Friday 30 July 2010

பாலைவன வாழ்க்கை-தொடர்ச்சி

பாலைவன வாழ்க்கை-தொடர்ச்சி

சகோதரர்-பதிவர் திரு. ராம்ஜி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேலும் சில தகவல்களுடன் மறுபடியும் பாலைவன வாழ்க்கை தொடர்கிறது.

இங்கு இத்தனை வருடங்கள் வாழ்கின்ற அனுபவத்தில் ஒன்றை மட்டும் அவசியம் சொல்ல வேண்டும். இங்குள்ள அரேபியர்கள் மிகவும் நல்லவர்கள் என்பதுடன் மற்ற பெண்களை கண்ணியமாயும் மதிக்கத் தெரிந்தவர்கள். நிமிர்ந்த பார்வையில் கண்ணியம் தெரியும். எப்போது சாலையைக் கடந்தாலும் முதலில் காரை நிறுத்தி நாம் கடக்க வழி விடுபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள். மாறுபட்ட மதங்கள் பெரிய பிரச்சினைகளாய் இருந்ததில்லை. இன்னும் பார்க்கப்போனால் துபாயில் இந்தியர்கள் கட்டி வழிபட சிவன் கோவில் ஒன்றையும் கிருஷ்ணன் கோவில் ஒன்றையும் இந்த நாட்டு அரசாங்காம் அனுமதித்துள்ளது. சட்ட திட்டங்களை ஒழுங்காக அனுசரித்து நடந்தால் எந்தக் கவலைகளுமின்றி இங்கே வசிக்கலாம்.


வியாபாரத்தைப்பொறுத்தவரை முன்னைவிட தற்போது சட்ட திட்டங்கள் சரியான முறையில் வரையறுக்கப்பட்டு கடுமையாகவும் அனுசரிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கில் புழங்கும் வியாபாரங்களைத்தவிர்த்து, மற்ற வியாபாரங்களில் நிச்சயம் ஒரு அரேபியர் ஸ்பான்ஸராக இருக்க வேண்டும். அவருக்கு அவர் கேட்கும் தொகையை வருடந்தோறும் ஸ்பான்ஸர்ஷிப் பணமாகத் தரவேண்டும். இதைத்தவிர அவர் பெயரைக்கூட்டாக வைத்தோ [இதற்கென தனியாக பங்கோ பணமோ தரவேண்டியதில்லை] அல்லது அவர் இல்லாமல் தனியான உரிமையாளராகவோ வியாபாரம் செய்யலாம்.

வியாபாரம் செய்யும் கட்டிடத்தின் வாடகையை 4 காசோலைகளாக ஒரு வருடத்திற்குக் கொடுத்துக் கையெழுத்திட்டால்தான் கட்டிடம் நம் கைக்கு வரும். இதோடு போகாது. கட்டிடத்திற்கான செக்யூரிட்டி பணம் ஐந்து இலக்கத்தில் இருக்கும். அவற்றையும் கொடுக்க வேண்டும். பெரிய இடமாக இருந்தால் வாடகை பேசி முடிப்பவரிடம் கமிஷன் தொகையையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஹோட்டல் உரிமையாளர் வாடகையாக இன்றைக்கு நம் பணத்துக்கு 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை ஒரு வருடத்திற்குக் கொடுக்க வேண்டியுள்ளது. இது வாடகை மட்டுமே. அதன் பிறகு இங்கு எக்னாமிக்ஸ் அலுவலகம், லேபர் அலுவலகம் என்று நம் கட்டிடத்தை முறைப்படி ரெஜிஸ்டர் செய்வதற்கும் பெயர் கொடுத்து பதிவு செய்வதற்கும் லைசென்ஸ் வாங்கவும் என்று நிறைய செலவழியும். பெயர் நம் இஷ்டப்படி வைத்து விட முடியாது. ஐந்து பெயர்கள் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அவற்றில் எந்தப் பெயர் அவர்களுடைய புத்தகத்தில் சரியான அர்த்தத்துடன் கிடைக்கிறதோ அதுதான் நமக்குக் கிடைக்கும். ஒரு ஹோட்டல் என்றால் இவ்வளவு சதுர அடியில் ஹால் இருக்க வேண்டும், இத்தனை சதுர அடியில்தான் சமையலறை இருக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. அதைப் படம் வரைந்து முனிசிபாலிடி இன்ஸ்பெக்டர் ஸ்டாம்ப் அடித்து நம்மிடம் தருவார். இவற்றையெல்லாம் வாங்கி மின்சாரம், தண்ணீர் என்று ஐந்து இலக்கத்தில் கட்டணம் கட்டி அதன் பிறகே வேலைகளைத் தொடங்க வேண்டும்.

இவ்வளவு செலவு செய்து, உணவுப்பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளித்துத்தான் ஒரு ஹோட்டலின் உரிமையாளர் வாழ்க்கையை, வியாபாரத்தை ஓட்ட வேண்டும். எல்லா வியாபாரத்திற்கும் ஏறக்குறைய இதே மாதிரி சட்ட திட்டங்கள்தான்.

சகோதரர் சொன்னதுபோல உரிமையாளர் தரப்பிலும் சில தவறுகள் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. சென்ற வாரம்கூட, இங்கே வியாபாரம் செய்த இரு தமிழர்கள் மோசடிகளால் கைதாகி தற்சமயம் சிறைக்குள் தள்ளப்பட்டதை தமிழ்த்தொலைக்காட்சிகூட ஒளிபரப்பியது. எங்கள் இல்லத்தில் வாரம் ஒரு முறை வந்து வீட்டை சுத்தம் செய்து செல்பவர் ஒரு தமிழர்தான். பகுதி நேர வேலைகளாய் இப்படி செய்கிறர். காலை முதல் மாலை வரை ஒரு க்ளீனிங் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த 3 மாதங்களாக அவருக்கும் மற்றவர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. சென்ற மாதம் அந்தக் கம்பெனி உரிமையாளர்கள் திடீரென கம்பெனியை மூடி விட்டு திருட்டுத்தனமாக இந்தியா கிளம்ப முயற்சிக்க ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி தினம் தினம் நிறைய நடக்கின்றன. வேலை தேடும்போது அந்தந்த கம்பெனிகள் எப்படிப்பட்டவை என்பதை நன்கு விசாரித்து-யாராவது இங்குள்ளவர்களிடம் கேட்டுத்தெரிந்து வருவதுதான் நல்லது.

அதேபோல ஊழியர்கள் தரப்பிலும் நிறைய ஒழுங்கீனங்கள் நடக்கத்தான் செய்கின்றன. பணத்தையும் பொருள்களையும் திருடுவது, இன்னும் பெரிய குற்றங்கள் செய்து சிறைக்குச் செல்வது-இப்படி இவர்கள் தவறுகளும் தொடர்கின்றன.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!

சில மாதங்களுக்கு முன் எங்களின் வாடிக்கையாளர் ஒருத்தர் என் கனவரிடம் வந்து தனக்கு நெஞ்சில் வலி இருப்பதாயும் யாராவது தெரிந்த டாக்டரிடம் சிபாரிசு செய்யுமாறும் சொல்லியிருக்கிறார். என் கணவரும் எங்களின் இதய மருத்துவரிடம் அனுப்பியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அந்த இதய மருத்துவர் ஃபோன் செய்து என் கணவரை நேரில் வரவழைத்து, அந்த வாடிக்கையாளரை சில பரிசோதனைகள் தன்னிடம் செய்ய வசதி இல்லை என்று சொல்லி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாயும் ஆனால் உண்மையில் அவரது இதயம் மிகவும் பழுதுபட்டிருப்பதாயும் எந்த நேரத்திலும் அவருக்கு தீவிர இதயத்தாக்குதல் ஏற்படலாமென்றும் உடனே அவரைச் சேர்ந்தவர்களிடம் இதைக்கூறி நடவடிக்கை எடுக்குமாறும் சொன்னார். என் கணவரும் அவருடைய அறை நண்பர்களை அழைத்து உண்மையைக்கூறி உடனேயே துரித நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியும் அந்த வாடிக்கையாளர் என் கணவரிடம் வந்து மருத்துவமனையில் தனக்கு எதுவும் பிரச்சினையில்லை என்று சொன்னதாகச் சொன்னார். அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. பரிசோதனைகளை எதிர்கொள்ள பயந்து பேசாமல் திரும்பி வந்திருக்கிறார். அடுத்த இரு மாதங்களில் அவர் இறந்து போனார். செய்தி அறிந்ததும் எனக்கும் மனம் கலங்கிப்போனது.

எங்கேயோ பிறந்து, பிழைப்பதற்காக மனைவி குழந்தைகளைப் பிரிந்து வந்து இங்கு வெய்யிலிலும் குளிரிலும் வாழ்க்கை நடத்தி வேலை பார்த்து குருவி சேகரிப்பது போல சேர்த்து வீட்டிற்குப் பணம் அனுப்பத்தெரிந்தவருக்கு ஏன் தன் உடல் நிலையை கவனிக்க முடியாமல் போயிற்று என்று புரியவில்லை.

16 comments:

ஹைஷ்126 said...

அடுத்தவருக்காக வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறதே:)

வாழ்க வளமுடன்

Chitra said...

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!

.....மனதின் துக்கங்களையும் ஏக்கங்களையும் இப்படி அழித்துக் கொள்ளலாம் என்று தவறாக நினைத்து, தங்களையே அழித்துக் கொள்கிறார்களே..... வேதனையான விஷயம்.
கரிசனையுடன், நீங்கள் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் வாசித்து, ஒரு சிலராவது தங்கள் வாழ்க்கையில் மாறுதல்கள் கொண்டு வந்தால் நல்லது, அம்மா.

சாந்தி மாரியப்பன் said...

//இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!//

நிச்சயமாக..

தமிழ் உதயம் said...

மனதை கஷ்டப்படுத்தும் வண்ணமாகவே இருக்கிறது - அயல்நாட்டில் பணிபுரியும் நம் தொழிலாளர் கஷ்டங்கள். என்னோடு பள்ளியில் படித்த நண்பர் அயல்நாட்டில் மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேதத்தை கொண்டு வர கூட குடும்பத்தினர் முயற்சிக்காமல் சண்டை போட்டனர். கடைசிவரை பிரேதத்தை இங்கே கொண்டு வரவே இல்லை.

'பரிவை' சே.குமார் said...

அம்மா,

இங்குள்ள அரபிகள் மிகவும் நல்லவர்கள்தான். ஆனால் நம்மவர்கள்தானே வினையே?

நல்ல பகிர்வு அம்மா.

முடிந்தால் எனது இந்தப் பதிவையும் பார்க்கவும்.


http://vayalaan.blogspot.com/2010/07/blog-post_28.html

Krishnaveni said...

Life is like...survival of the fittest....

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நானும் பல நண்பர்கள் சொல்லி கேட்டு இருக்கிறேன், அரேபிய நாடுகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பெரும்பாலும் நேர்முறை, நேர்மை உண்டு என்று. குறிப்பாக உரிமம் பெறல், உரிமம் புத்துப்பிதல் போன்றவற்றில்.
அதே போல காவலர்களும் கண்ணியமாக பேசுவார்கள், நடப்பார்கள் என்று.

தடையற்ற நீர், மின்சாரம், மாசு இல்லாத சாலைகள்.
என் நண்பர்கள் சொல்வது எல்லாம், அரேபிய நாடுகளில் இந்தியர்கள் வேலைக்கு வருவது என்றால் அரசு வேலை, அரசு பள்ளி, கல்லூரி , மருத்துவம் போன்ற வேலைக்கு வந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்கிறார்கள்.

வடுவூர் குமார் said...

தெரியாத பல வியாபார விஷ்யங்கள் தெரிந்துகொண்டேன்.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!

நிச்சயம் பிறருக்கு உதவுவதில் சுகம் இருக்கத்தான் செய்கிறது. இங்கு பாலைவனத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தைத்தான் பல பேர்கள் ரசிக்கிறார்களே தவிர, அதற்குப்பின்னால் அவை உருகி உருக்குலைந்து போவதை உணர்வதில்லை!

தொடர்ந்து ‘ தமிழிஷ்’ லிங்கில் என் பதிவுகளை இணைத்து வரும் தங்களது அன்பிற்கு என் இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் சித்ரா! என் பதிவுகளும் அக்கறையும் ஒரு சிலருக்காவது உதவினால் அதுவே என் மனதுக்கு பெரிய திருப்தியைத் தரும்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றி அமைதிச்சாரல்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தமிழ் உதயம் அவர்களுக்கு!

இது போன்ற வேதனைகள் இங்கு நிறைய உண்டு. என் சினேகிதியின் கணவர் ஒரு வியாழனன்று இதயத் தாக்குதல் ஏற்பட்டு திடீரென்று இறந்து போனார். இங்கு வெள்ளி அரசு விடுமுறை என்பதால் சனியன்றுதான் முறைப்படி எல்லா விஷயங்களும் முடித்து அன்று மாலைதான் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த இரு நாட்களும் அழுதவாறே இருந்த என் சினேகிதிக்கு எந்த வித ஆறுதலும் சொல்ல முடியவில்லை!

மனோ சாமிநாதன் said...

கசப்பான உண்மைதான் என்றாலும் நம்மவர்களால் இங்கு அதிகம் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத விஷயம். சில விஷயங்களை உடைத்து எழுத முடிவதில்லை!
நீங்களும் இங்கேயுள்ள வேதனைகளை விரிவாக உங்களின் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் குமார்!
தொடர்ந்து எழுதுங்கள்!!

மனோ சாமிநாதன் said...

Yes, Krishnaveni! life is full of survivals only! But the sufferings seem always simple when they are shared with our beloved ones. A lonely life with only sufferings to share finds it very difficult to survive!

NADESAN said...

வாழ்க வளமுடன்
நல்ல பதிவு அம்மா பல இடங்களில் நம்மவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து நிறையபேர் பணத்தை குடித்தே அழிக்கிறார்கள் வெள்ளி கிழமைகளில் சில ரூம் களுக்கு செல்லவே முடியாது இது நான் நேரடியாக கண்ட உண்மை
தங்களை போன்றோர் அறிவுரை எப்பொழுதும் இந்த சமூகத்திற்கு தேவை

வாழ்க வளமுடன்
நெல்லை நடேசன்
துபாய்
அமீரகம்

தூயவனின் அடிமை said...

இந்த மண்ணிலே பிறந்தவருக்கு இந்த நாட்டு கிளைமேட் ஒத்து போகின்றது. நம் நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த கிளைமேட்டோடு பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது.
குடி கும்மாளம் அவர்கள் அவர்களையே அழித்து கொள்ளுதல், இப்படி சிலர்.
குடுபத்திற்காக ஓய்வின்றி உழைத்து, தன் உடலை வருத்தி, தான் படும் கஷ்டத்தை, தன் குடும்பத்திற்கு தெரிவிக்காமல்,
தன் வாழ் நாளை குறைத்து கொள்ளுதல், இப்படி சிலர்.
யாரை குறை சொல்வது, இவர்கள் என்ன அறியா பருவமா?
இவர்களுக்கு நாம் உதவி செய்ய முடியாத சூழ்நிலை. இந்த பதிவு மூலம் ஊரில் உள்ள இவர்கள் உறவு சற்று
சிந்திக்க ஆரம்பித்தல் நிச்சயம் இதற்கு முற்று புள்ளி வைக்கப்படும்.