப்பார். ஒரு பெண் குழந்தையைத் தாலாட்டும் அன்னை பாடும் அந்த அருமையான பாடல் இதோ!


‘பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை!
பிறப்பில் ஒரு தூக்கம், இறப்பில் மறு தூக்கம்.
இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கமில்லை.
என்னரிய கண்மணியே, கண்ணுறங்கு, கண்ணுறங்கு!!


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே!
காலமிதைத்தவற விட்டால் தூக்கமில்லை மகளே!


நாலு வயதான பின்பு பள்ளி விளையாடல்!
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத்தமிழ்ப்பாடல்!
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி!
ஈரேழு மொழிகளிலும் போராடச் சொல்லுமடி! தீராத தொல்லையடி!


மாறும் கன்னி மனம் மாறும்! கண்ணன் முகம் தேடும்!
ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது?
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது?
மாலையிட்டக் கணவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது?


ஐயிரண்டு திங்களிலே பிள்ளை பெறும்போதும்
அன்னையென்று வந்த பின்னே கண்ணுறக்கம் ஏது?
கை நடுங்கி கண் மறைத்து காலம் வந்து சேரும்.
காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்!!

Wednesday 2 February 2011

அலைகடலும் வயிற்றுப்பசியும்!

சமீபத்தில் வரைந்த வாட்டர் கலர் ஓவியம் இது. அதிக வண்னங்கள் உபயோகிக்கவில்லை. கறுப்பும் வெள்ளையும்தான் பிரதான வண்ண‌ங்கள். மற்றும் பலவித நீல நிற தீற்றல்கள் அதிகம்.


"அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக்கொடுப்பவர் இங்கே!" என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது!